பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்535

 

காடும் மலையும் கான்யாறும் - காடு - நடுநாட்டின் வடபாகத்திலும், அதனை அடுத்துத் தொண்டை நாட்டுத் தென்மேற்குப் பாகத்திலும் உள்ள சிறு காடுகள். மலைகள் - செஞ்சி மலை, நெடுங் குன்றம், வெண் குன்றம், இவை தொடர்ச்சியாய் இராமல் அங்கங்கும் சிறு குன்றுகளாயுள்ளன. நாயனார் சென்றருளிய இந்நாட்டுப் பகுதி கிழக்குத் தொடர்ச்சி மலை - மேற்குத் தொடர்ச்சி மலைகளுக் கிடைப்பட்ட வெளி என்பதறியப்படும். கான்யாறுகள் - துரிஞ்சிலாறு, வராக நதி, சேயாறு முதலியன.

சூதமலி தண் பணைப் பதிகள் - சூதம் - மா; திண்டிவனம், ஆரணி, வேலூர் முதலிய ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த நாடுகளும் அந்நாளிலும் மாஞ் சோலைகளாற் சிறப்புற்றிருந்தன என்பது ஈண்டுக் கருதப்படும்.

முன்னாக - ஆளுடைய பிள்ளையார் பின்னாக இங்கு எய்தி ஆண்பனைகளைப் பெண்பனையாக்கும் அற்புதம் நிகழ்வது உலகறியுமாதலால் அதற்கு முன்னாக அரசுகள் அங்கு எய்தும் அருட்செயல் நிகழ்ந்த தென்பது. முன்னாக - தொண்டை நன்னாட்டில் முதலாவதாக என்றலுமாம்.

அணியார் தொண்டைத் திருநாடு (1579) என்று முன்னரும், பெருந் தொண்டை நன்னாடு - என்று இப்பாட்டினும் கூறிய வகையால் நாட்டுச் சிறப்பும், சீதமலர் மென் சோலைசூழ் திருவோத்தூர் - என்றதனால் நகரச் சிறப்பும் கூறி, நாயனாரது தொண்டை நாட்டு யாத்திரை வரலாற்றை ஆசிரியர் தொடங்கும் நயம் காண்க.

315

1581.

செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த் தேவர் பிரானார் தங்கோயில்
புக்கு வலங்கொண் டெதிரிறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித் திருத்தாண்ட கங்கள்முதலாகத்
தக்க மொழிமா லைகள்சாத்திச் சார்ந்து பணிசெய் தொழுகுவார்.


1582.

செய்ய வையர் திருவோத்தூ ரேத்திப் போந்து செழும்புவனம்
உய்ய நஞ்சுண் டருளுமவ ருறையும் பதிகள் பலவணங்கித்,
தைய றழுவக் குழைந்தபிரான் றங்குந் தெய்வப் பதியென்று
வைய முழுதுந் தொழுதேத்து மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

1581. (இ-ள்.) வெளிப்படை. அந்திவானச் செக்கர் போன்று ஒளி வீசும் சடையுடையாராகிய. திருவோத்தூரில் வீற்றிருக்கும் தேவர் தலைவருடைய திருக்கோயிலின் உட்புகுந்து, வலமாக வந்து, திருமுன் வணங்கித், தோத்திரங்கள் செய்து, கண்கள் ஆனந்தக் கண்ணீர் பொழிய நின்று, மூன்று கண்ணுடைய அப்பெருமானை விரும்பிப் பாடும் திருத்தாண்டகங்கள் முதலாகிய தக்க மொழி மாலைகளைச் சாத்திச் சிவபெருமானது திருப்பணிகளையும் செய்து ஒழுகுவாராய்,

316

1582. (இ-ள்.) செய்ய....பதிகள் பல வணங்கி - சிவந்த சடையினையுடைய சிவபெருமானது திருவோத்தூரினைத் துதித்து அங்கு நின்றும் புறப்பட்டுச் சென்று, செழும் புவனங்கள் எல்லாம் உய்யும்படி விடத்தை அமுது செய்தருளிய அந்தப் பெருமான் இனிதமரும் பல பதிகளையும் வணங்கிச் சென்று; தையல்...அணைந்தார் - அம்மையார் தழுவத் திருமேனி குழைந்து காட்டிய பெருமான் எழுந்தருளும் தெய்வத் தலம் என்று உலகங்கள் எல்லாம் தொழுது துதிக்கின்ற மதில் சூழ்ந்த காஞ்சிபுரத்தின் அணிமையில் அணைந்தனர்.

317

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.