பின்னர் ஆசிரியர் விளக்கம் செய்தல் காண்க. பிள்ளையாரைப் பிள்ளை என்று கொண்ட அன்பினால் அரசுகள் அஞ்சி இவ்வாறு கூறினும், அவர் ஆண்டகையாரே யாம் என்பது குறிப்பு. என்றார் - அரசு ஆண்டகைக்கு இவ்வாறு எடுத்துக் கூறினார். இது திருமறைக் காட்டில் பெரிய திருக்கோபுரத்துள்ளிருந்து பிள்ளையார் அரசுகளிடத்துப் பாண்டி நாட்டவர் விடுத்த செய்தியினையும், தாம் அங்குச் செல்லத்துணிந்ததையும் சொல்லி விடைபெற்று எழுந்தருளுதற்குத் துணிந்தபோது அரசுகள் சொல்லியது. திருஞான - புராணம் - 615 பார்க்க. இதனை இடம்நோக்கி விரித்துக் கூறும் தகுதிபற்றி ஆண்டு ஆசிரியர் விரித்தருளினார் என்க. திருநாவுக்கரசும் - தீயவினையும் - என்பனவும் பாடங்கள். 287 1553. (வி-ரை.) எல்லையிலா நீறு - அருட்டன்மையால் அளவுபடாத "தெய்வ நீறு" (1551) என்றது காண்க. போற்றும் - பேணி வளர்க்கும். சமணத்தால் நேர்ந்த அளவுகடந்த இடையூறுகளினிடையேயும் பற்று விடாது துதித்து அணிகின்ற என்றலுமாம். சென்று காணும் - இங்கு நின்றபடியே அன்பின் கண்ணினாற் காண்பேனாயினும், அங்குச்சென்று நேரிற்காணும் என்பது குறிப்பு. தீங்குபுரி அமணர் நின்ற நிலைமை அழிவித்து - தீங்கு புரிதலால் அவர் நிலைமை அழிக்கத்தக்கது என்பார் உடம்பொடு புணர்த்தி ஒதினார். நிலைமை அழிவித்து - என்றதனால் சமணர்களை அழித்தல் பிள்ளையார் கருத்தன்று என்பது அறியப்படும். தீங்கு - சைவத்திற்குச் செய்யும் கெடுதி; அழிவித்து - பிறவினை. திருநீற்றின் துணையால் அரசனைக் கொண்டு அழித்து என்க. அழிவித்து - பாரித்து - "பரசமய நிராகரித்து - நீறு ஆக்கும்" படி அவதரித்தா ராதலின் அவ்விரண்டினையுமே செய்து என்றார். பாரித்து - பரவச் செய்து. ஒன்றும் - வேறு ஒரு கருமமும், பிற எல்லாவற்றுக்கும் முன்பாக அவையே முதற் கருமமாய் மேற்கொள்வேன் என்பது. ஆணை உமது - உமது ஆணையின்படி. "ஆனசொன் மாலை யோது மடியார்கள் வானி லரசாள்வ ராணை நமதே" (கோளறு பதிகம் - 11), "நனிபள்ளி யுள்க வினை கெடுத லாணை நமதே" (11) என்ற பிள்ளையார் திருவாக்குக்களும், அவற்றைப் போற்றி, "முதல்வன் றிருவடியை, யத்திக்கும் பத்தரெதி ராணைநம தென்னவலான்" (ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை), "பேரிடர் கெடுதற் காணை நமதெனும் பெருமை வைத்தார்" (திருஞான - புரா - 115) என்பன வாதி திருவாக்குக்களும் காண்க. இவ்வாறு தமது ஆணையினையிட்டு அருளிச் செய்யும் பிள்ளையார், இங்கு "ஆணை உமது" என்ற தென்கருதி? எனின் பிள்ளாய்! நீர் செல்ல இசையேன் யான்" என்று நாயனார் ஆணையிட்டராதலின், அதற்குட்பட்டே நின்று, "உம்மை மறுத்துச் செல்லாது உமது ஆணைவழியே அமைந்து செல்கின்றேன்; யான் செல்வது இத்திருப்பணியைக் கருதியதாதலின் உமது ஆணை துணை நிற்பதாக!" என்றது கருத்து. உடைய பிள்ளையார் - அப்பர் என்ற நிலைமையில் நின்றாராய் "இசையேன்" என்ற நாயனாருக்குத்,தாமும், பிள்ளை என்ற நிலையில் நின்றே விடையருளினார் என்ற குறிப்புப்படப் பிள்ளையார் என்றார். என்றார் - என்றாராய்; முற்றெச்சம். என்றாராகி, மேலும் தொடர்ந்து, வரும் பாட்டிற் கூறும் செய்தி உரைக்கின்றார். என்றார் - என்ன எல்லாம் உரைத்த அவரை என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. காணக்கருத்து - தீமைபுரி - என்பனவும் பாடங்கள். 288 |