ஆளுடைய நம்பிகளது செய்கையினையும் இங்கு வைத்துக்காண்க. அறிந்தார் போல அளித்தமையும், அருளென்று கொண்டமையுமே எதிர்வாங்கக் காரணமாயின என்பதாம். உரைத்து - இன்னுரைகூறி. சோறளித்தல் - இன்னுரையுடன் கூடிய செய்கை. இனிதா - இனிமையாக; மனமகிழ்ச்சி குறித்தது. இனிய தண்ணீர் - பொங்கு குளமாதலின், புதிய நீர் இனியதாயிற்று. தூய்மை செய்தல் - கைகால் சுத்தியும் வாய்ச் சுத்தியும் முதலியவை செய்தல். தளர்வு - இளைப்பும் பசியும் தாகமும். எண்ணி நினையாது - என்பதும் பாடம். 307 1573. | எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி யிருந்த மறையவனார் "அப்பா லெங்கு நீர்போவா?" தென்றா; ரரசு மவர்க்கெதிரே "செப்ப வரியான் திருப்பைஞ்ஞீ லிக்குப் போவ" தென்றுரைப்ப, ஒப்பி லாரு "மியானங்குப் போகின் றே"னென் றுடன்போந்தார். |
(இ-ள்.) எய்ப்பு....என்றார் - இளைப்பு நீங்கி நின்ற அரசுகளை இருந்த மறையவனார் நோக்கி, "இனி அப்பால் நீர் எங்குப் போகின்றீர்?" என்று கேட்டார்; அரசு...என்றுரைப்ப - அரசுகளும் அவர்க்கு எதிர் மொழியாக "செப்புதற் கரியவராகிய சிவபெருமானது திருப்பைஞ்ஞீலிக்குப் போகின்றேன்" என்று சொல்ல; ஒப்பிலாரும்....போந்தார் - ஒப்பற்றவராகிய மறையவனாரும், "நான் அங்குப் போகின்றேன்" என்று சொல்லி உடன் போந்தனர். (வி-ரை.) நின்றவரை - இருந்த மறையவனார் - பொதி சோறுண்டு நீரும் அருந்தித் தளர்வொழிந்த நாயனார் மேற் சிறிது போதும் அங்குத் தங்கி வீற்றிராது நின்றபடியே திருப்பைஞ்ஞீலி நோக்கி மேற்செல்ல நின்றனர் என்பதும், மறையவனார் தாம் அரசுகளுக்குச் சோறு தந்து வீற்றிருந்தபடியே இருந்தனர் என்பதும் கொள்க. "நண்ணியிருந்தார்" (1570) என்றதனையே தொடர்ந்து இருந்த என்றார். அவர்க் கெதிரே - செப்ப அரியான் - எதிரே - அவர் முன்னிலையில் நின்றும் உமது என்று கூறாது செப்ப அரியான் என்று படர்க்கை யிடத்துக் கூறினார் என்ற குறிப்புப்பட எதிரே என்றார். செப்ப அரியான் என்ற குறிப்புமது. செப்ப அரியான் - சொல்லில் அடங்காதவர். "உலகெலா முணர்ந் தோதற் கரியவன்" (புரா) "சொற்கழிவு பாதமலர்" (திருவா - திருவெம் - 10.) ஒப்பிலார் - "தனக்குவமையில்லாதான்" (குறள்) "ஓர் உவமனில்லி" (தாண் - தேவா). யான் அங்குப் போகின்றேன் - யானும் என்னாது, யான் என்று கூறியதன் கருத்துத் தம்முடன் சிறிது தூரம் உடன் வருவதுபோலக் காட்டிப், பின்னர் மறைய நிற்கும் பின் நிகழ்ச்சியின் குறிப்பு. போகின்றேன் - இங்கு வெளிப்பட்டு இவ்வாறு தோன்றிய உருவத்தினின்றும் மறைந்து எங்கும் செறிந்த அருவநிலையில் புகுவேன் என்ற குறிப்பு. அங்கு - அந்த நிலையில்; அங்கு நீ என்னைக் கண்டு கொள்க என்றதாம். உடன் போந்தார் - நாயனார் செல்ல அவருடனே மறையவனாரும் போந்தனர். "திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார்" (1568) என்று கூறியபடி நாயனார் வழிச் செலவில் இங்குச் சிறிதும் தங்காமல் பொதி சோறுண்டு தூய்மை செய்தவுடன் மேற் செல்கின்றாராதலின் அவர் சென்றார் என்பதைக் கூறாமல் மறையவனார் அவருடன் சென்றதைமட்டும் எடுத்துக் கூறினார். |