பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்487

 

வெள்ளி மிளிர்பிறைமேற் சூடி கண்டாய்
         வெண்ணீற்றான் கண்டாய் நஞ்செந்தின்மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
         மறைக்காட் டுறையு மணாளன் றானே.

4

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- மறைக்காட் டுறையும் மணாளன் றானே, தூண்டு சுடரனைய சோதி; காண்டற்கரிய கடவுள்; ஆயினும் கருதுவார்க்கு ஆற்ற எளியான்; வேண்டுவார் வேண்டுவதே ஈவான்; மெய்கிளரும் ஞானவிளக்கு; மெய்யடியா ருள்ளத்து வித்து; நம் செந்தின் மேய வள்ளி மணாளற்குத் தாதை; ஏரி நிறைந்தனைய செல்வன்; ஆரியன்; தமிழன் மம்மரறுக்கு மருந்து; மூலநோய் தீர்க்கும் முதல்வன்; முத்தமிழ நான்மறையு மானாள்; என்றிவை முதலிய தன்மைகளா அறியப்படுபவன்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) தூண்டு சுடரனைய சோதி. "தூண்டா விளக்கன்ன சோதிமுன்" (1448) என்றவிடத் துரைத்தவை பார்க்க. சூளாமணி - முடிமணி. காண்டற்கு அரிய - ஏனைய மக்களால் அறிதற் கரியவன்; (ஆனால்) கருதுவார்க்கு எளிமையாய் அருள் புரிபவர். "வேண்டுவார் வேண்டுவதே" - தாம் திறக்கவும் பிள்ளையார் அடைக்கவும் வேண்டிய குறிப்பு. ஆற்ற - மிகவும்; வேண்டுவார் - தம்மை அடைந்தோர் - அடைய விரும்புவார். மாண்ட - மாண்புடைய. - (2) ஞான விளக்கு - ஞானமாகிய விளக்கு. ஞானத்தைக் காட்டும் விளக்கு என்றலுமாம். மெய் கிளரும் - மெய் வெளிப்படும். வித்து - முளைத்து எழுந்து சிவஞானமாகிய பலன் தருவதனால் வித்தென்றார். - (3) சிலந்திக்கு அருள் செய்தது - "திருவானைக் காயிலோர் சிலந்திக் கந்நாட் கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார்" (தாண்). சீகாளத்தி வரலாறும் ஆம். நிரூபி - உருவமில்லாதவர்; ரூபி - உருவமுள்ளவர். சலம் துக்க - கங்கையைக் கொண்ட. தாமரையான் - பிரமன். - (4) நம் செந்தில் மேய வள்ளி மாணாளற்குத் தாதை - நம் என்றதனைச் செந்தில் - வள்ளி மணாளன் - தாதை என்பவற்றோடு தனித்தனி கூட்டி உரைத்துக்கொள்க. வள்ளி - மணாளன் - "ஒருமுகம், குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகை யமர்ந் தன்றே" (முருகு). - (5) ஏரி நிறைந்தனைய செல்வன் - செல்வம் போல்பவனைச் செல்வன் என்றது ஆகுபெயர். பல்லாற்றாலும் நிறைவாம் தன்மை - பல்லுயிர்க்கும் உதவுதல் - தானாகச் சென்று உதவுதல் முதலியவாற்றால் ஏரிக்கு உவமித்தார். வினைபற்றி வந்த உவமை. ஆரியன் - தமிழன் - "ஆரியமுந் தமிழும் உடனே சொல்லிக், காரிகை யார்க்குக் கருணை செய்தானே" (திருமூலர்). வடமொழி தென்மொழி என்பது பற்றி இற்றைநாள் எழும் பூசல்கள் பெருளற்றன என்பது இதன் றுணிபு. - (6) கோடியான் - குழகன் - கோடி - தலமும், குழகன் - சுவாமி பெயருமாம். கோடிக்குழகர் என்பது. - (7) ஆலை - சாலை. பரவை மேனி - கடல் வண்ணமுடைய. பரவை - நிறத்துக்கு ஆகுபெயர். - (8) மம்மர் - துக்கம்; மயக்கம் என்றலுமாம். - (9) மூல நோய் - நோய்கட்கெல்லாம் மூலமாகிய ஆணவமலம். முத்தமிழும் நான்மறையும் - தமிழ்களும் வடமொழி மறைகளும். பால விருத்தனுமானான் - விருத்த குமார பாலரான திருவிளையாடல் குறித்ததுபோலும் என்பர். எல்லாப் பருவமும் தானே சார்வானான் என்றல் பொருந்தும். மாலை சேர் - மாலை போன்ற. - (10) பேரும் இராவண (அழுபவன்)னென்ற பெயர். "இராவணனென் றீந்த நாமதத்துவன்" (தேவா - தாண்). மயர் உறு வல்வினை நோய் - மயக்கத்தால் வரும் பிறவிநோய். "மருளானா மாணாப் பிறப்பு" (குறள்).

தலவிசேடம் :- திருமறைக்காடு - வேதங்கள் பூசித்ததலம். அக்காரணத்தால் வேதாரணியம் என்று பெரும்பான்மையாக வழங்கப்படுவது. மாவலி முன்பிறப்