பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்481

 

1554. (வி-ரை.) நீர் அங்கு....வருகின்றேன் - இதுவும் ஆளுடைய பிள்ளையார் மேலும் தொடர்ந்து கூறும் கூற்று. போமாதுணிந்து - ஆறு - என்பது ஈறு குறைந்து ஆ - என்று நின்றது. போமா - போமாறு. துணிந்து - பிள்ளையார் துணிந்துகொண்டு என்க. நான் போமாறுபற்றி நீரும் அவ்வாறே துணிந்து என்றுரைப்பினுமமையும்.

நீர் - நீரும். உம்மை தொக்கது. போதப் போதா - போதுதல் வேண்டா.

தீ மாயை - தீய வஞ்சனை. தீயிடுதலும், மற்றும் செய்யும் வஞ்சனைகளும் என்று எண்ணும்மை விரித்தலுமாம். பின் சரித விளைவுக் குறிப்பு.

யானே போய் - நீர் உடன் வருதலின்றி நானே என ஏகாரம் பிரிநிலை.

தீ மாயையினைச் சிதைத்து - தீமையை அழித்து. முன்னர் "நிலைமை அழிவித்து " என்றதுபோலவே, ஈண்டு அமணரைச் சிதைத்து என்னாது, தீமானையினைச் சிதைத்து என்ற அதனாலும், பிள்ளையார் கருதியது வஞ்சத் தீமைகளைப் போக்குதலே யன்றி அமணர்களை அழித்தல் அன்று என்பது விளங்கும்.

சிதைத்து வருகின்றேன் - சிதைத்த பின்னர் மீண்டு இந்நாட்டுக்கு வந்து உம்மைக் காண்பேன் என்ற குறிப்பும், விடைபெற்றுக் கொள்ளும் குறிப்பும் பட நின்றது.

யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் - என்ன ஆமாறெல்லாம் - திருப்புகலூரினின்றும் தொடங்கி இதுவரைப் பல காலம் பல தலங்களிலும் நீண்ட யாத் திரையாகத் தம்முடன் எழுந்தருளி வந்து இருவருமாக உலகமுய்யத் தரிசித்து வந்தனர். அதனையே தொடர்ந்து, இனிப் பாண்டி நாட்டு யாத்திரைக்கு எழுந்தருளும் பிள்ளையார் அரசுகள் தம்முடன் எழுந்தருளுதல் வேண்டா என்றும், அவர்கள் திருமறைக்காட்டில், தங்கிவிடத் தாம்மட்டும் பாண்டி நாட்டுக்குச் சென்று சமணர்களின் தீமையை அகற்றிச் சைவத்தை விளங்க ஆக்கி வருவது துணிபு என்றும் கூறியருளினர். இதன் திருவுளக் கருத்து என்னையோ? எனின்,

(1) பாண்டிமா தேவியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை அங்கு வருமாறு அவரிடமே தூது அனுப்பினார்கள். ஆதலின் அவர்கள் அவர்பால் வேண்டிக் கொண்ட அச்செய்தியை அவரே எழுந்தருளி நிறைவாக்குதல் தகுதி.

(2) பரசமயத் தருக்கொழியச் சைவ முதல்வைதிகமுந் தழைத்தோங்கும்படி திரு அவதாரம்செய்து, பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட்டொழியச் சரா சரங்களெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் அவரது அவதார உள்ளுறையாகிய அச்செயலை அவர் தாமே செய்தல் அமைவுடைத்தாகும்.

(3) ஒரு தீமை வருங்காலத்து அதனை உளப்படுத்தி அமைந்து கொண்டு மாறாக ஒன்றுஞ் செய்யாமனின்றே எதிர்த்து அதன் வலியின்மை காட்டி நீக்குதல் ஒருவழி; எதிர்த்து மேற்சென்று அடர்த்துப் போக்குதல் மற்றொருவழி. அவற்றை முறையே Passive resistance என்றும், Active resistance என்றும் கூறுவர் நவீனர். சமணம் புத்தம் முதலிய பரசமயப் பீடைகள் அந்நாளில் தமிழ் நாட்டுப் பரப்பு முழுமையும் பரவிச் சைவ விளக்கத்தைப் பீடித்து நின்றன என்பது நாட்டு நடப்பாகிய சரிதத்தா லறிகின்றோம். அத்தீமையை இந்த இருவழியாலும் நீக்கி உலகுக்குக் காட்டி அருளுதல் இறைவரது திருவுள்ளம். அமைந்து நின்ற எதிர்ப்பினால் அழிப்பது அரசுகள் விளங்கிற்று. நடுநாட்டில் சமணர் செய்த "வெந்தபொடி - விடம் - வேழம் - வேலை" என்ற தீய மிறைகளுக்கெல்லாம் உடன்பட்டு நின்றும், சோழநாட்டில் இனி நிகழ இருக்கும் பழையாறை வடதளி