இது சைவத்தின் சிறப்பு. "அளவில் சமயமும் வகுத்து" என்றபடி சைவம் எல்லாச் சமயங்களையும் படிமுறையில் வைத்து அமைவுபடுத்திக் கொள்வதாதலின் எந்தச் சமயத்தினையும் பூசலிட்டு அழிக்காது. பின்னை இங்கு நாயனாரும், ஆளுடைய பிள்ளையார் திருவாலவாயிலிலும், பிறாண்டும், நிகழ்த்தியவை என்னையோ? எனின், புறச்சமயிகள் சைவத்திற்குக் கேடிழைத்துச் சைவத்திறத்தினின்றுங் கொள்ளைகொண்ட பொருள்களை மீட்டுத் தூய்மை செய்யும் அவ்வளவே என்க. அமணர்களைப் பாற்றும் என்னாது "அமணர் திறம் பாற்றும்" என்ற கருத்துமிது. அதன்மேற் செயல்கள் யாவையும் அரசர்கள் உலகில் நீதிமுறை செய்யும்வகை என்க. மந்தஅமணர் - மந்தம் - அறிவில்லாமை. மறைக்க முடியாத தொன்றை மறைப்போம் என்று கொண்டது "மந்தவுணர்வு". "உண்ணிலையினான் மறைத்தான் மறைக்கொண்ணுமோ" (தேவா). ஒழித்தருளி - அந்த அமணர்களையும் மறக்கருணையினால் தூயராகச் செய்ய வேண்டுமென்ற குறிப்புப்பட அருளி என்றார். உலகுக்கு அருளி என்றலுமாம். பந்தங்கொண்ட - மறைத்த. பாவச்செயலை மேற்கொண்ட என்றதும் குறிப்பு. பணிந்திருப்பார் - எதிர்கால முற்றெச்சம். இருப்பா(ராகி) - என்று இருந்தார் - (1561) என வரும் பாட்டுடன் முடிக்க. இப்போதுள்ள பதிப்புகளில் காணும் பணிந்திருந்தார் என்ற பாடத்தினும், சில ஏட்டுப்பிரதிகளிற் கண்ட இருப்பார் என்ற பாடம் சிறந்ததாகக் காணப்பட்டமையின் மேற்கொள்ளப்பட்டது. மறைத்த வஞ்சம் ஒழித்து - அமணர் மறைத்த வஞ்சனையை அதுகாறும் இறைவர் உடன்பட்டு இருக்கவும், அவ்வாறிருந்தபடியேயும் நாயனார் தமது மனக் கண்ணாற் கண்டு கும்பிட வல்லராயிருப்பவும், மறைத்த வஞ்சத்தை ஒழிக்க வேண்டியது என்னையோ? எனின், உலகர் அறியாராதலின் உலகில் சைவநெறி குன்றாது விளக்கமுறும் பொருட்டும், தாம் தமது முகக்கண் கொண்டு காணும் பொருட்டுமாம் என்பதாம். இதனை வரும்பாட்டானும் உணர்க. 295 1561. (வி-ரை.) "வண்ணம்...போகேன்" என்று - வண்ணம் - அமணர் மறைத்த நிலையினின்று வெளிப்பட்ட வண்ணம். வண்ணம் - "முடிவண்ணம் வானமின் வண்ணம்" (ஆரூர் அரனெறி - இந்தளம்) என்ற நாயனார் திருவாக்கானும், "பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணமேனி" (பொன் - வண் - அந் -1) முதலிய திருவாக்குக்களானும் அறியப்படும் அவரது திருமேனியின் வண்ணம் என்றதும் குறிப்பு. வணங்கியன்றிப் போகேன் - எதிர்மறை முகத்தாற் கூறினார், மிக்க உறுதி குறித்தற்கு. எண்ணம்...அமுது செய்யாதே - கருதிய எண்ணம் முடித்தற்காக, அமுது செய்யாதிருத்தல் பண்டை நாள் முதல் வழிவந்த உரியதோர் வழியாம். இதனால், ஒரு பொருள் வேண்டி உண்ணாவிரதங் கிடத்தல், சிலர் கருதுமாறு இந்நாள் புதிதாய்க் கண்டதொரு வழி யன்றென்பது விளங்கும். குறித்தபொருள் பெறாத போது உண்ணமறுக்கும் குழவிகளின் இயல்பில் இதன் முளை காணப்படும். கடவுளிடம் வரங்கிடப்போர் பட்டினிகிடந்து நோற்கும் விரதங்களும் இக்கருத்தும் பற்றியன. விரதங் கிடப்போரது வருத்தங் காணலாறறாது கருணையாளனாகிய முதல்வன் குறித்த பொருள் கூடச் செய்வன் என்பது இதன் நுட்பம். அண்ணலாரும் அதுவுணர்ந்து என்பது காண்க. உயிர்க்குயிராக உள்ள இறைவர் அவரது செய்கையை உள்ளிருந்து உணர்ந்தனர். "உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி" (ஆரூர் - தாண்). |