ஆசிரியரது அருணினைவில் இத்திருவெம்பாவைகள் வந்திருக்கலாம் என்பது கருதப்படும். தொழுதல் - எழுதல் - திளைத்தல் - அன்பின் மெய்ப்பாடுகள். சாதித்தார் என்பது அனுபூதிநிலை. தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் - வீடு என்பது எல்லாப் பொருள்களுக்கும் மேலாய் அடையப்படுவது என்பதும், பிறவி தீது என்பது ஞானநூல்களின் முடிபு. ஆயின், இங்கு, அப்பேரின்ப வீட்டின்பத்துக்கு மேலாகிய இன்பம், ஐம்புலனுகர்ச்சிக்கும் உட்படுவதாய், அடியார் கூட்டத்துடன் கலந்து அனுபவிக்கப் படுதலால் "தொழுது எழுந்து திளைத்த" போது திருநாவுக்கரசர் அவ்வின்ப நுகர்ச்சி கைகூடப்பெற்ற இப்பிறவியே அவ்வீட்டுக்கு மேலாவதென்று உண்மையை அனுபூதிநிலையிற் கைவரப்பெற்றனர் என்பது கருத்து. சாதித்தார் - சாதனத்தாலடையும் பொருளாகிய - சாத்தியமாகிய - வீட்டின் மேலாம் பெருமையைச் சாதனமாகிய தொழுவதின்கண்ணே கூடப்பெற்றனர். "உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை யொழிவின்றி யுருவின்க, ணணையு மைம்பொறி யளவினு மெளிவர வருளினை" (திருஞான - புரா - 161), "உன்றன்றிருநடங் கும்பிடப் பெற்று, மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு வாலிதா மின்பமாம் (253) "திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன், வாசமலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்" (1265) முதலியவை காண்க. "நடமாடுந் திருவாளன் திருவடிகண், டிறந்தார்கள் பிறவாத விதிலென்ன பயன்? வந்து, பிறந்தாலு மிறவாத பேரின்பம் பெறலாமால்" (கோயிற்புரா - பாயிரம். 15) என்று உமாபதிசிவாசாரியர் இக்கருத்தைச் சுவைபெற விரித்தமை காண்க. அருணையை நினைக்க முத்தி என்பர். இங்கு நினைத்தும், வந்தும், கண்டும், பாடியும், தொழுதும் எழுந்து திளைத்த நாயனார் முத்தியாகிய அவ்வீட்டினுக்கு மேலாம் பெருமையை அடைந்தனர் என்பதுமாம். "நற்றவத் தொடு ஞானத் திருப்பரே " என்ற பதிகம் காண்க. "கூடு மன்பினிற் கும்பிடலே யன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்" (143) என்ற கருத்து இங்கு வைத்துக் காணத் தக்கது. "வீட்டினும் இவ்வாறாகிய பிறப்பில் மிக ஆனந்த மிருத்தலால் என்க" என்பது இராமநாதச் செட்டியார் உரை. இவ்வாறன்றி, சாதித்தார் - விளக்கினார் - உணர்த்தினார் என்று கொண்டு "இம்மானுடப் பிறவியே வீட்டை கற்குக் காரணமாகிய சிறந்த பெருமையுடையதென்று நிச்சயஞ் செய்தார்" என்றும், "வீடு பேறு காதலித்தலும், அதனை நிறைவேற்ற முயலுதலும், அம்முயற்சியாற் பேறெய்தலும் மனிதப்பிறப்புக் கிருத்தலான்" என்றும் பலவாறுமுரைத்தனர் முன் உரைகாரர்கள். அவையெல்லாம் ஈண்டைக்குப் பொருத்தமின் றென்க. துங்க விடையின் - மேலாம் பரிசு சாற்றினார் - என்பனவும் பாடங்கள். 312 திருவண்ணாமலை - (மலையைத் தொழுது அருளியது.) I திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| பட்டி யேறுகந் தேறிப் பலவிலம், இட்ட மாக விரந்துண் டுழிதரும் அட்ட மூர்த்தியண் ணாமலை கைதொழக், கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே. பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர், சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும், அற்றந் தீர்க்குமண் ணாமலை கைதொழ, நற்ற வந்தொடு ஞானத் திருப்பரே. 2 மறையி னானொடு மாலவன் காண்கிலா, நிறையு நீர்மையுள் நின்றருள் செய்தவன், உறையு மாண்பினண்ணாமலை கைதொழப், பறையு நாஞ்செய்த பாவங்களானவே. |
திருச்சிற்றம்பலம் |