குறித்து - குறிக்கொண்டு - காரணத்தினால். குலவு...வணங்கி - இறைவர் மன்னனுக்குக் கனவில் அருள, அவன் அதனை அவ்வாறே அறியலுற்று எழுந்தான்; அதன் உண்மையை அடையாளத்தின் வழி சென்று கண்டு கொண்டான்; உண்மை கண்டானாதலின் வணங்கினான் என்க. எவ்வாற்றா லறியினும், உண்மை கண்டு அறிந்த பின்னரே முறை செய்தல் அரச நீதி. தண்டியடிகள் புராண முதலியவை பார்க்க. அரசுகள் "குலவு பெருந்தொண்டர்" என்பதறிந்தானாதலின் கண்டவுடன் அவரை வணங்கி மேலே முறைசெய்தல் நீதி என்பார் அதனை உடம்பொடு புணர்த்தி, வணங்கித் தூறுத்தான் என்று அம்முறையில் வைத்தோதினார். அன்றியும். குடிகள் (இங்கு, அமணர்) செய்த தீங்கு அரசனைச் சாருமாதலால் அதன்பொருட்டு வணங்கினான் என்றலுமாம். திருவாலவாயில் சைவரி ருந்து வாழ் மடத்தில் அமணர் தீ வைத்த போது ஆளுடைய பிள்ளையார் "மன் புரக்குமெய் முறைவழு வெனமனங் கொண்டார்" (திருஞான - புரா - 703), "வெய்ய தீங்கிது வேந்தன்மேற் றெனும் விதி முறையால்" (மேற்படி 704) என்று துணிந்த வரலாறும் இங்கு நினைவு கூர்தற்பாலது. தொக்க அமணர் - அமணர் பள்ளியாகிய வடதளிக் கோயிலில் ஆயிரவர் ஒரு கூட்டமாகக் கூடிய அமண குருமார். தூரறுத்தான் - தூரறுத்தல்போல அழித்துச் சிதைவாக்கினானாக. அறுத்தானாக என்று முற்று எச்சமாக உரைக்கப்பட்டது மேல்வரும் செய்யுள் தொடக்கத்தின் பொருட்டொடர்பு நோக்கி. தூர் - ஒன்றிற் பல கற்றைகளாகக் கிளைப்பது. 298 1564. (வி-ரை.) ஆனை இனத்தின் துகைப்புண்ட - இனத்தின் - இனத்தால் தூர் துகைப்புண்ணல்போல. இனம் - அதனால் துகைப்புண்ணலுக்கு வந்தது ஆகுபெயர். இன் - உவம உருபு. துகைப்புண்ணல் - அழிதல். "ஆனை வெம்போரி ற் குறுந்தூரென" (திருவா - நீத் - விண). இதற்கு இவ்வாறன்றி, அரசன் யானைகளை ஏவி அமணரை அழிக்க, அவ்வாறு ஏவப்பட்ட யானைகளால் அழிக்கப்பட்ட அமணர் என்று உரைத்தனர் முன் உரை ஆசிரி யர்கள். அதன் பொருத்தம் ஆராயத் தக்கது. அமண் ஆயிரம் - அமண குருமார்கள் ஆயிரம்பேர். ஒவ்வோர் பள்ளியில் ஆயிர மாயிரம் பேராகக் கூடுவது அமணர் வழக்கு. "எண்பெருங் குன்றத் தெண்ணாயிரவரும் ஏறினார்கள்" (திருஞான - புரா - 855) என்றது காண்க. வடதளிக்கோயிலை வஞ்சனையால் மறைத்து ஆக்கிய அமண் பள்ளியில் அவ்வாறே ஓராயிரம் அமண குருமார் குழுமினர் என்பதாம். இதனை "வாயி ருந்தமி ழேபடித் தாளுறா, ஆயிரஞ்சம ணும்மழி வாக்கினான்" என்று நாயனார் இத்தலத் தேவாரத்தினுள் உணர்த்தியருளுவது காண்க. மேன்மை - இறைவர் நேரே கனவிற் காட்சி கொடுத்து உண்மை தெருட்டியிடப்பெறும் மேன்மையும், அரசுகளை வணங்கிப் பணிசெய்து ஆசி பெற்றுத் தேவாரத்திற் குறிக்கப்பெறும் தவமேன்மையும். ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின் - அமணர்கள் தம் பொய்கொள் விமானமாக ஆக்கி யிருந்த அதனை, முன்னை நிலையின்படி ஈசரது மெய்யாகிய விமானமாக ஆக்கி, வஞ்சனை மறைப்புக்களை யெல்லாம் போக்கி விளக்கஞ் செய்தபின். விளக்குதல் - அதுவரை மறைக்கப்பட்டு வழிபாடுகள் முட்டுப்பாடுற்ற நிலைக்குள்ள தீர்வு முறைகளைச் செய்தல். |