பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்491

 

வீரக் கன்னியும், நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்" (திருவிடை - மும் - கோவை - 30) என்ற பட்டினத்து அடிகள் திருவாக்குக் காண்க. - (9) செருவன் - போர் வீரன். - (10) தழி - தழுவுதலையுடையது. இகரம் வினை முதற்பொருள் விகுதி.

IV திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

பாரார் பரவும் பழனத் தானைப் பருப்பதத் தானைப்பைஞ் ஞீலி யானைச்
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத் திகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் றன்னைப் பிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக்
காரார் கடல்புடைசூ ழந்த ணாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பருப்பதம், பைஞ்ஞீலி, முதலிய பல தலங்களிலும் வீற்றிருப்பவரும், பேராயிர முடைய பெம்மான், பெண்ணான் ஆணான் பேடியான், ஞூனப் பெருங்கடல், பன்மை பேசும் படிறன், தொல் நரகம் நன்னெறியால் துர்ப்பான் முதலியனவாகிய பெருமைகளால் அறியப்படுபவரும் ஆகிய இறைவரைக் கடல் நாகைக் காரோணத்தில் எஞ்ஞான்றும் காணலாம்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பருப்பதம் - சீபர்வதம். - (2) வீரட்டத்தானை என்பது வீரட்டானை என நின்றது; பெண் - ஆண் - பேடு - உயிர் வருக்கம். - (3) தேன் - வண்டின் சாதி. தேன்போல என்றலுமாம். கறை - நிறம். - (4) ஆச்சீராமம் - திருப்பாச்சிலாச்சிராமம்; சின்னமாம் பன்மலர்கள் - ஊமத்தம், கொக்கிறகு. கொன்றை, தாமரை முதலியவை; புன்னை - நெய்தற் கருப்பொருள் - (5) ஞானப் பெருங்கடல் - உருவகம்; ஞான நிறைவுடையவன். பன்மையே பேசும் படிறன் - நிந்தைத்துதி. பன்மையே பேசுதல் - உயிர்களின் பக்குவபேதம் நோக்கி அவ்வவர்க் கேற்றவாறு உண்மை அருளி அறிவுறத்துதல். - (6) புகார் - காவிரிப்பூம்பட்டினம். ஏகாசம் - உத்தரீயம் - போர்வை. கலங்கல் - திரைகள் தரையில் மோதுதலாற் கலங்கிய புனலுடையது கடற்கரை. - (9) தொல் நரகம் நல் நெறியால் தூர்ப்பான் - நன்னெறி காட்டி யருளுதலால் உயிர்கள் நரகத்திற் போகாமற் செய்வான். - (10) இப்பாட்டு ஐயப்பாடு. குறிப்பு :- இப்பதிகத்துப் பாட்டுத் தோறும் வெவ்வேறு பல தலங்களைக் கூறுகின்றார். 10-வது பாட்டில் அவ்வாறில்லை. அதனுள், "அவன் பற்றே பற்றாகக் காணினல்லால்" என்பது பொருந்துமாறில்லை.

தல விசேடம் :- நாகைக்காரோணம் - இது நாகப்பட்டினம் என வழங்கப்படும். ஆதிசேடன் பூசித்தமையால் நாகை எனவும், புண்டரீக மகா முனிவரை இறைவர் தமது திருமேனியினுள் ஏற்றுக்கொண் டருளியமையால் காயாரோகணம் (காயம் - உடம்பு; ஆரோகணம் - ஏற்றுக்கொள்ளுதல்) எனவும் பெற்று, நாகை காயாரோகணம் எனப்பட்டு, அது நாகைக்காரோணம் எனமருவி வழங்குவதாயிற்று. மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. முசுகுந்தர் கொண்டுவந்து தாபித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. ஆளுடைய நம்பிகள் திருப்பதிகம் பாடிப் பொன் முதலியவை பெற்றனர். பரதவர் குலத்தில் அதிபத்த நாயனார் இங்கு அவதரித்து அன்பு பூண்டு நாடோறும் வலைவீசிப் படுத்த மீன்களில் முதலில் படும் மீனைச் சிவனுக் கெனக் கடலில் விட்டுவரப், பலநாளும் ஒரு மீனே பட விட்டுவந்து, ஒருநாள் நவமணிகளால் உறுப்பமைந்த ஒரு அரிய மீன்பட, அதனையும் சிவனுக்கென விடுக்க, இறைவர் வெளிப்பட்டு ஆட்கொண்டருளினர். அவர்தம் புராணம் பார்க்க. "பொன்னிநா டெனுங் கற்பகப் பூங்கொடி மலர்போ, னன்மை சான்றது நாகபட் டினத்திரு நகரம்" என்று இதன் சிறப்பை ஆசிரியர்