1561. (இ-ள்.) "நான் வண்ணம் கண்டு உம்மை வணங்கியன்றிப் போகேன்" என்று - "நான் உமது திருமேனியைக் கண்ணாற் கண்டு வணங்கினாலன்றி இங்கு மேற்செல்லமாட்டேன்" என்று இறைவரிடம் முறையிட்டு உறுதி கொண்டு; எண்ணம் முடிக்கும் வாகீசர் - தம் எண்ணத்தை எண்ணியபடி முடிக்கும் திருநாவுக்கரசர்; அமுது செய்யாதே இருந்தார் - அமுது செய்யாமல் பட்டினி கிடந்தருளினர்; அண்ணலாரும் அது உணர்ந்து - சிவபெருமானும் அதனைத் திருவுள்ளத்துக்கொண்டு; அங்கு அரசு தம்மைப் பணிவதற்கு - அத்தலத்தே திருநாவுக்கரசுகள் தம்மைக் கும்பிடுவதற்காக; மன்னனுக்குக் கனவில் திண்ணமாக அருளிச்செய்கின்றார் - அரசனுக்குக் கனவில் தோன்றி உறுதியாக அருளிச் செய்கின்றாய், 296 1562. (இ-ள்.) "அறிவில் அமணர்...இருந்தோம்" என்று - "அறிவில்லாத அமணர்கள் நம்முடைய கோயிலை மறைக்க நாம் உள் இருந்தோம்" என்று கூறி; அங்கு அடையாளக்குறிகள் அருளிச் செய்தருளி - அவ்விடத்தைக் காணக் கூடிய அடையாளக் குறிகளையும் அருளிச்செய்து; "நம்மை...போக்கு" என்று அருள் புரிய - நம்மைத் திருநாவுக்கரசு கும்பிடுவதற்காக, நன்னெறி யில்லாத அமணர்களை அழித்து அவ்விடத்துநின்றும் நீங்கச் செய்து போக்குவாயாக!" என்று அருள்புரிய; செறிவில்...இறைஞ்சி - துயில் நீங்கி அதனை நனவிலறிவுற்று எழுந்த அவ்வரசனும் செங்கையினைத் தலைமேற் கூப்பி வணங்கி, 297 1563. (இ-ள்.) கண்ட...இயம்பி - தான் கனாவிற் கண்ட வியப்பான காட்சித் திறத்தை மந்திரிகளுக்கு எடுத்துச் சொல்லி; கூடக் கடிது எய்தி - அவர்களுடன் தானும் விரைவாக அவ்விடத்துக்குச் சென்று சேர்ந்து; அண்டர்.....கண்டு - தேவதேவராகிய சிவபெருமான் அருளிச்செய்த அடையாளங்களின் வழியே சிவனுருவினைக் கண்டு; வேந்தன் - அரன்; குண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து - சமணராகிய கீழ் மக்கள் செய்த வஞ்சனையின் பொருட்டு; தொண்டர் தம்மை அடிவணங்கி - அவ்வஞ்சனையை வெளிப்படுத்தருளிய திருத்தொண்டராகிய வாசீசரது திருவடிகளை வணங்கி(ப்பின்); தொக்க அமணர் தூர்அறுத்தான் - கூடிய அமணர்களாகிய தூரை அழித்தானாக; 298 1564. (இ-ள்.) ஆனை இனத்தில் - யானையால் அழிக்கப்பட்ட குறுந்தூறுபோல்; துகைப்புண்ட - அரசனது ஏவலாளர்களால் சாடப்பட்ட; அமண் ஆயிரமும் ஆயிரம் மாய்ந்ததற்பின் - அந்தச் சமண்பள்ளியிற் றங்கிய ஆயிரம் சமண குருமார்களும் ஒழிந்த பின்பு; அரசன் ஈசர்க்கு மேன்மை விமானம் ஆக்கி விளக்கியபின் - அரசன் அந்தச் சினகரத்தை ஈசர்க்குரிய மேன்மையான விமானமாக ஆக்கி உரியபடி விளங்கச் செய்த பின்னர்; ஆன...இறைஞ்ச - சிவாகமுறையில் விதித்த வழிபாடாகிய பூசனைக்கு வேண்டிய நிபந்தங்களையெல்லாம் அமைப்பித்து அரசுகளை வணங்க; ஞான...போற்றுவார் - ஞான அரசுகளாகிய நாயனாரும் புகுந்து வணங்கி இறைவர் திருமுன்பு போற்றுவாராகி, 299 1565. (இ-ள்.) "தலையின்...ஒண்ணுமோ?" என்னும் - "தலைமயிரை யெல்லாம் பறித்து, உண்ணுகின்ற கூட்டத்தாராகிய அமணர்கள் மறைத்தாலும் உண்மைநிலை யில்லாராகிய அவர்கள் தமது சிற்றறிவின் நிலைமையினால் மறைத்து வைத்தல் இயலுமோ?" என்னும் கருத்துடைய; விலையில்....விளம்பி - விலை மதித்தற்கரிய வாய்மையுடைய திருக்குறுந்தொகைகளைக் கட்டளையிட்டருளி; புறம் போந்து - வெளியே வந்து; அங்கு அமர்ந்தே - அங்குத்தங்கிப் பின்னர்; இலைகொள்....தொழ அணைவார் - மூவிலை வடிவாகிய சூலப்படை யேந்திய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பிற தலங்களையும் தொழச் செல்வாராய், 300 |