பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வட்டன் - அன்பு வட்டத்துள் விளங்குபவன். வட்டம் - வளைவு; சிட்டன் - தலைவன். - (2) ஏனன் - பன்றி வடிவம் கொண்டவன், "கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பறிவார்" (திருவா - 43 - 6). ஆனன் - ஆனையுடையவன். பொன்னன் என்பதுபோல. "ஆனலாதூர்வதில்லை" (தேவா). அன்னன் . அத்தன்மையன். எய்த அத்தன்மையன். - (7) ஆரன் - ஆர் சூடியவன். ஆர் - சரக் கொன்றை; ஆத்தி என்றலுமாம். அரன் என்றது எதுகை நோக்கி ஆரன் என நீண்டது என்பதுமாம். ஹாரணி ஆரணி என்றாதல்போல, சம்ஹாரன் என்பதில், சம் - இன்றி, ஹாரன் (அழிப்பவன்) ஆரன் என்றாயது எனினுமாம். - (8) எய்த அரு - புரமெய்தவாறு பிறரறியலாகாமையின் அரு எனப்பட்டது. அருவினை - அருவ வடிவுடையனை என்றலுமாம். - (9) திருத்தன் - விளங்க - திருத்தமாக - அணிந்தவன். - (10) திருத்தன் - திருத்தம் செய்தவன். என் உடல் உறுநோய்களைத் துரக்கன் - உடல் - பிறவி - உறுதற்குக் காரணமாகிய மலங்களைப் போக்குபவன். துரக்கன் - துரக்கச் (போக்க) செய்பவன். துரத்தல் - போக்குதல். "இருளைத் துரந்திட்டு" (திருவா). தலவிசேடம் :- திருவண்ணாமலை - நடு நாட்டின் 22-வது தலமாயும், இறுதித் தலமாயும், அதன் வடகோடியில் தொண்டை நாட்டெல்லைக்கு அணிமையில் உள்ளது. சிவந்த நெருப்புருவமானது என்றும், அடைந்தார்களது (ருணம்) கன்மங்களை ஒழிப்பது என்றும் பொருள் தருவதாகி அருணாசலம் என்றும் தேற்றமாய் வழங்கப்படுவது. அண்ணாமலை என்பது அணுக முடியாத, அல்லது, அணவதெரிய - முடியாத மலை என்று பொருள் தந்து பிரம விட்டுணுக்கள் முடியும் அடியும் அறியமுடியாது நின்ற தலவரலாறு குறிப்பது. பிரம விட்டுணுக்கள் முடியும் அடியும் தேடிய வரலாறு முன் 1578 கீழ்க் குறிக்கப்பட்டது. அவ்வரலாறும் அதன் பொருட்டு ஆண்டு தோறும் நிகழும் திருக்கார்த்திகைப் பெருவிழாவும் மறிந்தன. ஐம்பூதத் தலங்களுள் தேயுத் தலம். நினைக்க முத்தி தருவது. இறைவனாரது திருக்கண் புதைத்த காலத்தில் பெருமான் அருளியபடி அம்மை இங்குத் தவம் செய்து வலப்பாகம் பெற்றனர் என்பது தலமான்மியம். வல்லாள மன்னருக்கு அவர் அன்பின் பொருட்டு இறைவர் மகனாக வந்து அருள் செய்தது திருவிழாவாக நடைபெறுகிறது. முருகப்பெருமானது பேரடியராகிய அருணகிரிநாதர் இங்கு அவதரித்துப் பேறு பெற்றனர். கொடிக் கம்பத்தின் முன் உள்ள கம்பத்திளையனார் என்னும் மூர்த்தி அவருக்கு அருளிய பெருமான். குகை நமச்சிவாயர், குருநமச்சிவாயர் முதலிய பெரியோர் பலரும் இங்குப் பேறு பெற்றனர். இன்றும் அடியார் கூட்டம் பெருக்கச் சிறக்கத் திகழ்வது இத் திருதலமேயாம். மாலயன் அடிமுடி தேடியறியாத தலவரலாறு பிள்ளையாரது "விளவார்கனி" (9) என்ற நட்டபாடைப் பதிகத் திருப்பாட்டிலும், அடைந்தார்களது (ருணம்) வினை தீர்க்கும் மலை என்பது அப்பர் சுவாமிகளது "பட்டியேறுகந்து" என்ற குறுந்தொகைப் பதிக முழுமையினும், "இரக்கமாயென் உடலுறு நோய்களைத் துரக்கனை" என்னும் திருக்குறுந்தொகையினும் போற்றப்பட்டன. மலை சிவனுருவமா யுள்ளது (திருஞான - புரா. 970). சுவாமி - அண்ணாமலையார் - அருணாசலேசுவரர்; அம்மை - உண்ணாமுலையம்மை; தீர்த்தங்கள் - இந்திர தீர்த்தம் முதலிய அனேக தீர்த்தங்கள் மலையைச் சுற்றிலும் உள்ளன; மரம் - மகிழ். பதிகம் - 5. இது விழுப்புரம் - காட்டுப்பாடி கிளை இருப்புப்பாதையில் இப்பெயர் கொண்ட நிலையத்தினின்றும் மேற்கே கற்சாலை வழி நாழிகை யளவில் அடையத் தக்கது. 1580. (வி-ரை.) காதல் செய்யும் கருத்து - காதலாற் பணிகள் செய்யும் கருத்து. காதல் அதனால் தூண்டப்பட்ட பணிகளுக்கு ஆயிற்று; ஆகு பெயர். |