பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்551

 

தொடர்ந்த - முன் தொடர்பால் வந்த; விடாது தொடர்ந்த என்றலுமாம். காஞ்சியினின்றும் திருமாற்பேறு முதலிய பிற தலங்களைச் சேர்ந்த நாயனார் மீண்டும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்ததற்கு அதனிடத்துத் தம் மனத்துள் வைத்த பெருங்காதல் காரணம் என்பது. இவ்வாறே திருத்தில்லையில் மீண்டு மெழுந்தருளிய வரலாறும் (1439), திருவாரூரில் மீண்டு அணைந்தருளியமையும் (1493), பிறவும் இங்கு நினைவு கூர்க. இச்சரிதப்பகுதிக்கு அகச்சான்று உளதோ என வினவுவாராயின் அஃதுணர்த்துதற்கு எழுந்தது மேல்வரும் பாட்டு
என்க.

திருமாற்பேறு

I திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன; மாவலிபாற்
காணிக் கிரந்தவன் காண்டற் கரியன; கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன; பேர்த்துமஃதே
மாணிக்க மாவன; மாற்பே ருடையான் மலரடியே.

1

கருடத் தனிப்பாகன் காண்டகற் கரியன; காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன; கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன; மாற்பே றுடையான் மலரடியே.

2

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- மாற்பேறுடையான் மலரடியே கூற்றை யுதைத்தன; காதல் செய்யிற் குருடர்க்கு முன்னே குடிகொண்டிருப்பன; மலர்ச் செவ்வி செங்கமலக் கரத்தால் வருடச் சிவப்பன; என் றித்தன்மைகளால் அறியப்படுவன.

இப்பதிகத்தில் இரண்டு பாட்டுக்களே கிடைத்துள்ளன.

பதிகப் பாட்டுக குறிப்பு :- (1) மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர். மாவலி...இரந்தவன் - திருமால். காணி - வடி மண். கண்ட - அநுபூதி கைவரப் பெற்ற. பேர்த்துமஃதே மாணிக்கமாவன - முன்னர் அனுபூதியில் கைவர அருள் செய்து பரவச் செய்த அவையே அவ்வாறு பரவுவதற்கீடாகச் சிவானந்த வாழ்வு தருவன என்பது. மாணிக்கம் - பெறற்கரிய சிவப்பேறு குறித்தது. "அவனருளாலே அவன்றாள் வணங்ங்கி" என்றபடி வணங்க அருள் செய்வதும், வணங்கினால் அதற்குப் பேறாக நிற்பதும் இரண்டும் அவனருளேயாம். அடி - திருவருள் நிறைவு. - (2) கருடத் தனிப் பாகன் - தீருமால். பாகன் - ஊர்தியாகக் கொண்டு செலுத்துபவன். காண்டற் கரியன - தல வரலாற்றுக் குறிப்புமாம். குருடர் - முன்னர் உண்மை காணாதார். முன்னே குடிகொண்டிருத்தல் - வழி காட்டுதல். அருளுதல் குறித்தது. செல்வி - உமையம்மை.

II திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

பெருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்,
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங்,
கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு,
திருமாற் பேறு தொழவினை தேயுமே.

1

மழுவ லான்றிரு நாம மகிழ்ந்துரைத், தழுவ லார்களுக் கன்புசெய் தின்பொடும்,
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு, தொழவ லார்தமக் கில்லைத் துயரமே.

7

திருச்சிற்றம்பலம்