வரலாற்றில் உண்ணாவிரதங் கிடந்தும், பரசமயங்களின் வலியின்மை காட்டிச் சைவத்தை ஆக்கியருளியது, அருந்தவத்தோர் நெறிவாழ அவதரித்த நாயனாரது சரித உள்ளுறை. பிள்ளையார் சரிதத்தினுள், பாண்டி நாட்டில் நிகழும் சமணவாதத்தாலும், தெளிச்சேரியில் நிகழும் பௌத்த சமய வாதத்தினாலும், தொண்டைநாட்டில் திருமயிலையில் நிகழும் அங்கம்பூம்பாவையாக்கிய அற்புத வரலாற்றினாலும், சோழநாட்டில் தண்டியடிகள் நாயனார், நமிநந்தியடிகணாயனார் சரித வரலாறுகளினாலும் எதிர்த்தடர்த்துப் பரசமயப் பீடைகளை ஒழித்துச் சைவத் திறத்தை விளங்க வைத்தல் இறைவரது திருவுள்ளம். (4) நாயனாரும் உடன்சென்றருளின் பாண்டி நாட்டில் சமணர் செய்த ஒரு தீமையினைச் சிதைத்தற்குச் சைவ சமயத்தின் இரண்டு ஆசாரியன்மார்கள் எழுந்தருளிச் செயல் செய்ய வேண்டுவதாயிற்று என்ன வேண்டிவரும். அஃது அவர் பெருமைக்கு இழுக்காகும். (5) இரண்டு பெருமக்களும் ஒருங்கே எழுந்தருளியிருப்பின் அங்குச் சமணத்தீங்கை ஒழிக்கும் செயல் இன்னாரால் நிகழ்ந்த தென்றறிந்து பின்பற்றி உலகம் உய்யாது மயங்கவரும். (6) சமணர்களது மாய வஞ்சனைகளையும் தீமைகளையும்பற்றிக் கூறிப், பிள்ளையாரை அங்குச் செல்லலாகாது என்று மறுத்த நாயனார், "தீயாரைக் காண்பதுவும் தீதே" என்ற நியதிப்படி அத்தீயார் உள்ள இடத்துத் தாம் அணுகாது ஒதுங்கி யிருத்தலையே விரும்புவர் என்பது. (7) அவ்வாறு அணுகாது ஒதுங்க விரும்பினும் பிள்ளையார் செல்லும்போது அவர்க்காக உடன்வர, நாயனார் துணிதல் கூடுமாதலின், அதனை விலக்குதலும் பிள்ளையார் திருவுள்ளக் கருத்தாகும். இவ்வாறுள்ள பலவும் இங்குக் கருதவைத்து ஆமாறெல்லாம் உரைத்தவரை என்றார். உரைத்தவரை - உரைத்தாராகிய பிள்ளையாரை. வினைப் பெயர். உடைய பிள்ளையார் "ஆணையும் தென்றாராகி"ச் "சிதைத்து வருகின்றேன்" என்ன ஆமாறெல்லாம் உரைத்தாராகிய அவரை என்க. இப்பாட்டுக்கு இவ்வாறன்றிப் "போமா துணிந்து......வருகின்றேன்" என்பதனை அரசுகளின் திருவாக்காகக் கொண்டும், என்று உரைத்தும், (இணங்காது செல்லத் துணிந்த) அவரை மறுக்க மாட்டாது என்று பிரித்துக் கூட்டியும் உரை கொண்டனர் முன் உரையாசிரியர்கள். அஃது உரையன் றென்பது "திருப்பதிகங் கேட்டதற்பின்றிருந்து நாவுக், கரசுமதற் குடன்பாடு செய்து தாமு மவர் முன்னே யெழுந்தருள வமைந்த போது, புரமெரித்தார் திருமகனா "ரப்ப! ரிந்தப் புனனாட்டி லெழுந்தருளி யிருப்பீ ரென்று, கரகமலங் குவித்திறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின் காவலருந் தொழுதரிதாங் கருத்தி னேர்ந்தார்" (திருஞான - புரா - 617) என்ற திருப்பாட்டாலறிக. அதனோடு இயைபுபடுமாறு இங்குப் பொருள் கொள்ளப்பட்டது. இவ்வொரு நிகழ்ச்சியில் அரசுகள் சரிதத்துக்கு வேண்டிய அளவு இங்குத் தொகுத்தும், பிள்ளையார் சரிதத்துப் பேசத் தக்கனவற்றை அங்கு விரித்தும் கூறுவது ஆசிரியரது தெய்வக் கவிநலம். மறுக்க மாட்டாது - முன்னர் "செல்ல இசையேன் யான்" என மறுத்தார் (1552); பின்னர் ஆணை உமது; திருநீறு துணையாகச் சமணநிலை அழிவித்துச் சைவ நெறி வளர்த்து வருகின்றேன் என்று அவர் கோளறு பதிகம் அருளியது கேட்டுத் தாமும் அதற்கு உடன்பட்டு உடனே செல்லுதற் கமைந்தனர்; |