பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்515

 

யன்னையையு மத்தனையும் போல வன்பா
         யடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
         செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றே னானே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பன்னிய செந்தமிழ் அறியேன்; பொறியிலேன்; என்னையும் தொடர்ந்து ஆளாக்கொண்டவர் பளிங்கினிழலுட் பதித்தசோதி; என்றன் மனத்திருந்த கருத்து; கார்முகிலாய்ப் பொழிவார் ; பொழிந்த முந்நீர் கரப்பார் என்றிவ்வாறு பலவுமாய் அறியப்படுகின்ற எறும்பியூர் மலைமேல் மாணிக்க நாதரை நான் சென்றடையப் பெற்றேன்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- பன்னிய - இறைவர் முதல்வராயிருந் தருளிய. கவியேன் மாட்டேன் - கவி என்றால் இயற்றவல்ல னல்லன். அடைந்தேனை அன்னையையும் அத்தனையும்போலத் தொடர்ந்து ஆளாக்கொண்ட என்க. அன்பாயடைந்தேனை என்றும். அன்பாய் ஆளாக்கொண்ட என்றும் இருவழியும் கூட்டி உரைக்க நின்றது. அன்னையையும் அத்தனையும்போல என்பதும் அவ்வாறே இருவழியும் கூட்ட நின்றது. தன்திறமும் அறிவித்து - நெறியும் - காட்டி - என்னை ஆளாக்கொண்ட - அறிவித்தல் - தான்தலைவன் - உயிர்கள் அடிமை - உயிர்களைக் கட்டியது பாசம் - என்றவை எல்லாம் அறிவித்தலாம். தன்திறமும் - தலைவனாகிய தனது இயல்பையும். உம்மையினால் ஆன்மா - பாசங்கள் என்றவற்றி னியல்பையும். நெறி காட்டுதல் - உயிர்கள் பாச நீங்கித் தன்னை அடைய வழிகாட்டுதல். ஞானந் தருதல். ஆளாக்குதல் - பயன். மாணிக்கம் - தலத்துச் சுவாமி பெயர். எறும்பியூர் - மலை - ஊரில் உள்ள சிறுமலை. ஊரும் மலையுமாயுள்ளது. -(2) பளிங்கின்...சோதி - "பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே" (திருமந்). பளிங்கு - உயிர்களின் தன்மை. சோதி பதித்தல் - இறைவன் செயல். பளிங்கில் வைத்த சோதி தன்னிறமே காட்டுதல் போல உயிர் பசுத்தன்மை நீங்கிப் பதித்தன்மை பெறச் செய்தல். - (3) மயானம் - ஊழி முடிந்தவிடம். - (4) உமிழும் - "விழுங்குயி ருமிழ்ந்தனை" (பிள் - தேவா - புறம்பயம்). "ஒடுங்கி மலத்துளதாம்" (சிவஞான போதம் - 1). உமிழ்தல் - தன்னிடத் தொடுக்கிய உலகுயிர்களை மீளவரும்படி செய்தல். - (6) பேரெழுத்தொன்று - சிகாரம். பிரணவமுமாம். - (7) பவளத்திரள் - இறைவன் பாகம். அஞ்சனமா மலை - இறைவி பாகம். திருமால் பாக மெனினுமாம். - (8) மறந்தும் நினையமாட்டா - முரண் அணி. நாயனார் சரித அகச்சான்று. வாளா பிறந்த...நாளல்ல - "பேசாத நாளெல்லாம் பிறவாநாளே." - (10) சிவநெறி தவத்தில் நின்று சிவபோத நிலையில்மட்டும் இறைவர் அறிய வருபவர். "உலகெலா முணர்ந் தோதற் கரியவன்."

குறிப்பு :- தென் னெறும்பியூர் - தெளிந் தெறும்பியூர் - திரு வெறும்பியூர் என எதுகையின்பொருட்டு வரும் முதல் அசை ஒன்று தவிர, ஏனை ஈற்றடி முழுதும் மகுடமாய்வரும் சிறப்புடையது இத்திருப்பதிகம் ஒன்றுமேயாம்.

தலவிசேடம் :- திருவெறும்பியூர்மலை - காவிரிக்குத் தென்கரையில் 7-வது தலம். தேவர்கள் எறும்பு உருவம் எடுத்துப் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. மலைக்கோயில். நைமிசா ரணிய முனிவர்கள் பிரம தேவா முதலியவர்கள் பூசித்தமை பற்றிப் பதிகம் பார்க்க. சுவாமி - மாணிக்க வண்ணர்; எறும்பீசர்; அம்மை - நறுங்குழனாயகி; பதிகம் - 2.

இது திருவெறும்பியூர் என்ற இருப்புப்பாதை நிலையத்தினின்றும் வடமேற்கே கற்சாலை வழி  நாழிகை யளவில் அடையத் தக்கது.