பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்505

 

கருவெலா மாயவன்" (பிள் - தேவா - தென்குடித்திட்டை - 3). ஓசையாகி வருவான் - நாதமாய் விரிந்து வெளிப்படுபவன். பரம்பைக்குடி - ஊரும், ஆலம் பொழில் கோயிலும் போலும். - (3) உருமூன்று - சிவன் சதாசிவன் மகேசன்; தடத்த வடிவு மூன்று. உணர்வின் கண் ஒன்று - தத்துவ நிலை எண்ணும்போது முதற் கடவுளாகிய ஒருவன். ஓங்கார மெய்ப்பொருள் - பிரணவத்தால் குறிக்கப்படுபவன். கருஈன்ற எம் களவு - பிறவிக்குக் காரணமாகிய உயிர்களது ஆணவ வலிமை. அள்ளூறுதல் - உள்ளிருந்து மிக ஊறி வெளிப்படுதல். திரு - முத்தித்திரு. - (4) வாரம் - அன்பு. - (6) விரிந்தான் - குவிந்தான் - உலகத் தோற்றமும் ஒடுக்கமும். "விரிந்தனை; குவிந்தனை; விழுங்குயி ருமிழ்ந்தனை" (பிள் - தேவா - புறம்பயம - இந்தளம் - 3). பிறப்போடு இறப்பாகி - பிறப்பும் இறப்பும் அருளும் தலைவனாகி. பலவாய்ப் பெருகுதலாலும், இறப்புக்குக் காரணமாய் வருதலாலும் வியன் பிறப்பு என்றார். "தோற்ற முண்டேல் மரண முண்டு" (நம்பி - தேவா) - (7) அழுக்கின் - அழுக்கினின்றும்; புகுவான் - (தன்பாற்) புகும்பொருட்டு; புகுவான் - வானீற்று வினையெச்சம்; அழுக்கு - மலம். சோதித்தல் - தூய்மை செய்தல். "அத்துவா சோதனை", "புறம்புறந் திரிந்த செல்வமே" (திருவா) சொல்லாதான் - அருளாதவன், "வஞ்சன்" (4); செல்லாத நெறி - அருள்பெறாத ஏனையோர் செல்ல மாட்டாச் சிவநெறி. "செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானை." - (9) பொய்யிலான் - பொய்யாது உறுதியாக அருள்பவன்.

தலவிசேடம் :- திருவாலம்பொழில் - காவிரிக்குத் தென்கரை 10-வது தலம். வசுக்கள் பூசித்து வழிபட்ட தலம். மேற்கு நோக்கிய சந்நிதி. சுவாமி - ஆத்மநார்; அம்மை - ஞானாம்பிகை; தீர்த்தம் - காவிரி; மரம் - ஆல்; பதிகம் - 1.

தஞ்சாவூர் நிலையத்தினின்றும் வடக்கே கற்சாலைவழி 6 நாழிகை யளவில் உள்ளது திருக்கண்டியூர் வீரட்டம்; அதினின்றும் மேற்கே மட்சாலைவழி இரண்டு நாழிகையளவில் திருப்பூந்துருத்தியை யடைந்து, அங்கிருந்து மேற்கே ஒரு நாழிகை யளவில் இதனை அடையலாம்.1

திருக்கானூர்

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

திருவி னாதனுஞ் செம்மலர் மேலுறை, யுருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங்,
கருவ னாகி முளைத்தவன். கானூரிம், பரம னாய பரஞ்சுடர் காணமினே.

1

தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம், மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்;
காயத் தேயுளன் கானூர் முளையினை, வாயத் தால்வணங் கீர்வினை மாயுமே.

3

குறியி னின்றுண்டு கூறையி லாச்சமண், நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்;
அறிய லுற்றிரேற் கானூர் முளையவன், செறிவு செய்திட் டிருப்பதென்சிந்தையே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- கானூரிறைவா உலகத்தினுயிர்க்கெலாங் கருவனாகி முளைத்தவர்; சமணைவிட்டு அவர் கழல் பற்றினேன்; அவர் இருப்பது என்சிந்தை; பொத்தலாக்கையாகிய உடலையும், பெண்டிர் மக்கள் முதலிய உயிர்ச்சார்புகளையும் நன்னிதி முதலிய பொருட்சார்புகளையும் பொருளெனக் கண்டு

 1.

இத்தலத்தருகில் இருந்த வைணவதலத்துக் குழுமிய வைணவர்கள் இங்கு வாகீசரது உழவாரப்பணிக் கிடையூறாகத் தமது பரிகலங்களையிட்டு வந்தனர் என்றும், காவிரி பெருகி அவ்வைணவத்தலத்தைப் பெயர்த்து இப்போது சுந்தரப் பெருமாள் கோயில் உள்ள இடத்தில் இட்டது என்றும் ஒரு கர்ண பரம்பரை வழக்கு உண்டு.