பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கோவணம் உடையவர் என்க. ஒன்றும் - ஒன்றானும்; கோவணம் உடையராயினும் ஒன்றாலும் குறைவிலார். "ஒரிடம் குறைவில ருடையர் கோவணம்" என்று ஆளுடைய பிள்ளையாரும் தொடங்குதல் குறிக்க. பாரிடம் - பூதகணம். "பாரிடம் பணிசெய்யும்" (பிள் - தேவா). சதுரர் - வல்லவர். உலகமெல்லாம் பரவி மூடி அழிக்கவல்ல பெருவெள்ளமாகிய கங்கையைப் பனித்துளிபோலாக்கிச் சடைநுனியிற் றரித்தமை சதுரப்பாடு. "பரந்திழியும் புனற்கங்கை பணிபோலாங்குச், செறுத்தானை" (தாண் - மிழலை - 10). அடைய வல்லவர் - அடைதலின் அருமைப்பாடு குறித்தது. - (2) சித்தராய் - சித்தத்தில் வைத்தவர்களாய். சித்தராய்த் திரிவார் என்றும், வினைதீர்ப்பர் என்றும் பிரித்து இறைவர்க்கு ஆக்கி உரைத்தலுமாம். - (3) விழுது - நிணம். கழுது - துஞ்சு இருள் - பேயும் உறங்கும் நடுயாமம்; இங்கு ஊழி குறித்தது. பழுது - விதித்தவறு. - (4) தம்மிலே - இகலிநின்ற தமது நடுவில். - (5) யாழ் - வீணை; யாழின் பாட்டை உகத்தலாவது - ஊழிமுடிவில் உலகங்களை ஒடுக்கியபின் அவை மீளவரும்படி இறைவர் செய்யும் நாதமுழக்கு. "வருங்கடன் மீளநின் றெம் மிறை நல்வீணை வாசிக்குமே" (பொது - திருவிருத்) - (6) நாயனார் சரித அகச்சான்று. குண்டரோடு படுத்து - குண்டரினின்றும் வேறுபடுத்து. -(7) வரிப்பை - மேல் வரிகளையுடைய நாகத்தின் நச்சுப்பை. உரிப்பு - உரிவை - தோல். திசை - இருக்கும் திசையை நோக்கி. - (8) பேடும் ஆணும் - பேடென்றும் ஆண் என்றும். இனம் பற்றிப் பெண்ணும் உடன்கொள்க. - (9) காருலம் - கார்காலத்திற் பூக்கும்? - (10) சிவனையே நினைந்து என்க. நினைந்து - தனது பிழையை நினைந்து. சிவனையே - ஏகாரம் பிரிநிலை. இராவணன் பாடிய சாமவேதப்பொருள் சிவன்; வேதத்தின் இருதயத்தில் விளங்குபவன் சிவன் என்பது குறிப்பு. இருக்கை ஞீலி - பைஞ்ஞீலி யாகிய தலம். இருக்கை - இருக்கும் தலம். ஞீலி - பைஞ்ஞீலி என்பது ஞீலி என நின்றது. தொழுது செல்பவர் (3), திசை தொழுவார்கள் (7), இருக்கை ஞீலி (10) என்றிவை முதலிய குறிப்புக்களால் இப்பதிகம் நாயனார் இத்தலித்தினின்றும் புறப்படும்போது அதன் புறத்தே தொழுது போற்றியது என்றும் கருத்தப்படும். தலவிசேடம் :- திருப்பைஞ்ஞீலி - இது காவிரிக்கு வடகரையில் 62-வது தலம். ஞீலி ஒர் வகை வாழை. பசிய ஞீலி இங்குத் தலமரமாதலின் இப்பெயர் பெற்றது. திருநீற்றந்தணராய் வந்து, இறைவர், திருநாவுக்கரசு நாயனாருக்குப் பொதிசோறு தந்தருளின வரலாறு மேற்கூறப்பட்டது. இறைவர் அப்போது சமைத்த சோலையும் குளமும் தலத்துப் புறத்தே அணிமையில் உள்ளன. மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. இங்கு இறைவரது திருவடிவு கண்டு காதல் சிறக்க, ஆளுடைய நம்பிகள், பெருமான் பலிக்கு வரும் வடிவுகண்டு மயல்கொள்ளும் மங்கையர் கூற்றாக, "ஆரணீய விடங்கர்" என்ற அருந் தமிழ்ப் பதிகம் பாடியருளிய பெருமையுடையது. சுவாமி பெயர் நீலகண்டர் என்பதையே "காருலாவிய நஞ்சை யுண்டிருள் கண்டர்" என்று வைத்து நம்பிகள் தொடங்கிப் பாடியருளியது காண்க. ஞீலி என்ற வாழை கோயிற் சுற்றில் இன்றும் தூறுகளாகக் காண உள்ளது. அதன் இலை - காய் - கனி முதலியவற்றை இறைவருக்கே பயன் படுத்தலல்லது வேறு எவரேனும் தமக்குப் பயன் படுத்துவரேல் நோயுறுவது இன்றுங் காணப்படும் அதிசயம். சுவாமி - நீலகண்டர். ஆரணீய விடங்கர்; அம்மை - விசாலாட்சி, நீணெடுங்கண்ணி; தலமரம் - பைஞ்ஞீலி - வாழை; பதிகம் 3. குறிப்பு :- காவிரிக்கு வடகரையில் சோழநாட்டுத் தலங்கள், கோயில் என்னும் சிதம்பரத்திலிருந்து தொடங்கி வடகரை வழியே மேற்கு நோக்கிவந்து இத்தலமும்ம (பைஞ்ஞீலி), திருவீங்கோய் மலையும் என்றிவற்றோடு முடிகின்றன. |