பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்483

 

அதற்குப் பிள்ளையார் மறுத்துத், தம்மட்டில் சென்றுவர, நாயனார் இங்கு இருக்க, என்று அருளியது கேட்டுமறுக்கமாட்டாத மன நிலையுடன் பிரிவாற்றாது அருமையால் கருத்துடன் ஒருவாறு நேர்ந்தருளினர் என்ற இக்குறிப்பெல்லாம் பெற மறுக்க மாட்டாது அரசு இருப்ப என்றார்.

அரசு இருப்ப - பிள்ளையாரை விடுத்துத் தாம் தனித்திருப்ப; இருந்தாராக.

ஆதரவால் - 1553-ல் சொல்லிய செயல் நிறைவேற்றும் அன்பு காரணமாக.

தமிழ் நாடு - பாண்டிநாடு. ஏனைத் தொண்டை நாடு, நடு நாடு, சோழ நாடு, கொங்கு நாடு முதலியனவும் தமிழ் வழங்கு நாடுகளேயாயினும் சிறப்புப்பற்றிக் காரண இடுகுறியாகப் பாண்டி நாடு தமிழ்நாடு என்று வழங்கப்படும். முழுமுதற் கடவுளாகிய சிவபெரமானே தலைவராக இருந்து சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தமையாலும், தமிழ் முனிவர் என்னும் அகத்தியர் இன்றும் நிலைபெறத் தங்கும் பொதிகையை உடைமையாலும், பிறவாற்றாலும், இவ்வாறு வழங்குதல் மரபாயிற்று. மூர்த்திநாயனார் புராணம் (968 - 974) பார்க்க.

ஞானத்தலைவனார் - ஆளுடைய பிள்ளையார். ஞானத்தலைவனாராதலின் அவ்வாறு துணிந்து போயினார் என்பது கருத்து. சிவஞானம் எல்லாம் செய்யவல்லது என்றதும் குறிப்பு. "நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லர்" (திருஞான . புரா - 807).

போகப் போதா - என்பதும் பாடம்.

289

1555.

வேணு புரக்கொ னெழுந்தருள விடைகொண் டிருந்த வாகீசர்
பூணு மன்பான் மறைக்காட்டிற் புனிதர் தம்மைப் போற்றிசைத்துப்
பேணி யிருந்தங் குறையுநாட் பெயர்வார், வீழி மிழலையமர்
தாணு வின்றன் செய்யகழல் மீண்டுஞ் சார நினைக்கின்றார்,

290

1556.

 சோலை மறைக்காட் டமர்ந்தருளும் சோதி யருள்பெற் றகன்றுபோய்
"வேலை விடமுண் டவர்வீழி மிழலை மீண்டுஞ் செல்வ"னென
 ஞால நிகழ்ந்த நாகைக்கா ரோணம் பிறவும் தாம்பணிந்து
 சாலு மொழிவண் டமிழ்பாடித் தலைவர் மிழலை வந்தடைந்தார்.

1555. (இ-ள்.) வேணுபுரக்கோன்.....வாகீசர் - சீகாழித் தலைவராகிய பிள்ளையார் அவ்வாறு பாண்டிய நாட்டில் எழுந்தருளவே, அவர்பால் விடைபெற்றுக் கொண்டு அங்கு எழுந்தருளியிருந்த திருநாவுக்கரசு நாயனார்; பூணும் அன்பால்.....உறையும் நாள் - மேற்கொண்ட பேரன்பினாலே திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் பெருமானைப் போற்றித் துதிசெய்துகொண்டு திருப்பணி செய்து அங்குத் தங்கியிருந்த காலத்தில்; பெயர்வார் - அங்கு நின்றும் புறப்பட்டுச் செல்வாராகி; வீழிமிழலை.....நினைக்கின்றார் - திருவீழிமிழலையில் எழுந்தருளிய சிவபெருமானுடைய சிவந்த திருப்பாதங்களை மீளவும் சார்ந்து பணிவதற்கு நினைக்கின்றாராய்,

290

1556. (இ-ள்.) சோலை....போய் - சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் விரும்பி எழுந்தருளும் சோதியாகிய பெருமானது திருவருளைப்பெற்று அங்கு நின்றும் நீங்கிப்போய்; வேலை.....செல்வன்" என - கடலில் எழுந்த விடத்தை யுண்டருளிய சிவபெருமானது திருவீழிமிழலையை மீண்டும் சென்று சேர்வேன் என்று உட்கொண்டு; ஞாலம்...தமிழ்பாடி - உலகத்தில் விளங்கிய திருநாகைக் காரோணத்தையும், அது முதலாகிய பிற பதிகளையும் பணிந்து சால்புடைத்தாகிய மொழி வண்மையையுடைய திருப்பதிகங்களைப் பாடியருளி; தலைவர் வீழிமிழலையை வந்து அடைந்தார். தலைவரது திருவீழிமிழலையை வந்து அடைந்தனர்.

291