பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்499

 

பணிவதற்கு - பணியும் செயலைக் கூடச்செய்தற் பொருட்டு, நான்கனுருபு பொருட்டுப் பொருளில் வந்தது. பணிவதற்கு - அருளிச் செய்கின்றார் என்று கூட்டுக.

அரசு - திருநாவுக்கரசுகள். தம்மை அரசு அங்குப் பணிவதற்கு என்க. அங்கு - அமணர் மறைக்க இருந்த அத்தலத்தில்.

திண்ணமாக - ஐயமும் திரிபுமின்றி உறுதி பெறும்படி. இது கனவுதானே என்று ஐயப்படாதவாறு.

செய்கின்றார் - செய்கின்றாராய்; முற்றெச்சம். செய்கின்றார் - என்று அருளி - அருள்புரிய என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக.

296

1562. (வி-ரை.) அறிவில் அமணர் - உண்மை யறிவில்லாதவர்கள். "மந்த அமணர்" (1560) என்ற விடத்துரைத்தவை பார்க்க. "விரிவிலா அறிவினார்கள்" (தேவா). மறைப்ப இருந்தோம் - மறைத்த அதனையும் நாம் ஏற்று இருந்தோம்; மறைப்பும் நமது நிலையே யாதலின், "பெருகியும் சேணிடை நின்றோயில்லை; தேர்வோர்க்குத் தம்மினு மணியை நீயே; நண்ணியு மிடையொன்றின் மறைந்தோ யல்லை; யிடையிட்டு நின்னை மறைப்பது மில்லை; மறைப்பினு மதுவும், நீயே யாகி நின்றதோர் நிலையே" (கோயினான் - 32) என்ற பட்டினத்துச் சுவாமிகள் திருவாக்கின் கருத்துக் காண்க.

அங்கு அடையாளக் குறிகள் - அவ்விடத்துத் தமது திருவுருவம் வெளிப்படக் காண உள்ள அடையாளங்களும் அடையாளத்தின் வழிக் காணின் மேற் காணப்படும் குறிகளும். "குறிகளும் மடையாளமும் கோயிலும்" (அரசுகள் - தேவா).

அறியச் செய்தருளி - அரசன் உளங் கொள்ளுமாறு மனத்தின் உள்ளே
புலப்படுத்தி.

குடும்பிடுவான் - கும்பிடும்பொருட்டு. அரசு - உண்மையில் அரசு அவரே. "உன்போன்ற ஏனைப்பே ரரசர்கள் யாவரும் அவர் பணித்தவழி நின்று ஏவல் வழி ஆவன செய்யத் தககார். நாமும் தொண்டனாகிய அவன் வழியே நிற்போம்" என்ற குறிப்புப்பட அரசு என்றார்.

"நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு" என்று - இது கனாவில் இறைவர் அரசனுக்கு அரளிய கட்டளை. நெறியில் - தம் நெறியின் வரம்பினுள் அமையாது மேற்சென்ற. அழித்து - நீக்கி - போக்கு - நீக்குதலால் அழித்து என்க. போக்கு - இடையூறு விளைக்காவண்ணம் இந்நாட்டை விட்டு அகலச் செய்க. கும்பிடுவான் - போக்கு என்றது நாவுக்கரசு குடும்பிடும்பொருட்டே இவ்வாறு செய்க. அரசுகள் கண்டு கும்பிடுவதற்காக உண்ணா விரதங் கிடக்காவிடில் அமணரைப் போக்கும்படி இறைவர் அருளியிருக்கமாட்டார் என்பது. "வேறொரு சமயம் செய்தே, எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கேற்றதாகும்" என்றது அரசுகள் திருவாக்கன்றோ?

செறிவில் அறிவுற்று - கனவிற் கண்டது நனவில் வாராது மறந்துபடுவதியல் பாதலின், அவ்வாறு ஆகாது, நனவிலும் நிறைந்த அறிவில் வர.

297

1563. (வி-ரை.) வியப்பு - அறிவில் அமையாத இந்த அதிசயச் செய்தி.

மந்திரிகட்கு இயம்பி - மேற்கொண்டு இனிச் செய்யப் புகுவது அரசன் நீதிவழி முறைசெய்யும் காரியமாதலின் அமைச்சர்களிடம் அரசன் இயம்பினான்.

கூடக் கடிது எய்தி - கூட எய்துதல் - அமைச்சர்கள் செயலால் நீதி கோடிவிடாதபடி காக்க.

கடிது - இறைவரது ஆணையாதலின் விரைந்து சென்றனன்.

வழி - வழியே. கண்டு - குறிகள் இருக்கக்கண்டு.