உடன் - எக்காலத்தும் எவ்வுயிர்க்கும் உடனாகியிருந்து நிகழ்பவர் என்றதும் குறிப்பு. மறையவனார் - வேதியராகிய உருவத்தினுள் மறைந்து நின்றவர் என்பதும், சிறிது தூரத்தில் மறைய நிற்பவர் என்பதும் குறிப்பு. மேல் வரும் பாட்டிலும் மறையவனார் என்றே குறிப்பது காண்க. செப்புவார் யான் - என்றுரைத்தார் - என்பனவும் பாடங்கள். 308 1574. | கூட வந்து மறையவனார் திருப்பைஞ் ஞீலிகுறுகியிட வேட மவர்முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம் "ஆடல் புரிந்தா ரடியேனைப் பொருளா வளித்த கருணை"யெனப் பாடல் புரிந்து விழுந்தெழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார். |
(இ-ள்.) வெளிப்படை. உடனே கூட வந்து மறையவனார், திருப்பைஞ்ஞீலியினை அணுக, அதுவரையிற் காட்டிவந்த உருவத்தினை அவர் முன்பு நின்றும் மறைத்தலும், மெய்த்தவத்தின் விளங்கும் மேன்மையுடைய நாயனார், "கூத்தனார் அடியேனையும் ஒரு பொருளாக வைத்து இவ்வாறு எனக்கு அளித்த பெருங் கருணை யிருந்தவாறுதான் என்னே!" என்று பாடிக் கீழே விழுந்து, எழுந்து, கண்ணீர் மழை பொழிந்து, சிவானந்தத்தினுள் திளைத்தனர். (வி-ரை.) கூட - கூடவே; உடனே, தேற்றேகாரம் தொக்கது. மறையவனார் - மறையவனார் மறைத்தலுமே எனவும், மறையவனாரது திருப்பைஞ்ஞீலி எனவும் கூட்டி உரைக்க நின்றது. குறுகியிட - அணுக; சார. இருவருமாகத் திருப்பைஞ்ஞீலித் தலத்தைச் சார்ந்தனர் என்பது. வேடம் - அதுவரை நாயனார் முன்பு காட்டி வந்த, மேவும் திருநீறறந்தணராகிய உருவம். ஆடல் புரிந்தார் - உலகமும் பல்லுயிரு மொன்றி நிறைந்தோங்கி யிலகும் சிவனாகி ஐந்தொழிற் பெருங் கூத்தியற்றும் எமது இறைவனார். புரிந்தார் - வினைப் பெயர். புரிந்தாராகிய இறைவர். அளித்த கருணையன்ால் ஆடல் புரிந்தார் என்று; புரிந்தார் என்பதனை வினைமுற்றாகவே கொண்டு, என்னையும் ஒரு பொருட்படுத்தி ஒரு திருவிளையாட்டு நிகழ்த்தினார் இறைவர் என்று எழுவாய் வருவித்துரைத்தலு மொன்று. அடியேனை - அடியேனாகிய என்னையும். இழிவு சிறப்பும்மை தொக்கது. அடியேன் என்பது ஒன்றுக்கும் பற்றாதவனாய்க் கடைத்தொண்டு செய்து திரியும் என்னையும் என்ற குறிப்புடன் நின்றது. திருநெல்வாயிலரத்துறை யிறைவர் தமக்கு முத்துச் சிவிகை முதலியவற்றை யருளியமை கண்டபோது, ஆளுடைய பிள்ளையார், இவ்வாறே "என்னை யும்பொரு ளாகவின் னருள்புரிந் தருளும் பொன்ன டித்தலத் தாமரை போற்றியென் றெழுந்தார்" (திருஞான - புரா - 226) என்பதும் இங்குக் கருத்தக்கது. அளித்த - அளியுடன் செய்த. "ஆடல் புரிந்தார்.....கருணை" யென - இது நாயனார் அப்போது அருளிய பதிகக் குறிப்பும் கருத்துமாம். பாடல்புரிந்து - திருப்பதிகம்பாடி. இது தலத்துக்குப் புறம்பு அருகில், மறையவனாகி உடன் வந்த இறைவர் மறைந்த உடன் பாடியது. இப்பதிகம் கிடைத்திலது. இப்போது கிடைக்கும் "உடையர் கோவணம்" என்ற திருக்குறுந்தொகை பின்னர்த் திருக்கோயிலுக்குச் சென்று வணங்கித் திருமுன்னர்ப் பாடிய "விரும்புந்தமிழ் மாலை |