பக்கம் எண் :


520திருத்தொண்டர் புராணம்

 

பொதி சோறும் கொண்டு - காவும் குளமும் முன் சமைத்ததோடு சோறும் கொண்டு என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. இளைப்பு நீக்கச் சோலையினிழலும், தாப நீக்கக் குளமும் சமைத்தபடியே, பசிநீக்கப் பொதிசோறும் கொண்டு என்று எண்ணும்மையாக்கி உரைப்பதுமாம்.

பொதி சோறு - சோற்றுடன் கூட்டி உண்ணுதற் குதவும் பண்டங்களும் சமைத்துப்பொதிதலால் பொதி சோறு எனப்படும். பொதிந்து கட்டப்படும் வழக்குப்பற்றி இப்பெயர் பெரும்பான்மை வழங்குப்படும்.

ஆளுடைய நம்பிகள், சீகாழியினின்று போதுமவர், "உண்ணீரின் வேட்கையுட னுறுபசியான் மிகவருத்தி" வழிவரும்போது, திருக்குருகாவூரின் அணிமையிற் பந்தர் சமைத்துப் பொதிசோறுடன் வழிபார்த்து இருந்து, இறைவர் அவர்க்குப் பொதிசோறரிக்கும் சரிதவரலாறும் இங்கு நினைவுகூர்தற்பாலது. "விழியேந்திய நெற்றியினார்" (1569) என்று இங்குக் குறிப்பிற் கூறியது போலவே ஆண்டும், "கண்ணீடு திருநுதலார்.....தண்ணீரும் பொதிசோறும் கொண்டுவழிச் சார்கின்றார்" (ஏயர்கோ - புரா - 156) என்ற குறிப்பும் இங்குக் கருதத் தக்கது.

நாவின் தனி மன்னவர் - "நாவுக்கரசு" என்பது நாயனாருக்கு இறைவர் தந்த பெயர் (1339). ஆசிரியரது ஆர்வம் அதன்மட்டில் அமைவுபடாது "நாவின் தனி மன்னர்" என்றார். "மங்கையர்க்கரசி" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தினையும் இவ்வாறே "மங்கையர்க்குத் தனி யரசி" என்று ஆசிரியர் அமைப்பதனை இங்கு நினைவுகூர்க.

காண்பரியவர் தாம் நண்ணியிருந்தார் என்க. திருவருட் செயல் முற்றிய விரைவுபற்றி வினைமுற்று முன்வந்தது. இருந்தார் - வீற்றிந்தருளினர் என்க.

விண்ணின்மேல் தாவும் புள் - அன்னம். ஏனம் - பன்றி. விண்ணின்மேல் தாவும் - மண் கிழிக்கும் - எனற் அடைமொழிகள், இறைவரைக் காணுதற்காகச் செய்த அச்செயல்களைக் குறிக்க உடம்பொடு புணர்த்தி ஒதப்பட்டன.

காண்பு அரியவர் - காண்பு - புவ் வீற்றுத் தொழிற்பெயர். காண அரியவர். நான்கனுருபு தொக்கது. தாம் - தாமே.

காட்ட - என்பதும் பாடம்.

305

1571. (வி-ரை.) அங்கண் - அவ்விடம் என்றும், அங்கண்மை - அருளுடைமை - என்றும் உரைக்க நின்றது.

மறையவர் - தமது உண்மை நிலையை மறைந்து வந்தவர் என்ற குறிப்பு.

வேதியர் - நாயனாரது கருத்தை "எண்ண நினையா" மற் செய்து வேதிப்பவர் என்பது குறிப்பு.

நோக்கி - தம் கருத்தின்படி அவரை வயமாக்கும் வண்ணம் அருள் நோக்கம் செய்து என்பது குறிப்பு.

சோறு - முத்தி என்ற உண்மைக் குறிப்பும் தந்து நின்றது. "பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" (திருவா)

பொங்கு குளம் - பொங்குதல் - ஊறும் நீருடைத்தால்: புதிதாய்த் சமைக்கப்பட்ட தென்பதும் குறிப்பு.

போவீர் - வழியின் மேற் செல்வீர்.

புகன்றார் - சொல்ல; புகன்றாராக. பொருள் செல்லும் தொடர்பு நோக்கி முற்றெச்சமாக உரைக்கப் பட்டது. முற்றாகக் கொள்ளினு மிழுக்கில்லை. இவ்வாறே ஆளுடைய நம்பிகளை நோக்கித் திருக்குருகாவூர் இறைவர் அருளுவதும் இங்குச் சிந்திக்க. (ஏயர் கோ. புரா. 159).

306