| கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல் எல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே. |
4 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- மாமறைக்காடனார், தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரமானார்; துதிக்கலாம் சோதி; மந்திரமானார்; மக்களுக்கு இவ்வுடலைப் பண்ணிக் கொடுத்து அதனுள் மால் கொடுத்து ஆவி வைத்தார்; அவ்வாறு தாம் கொடுத்த காயன நாடு கண்டு அங்கு அதனுளுள்ளார்; அதனுள் நின்று உயிர்க்குயிராகிக் கண்ணின் சோதியாய் நின்று காட்டுகின்றார்; அவ்வாறு காட்ட, உண்மை கண்டு உயிர்கள் தம்மை அடைய அறுவகைச் சமயம் வைத்தார்;்கீதம் கோட்டார்; அடிபரவுவார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார்; மறுமையும் இம்மையாவார்; பிறப்பறுத்துய்ய வேண்டில் நாயன நாடறுக்கும் பத்தர்கள்!, வினைகளால் நலிவுண்ணாது பணியுடையத் தொழில்கள் பூண்டு பணிய வம்மின்; வைகலும் வணங்குமின்கள்: மங்கையைப் பாகம் வைத்த வவர் மாசு தீர்ப்பர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சுந்தரம் - சுந்தரமுடையவர். - (2) தேயன நாடர் - பேரொளியாகிய பிழம்பு. தேசு - தேயு என நின்றது. பாயன நாடு - பரந்த பிறவியாகிய கட்டு; பரந்த உலக வாழ்வை வெறுக்கும் என்றலுமாம்; காயன நாடு - உடலாகிய கோயில். "காயமே கோயிலாக" (நேரிசை); மாயன நாடர் - காயத்தைக் கோயிலாக் கொண்டுள்ளாரேனும், அதனுள் தோய்வுறாது தாம் சுத்த மாயா புவனத்திலுள்ளார்; மாயையிற் றோன்றிய உலகங்கட்கெல்லாம் நிமித்த காரணர் என்றலுமாம். - (3) அறுமை - அழியுங் தம்மை; ஆமென - நிலையுள்ளதென்று; நன்மையுடையதென்று. வெறுமை - வீண். சிறுமதி - பிறை. மறுமையும் இம்மையும் ஆவார் - இம்மையிலும் மறுமையிலும் உடனின்று வினைபோக்கி வீடளிக்குந் துணையாவார். - கால்கொடுத்து.....பண்ணி - உடல்களைத் தருவதனை ஒரு வீடுகட்டுதல்போல உருவகம் பண்ணினார். மால் - திரோதானசத்தியாகிய மறைப்பு. பாசநீக்கத்தின் பொருட்டு வினைகளை உயிர்கள் அனுபவித்துக் கழிக்கவேண்டி இறைவன் செய்யும் மறைப்பும் அருளேயாகும் என்பது ஞானசாத்திரம். ஆவி வைத்தல் - உடலுக்குள் உயிரை நிறுத்தல். (இத்திருப்பாட்டு மிக அரிய கருத்துக்கள்கொண்டது. யாவரும் பயிலத்தக்கது). - (5) கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற. "கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்" (தாண் - ஆவடுதுறை). கண்ணினுள் நின்று உயிர் காண, உயிர்க்குள் நின்று காட்டுகின்றவர். - (6) அறுவகைச்சமயம் வைத்தார் - உயிர்களின் பக்குவபேதம் நோக்கிப் படிப்படியாய்க் கண்டு ஈடேறப் பல சமயங்களையும் வைத்தார். "ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந் தகையன" (இன்னம்பர் - திருவிருத்). - (7) ஏதர் - மூலகாரணர். "ஏதனை யேதமிலா விமையோர் தொழும் வேதனை" (தேவா). - (8) சினத்தினுட் சினமாய் நின்று - அவ்வசுரர் கொண்ட சினத்தினுள் விரவி நின்று. - (9) தேசன் - ஒளியுரு வானவன்; வாசனை செய்து நின்று - அகத்தும் புறத்தும் செய்யும் பூசையில் இறைவரை நிறுவி வசிக்கச்செய்து. வாசனை - வசிக்கச் செய்தல். வாசித்தல் என்று கொள்வதுமாம். வாசனை - மணம் என்று கொண்டு புகைகாட்டி வாசனை செய்து என்றலுமொன்று. இப்பொருட்கு இனம்பற்றி விளக்கு, மஞ்சனம் முதலியனவும் உடன் கொள்க. - (10) பத்தர்கள் - பத்தர்களே! விளி. பற்றினாலே உய்யலாம் என்று வினைமுற்று வருவிக்க. பணிவுடைத் தொழில்கள் சரியை முதலாயின. |