1568. (வி-ரை.) மருங்கு உள்ளன - இவை திருப்பராய்த்துறையினின்றும் கிழக்கே காவிரிக்குத் தென்கரையில் உள்ள திரு ஆலந்துறை. திருச்செந்துறை முதலியன. இவற்றுக்கு நாயனார் பதிகங்கள் கிடைத்தில! உற்ற அருளாற் காவிரியை ஏறி - மேல்வரும் திருவருள் வெளிப்பாடு பெற நிற்றலின் அத்திருவருட் குறிப்பனால் காவிரியை இங்குக் கடந்துமேல் வடகரை அடைந்து. மற்று அப்பதிகள் - மற்று அசை. அப்பதிகள் - முன்பாட்டற சுட்டிய அத்தலங்கள். பொற்பு உற்று அமைந்த திருப்பணிகள் - பொற்பு - முத்தி நெறிகாட்டும் அழகு. திருப்பணிகள் - கைத் திருத்தொண்டும், பாடற் றிருத்தொண்டும். "நிலை பெறுமாறு என்ற திருத்தாண்டகத்துட் கூறியவையும் அனைய பிறவும். சேர்கின்றார் - முற்றெச்சம். சேர்கின்றார் - மொழி வேந்தரும் எழுந்தருள - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. 303 1569. (வி-ரை.) நீர் வேட்கை - தாகம். அழிவு ஆம் பசி - உடல் முயற்சி, மனமுயற்சிகளை அழிவு ஆக்கும் பசி. "பசிவந்திடப் - பறந்து மேலும்" என்பது நீதிமொழி. ஆம் - ஆதற்கேதுவாகிய. பெயரெச்சம் எதுப் பெயர் கொண்டது. அதற்கு - வருத்தம் உறத் தாகமும் பசியும் வந்த அதற்கு. சித்தம் அலையாதே - மனம் சிறிதும் சலியாமலே. ஏகாரம் தேற்றம். விழி ஏந்நிய நெற்றியினார் - தொண்டர் துயரங்கள் கண்டுநீக்குத், கென்றே. விழித்த விழியினை யுடையார் என்பது குறிப்பு. "நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே?" என்பது நாயனார் திருவாக்கு. வருத்தம் மீட்பாராய் - வருத்தத்தை நீக்குவாராய். மீட்டல் - போக்குதல். மீட்பாராய் - நண்ணி யிருந்தார் - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. இளைத்த - என்பது பாடம். 304 1570. (வி-ரை.) காவும் குளமும் முன் சமைத்து - வழியில் முன்னே சோலையினையும் குளத்தினையும் சமைத்தல் வருத்தம் மீட்டற்குரிய சாதனங்களாகச் செய்ததாம். நீர்வேட்கை நீக்கக் குளமும், வழிவரும் இளைப்புப் போக்கச் சோலையும் ஆவன. முன் - தொண்டர் அங்கு வரும் முன் என்று காலத்தையும், வரும் வழியின் முன்பு என்று இடத்தையும் குறித்து நின்றது. காட்டி வழிபோம் கருத்து - இளைப்பும் பசியும் நீர்வேட்கையும் நீக்கும் வழியும், அப்பால் மேற்கடந்து செல்லும் வழியும் காட்டித் தாமும் உடன் போகும் கருத்து. 1573ல் வரும் நிகழ்ச்சியின் குறிப்பு. மேவும் திருநீறு - அடியார்களது உள்ளங்களிலும் மேனிகளிலும் நீங்காது பொருந்தும் நீறு. திருநீற்று அந்தணராய் - வழிவரும் இளைப்புக்கு தாகம் பசி யிவற்றுக்கும் சித்தம் அலையாது திருப்பைஞ்ஞீலியைச் சேரவரும் மொழிவேந்தரது சிந்தையை மயக்கித் தம் வயப்படுத்தக் தக்க மருந்தாகத் திருநீறு பூசிய வேதியராய் வந்தனர் இறைவர். "சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணா ரிளங்கொங்கையிற் செங்குங்குமம், போலும் பொடியனி மார்பிலங்கு மென்று புண்ணியர் போற்றிசைப்ப" (திருப்பல்லாண்டு) விரும்பும் - நாயனார் அதனை உண்டு தளர்வொழிய வேண்டுமென்று தாம் விரும்புதற்கேற்ற என்க. அன்புடையோர் யாவராலும் விரும்பத்தக்க என்றலுமாம். விரும்பி யுண்ணத்தக்க என்றலுமாம். |