மாமயில் வளர்வரை என்னத் தரைவளர் சீர்த் திருமயிலை என்று கூட்டி, மாமயில் - மயில்போன்ற உருவம் சாயலுமுடைய அம்மையார்; வளர் வரை யென்ன - முன்னே வளர்ந்த இமயமலையிற்போல; தரைவளர் சீர் - இந்நிலவுலகத்திலும் வந்து தவம் செய்து சிவபெருமானைப் பூசித்த சிறப்புடைய; திருமயிலை - திருமயிலாபுரி என்று கூட்டியுரைப்பதுமொன்று. மாடமிசை மஞ்சு ஆடும் - மேகந் தவழும்படி மேக மண்டலம் அளாவ ஓங்கிய மாடங்களின் உயர்ச்சி குறித்தது. தரை வளர் சீர் - உலகில் பெருகி வளரும் சிறப்பு. ஆசிரியரது இந்த ஆசியுரையின் பயனாக இன்றும் திருமயிலையின் சிறப்புப் பல்லாற்றானும் இவ்வுலகில் வளர்ந்து வருதலும் கண்கூடு. சங்கரனார் - இங்குக் கபாலீசர் என்று பெயர் பெறுவர். சங்கரன் - சுகத்தைச் செய்பவன் காபாலியாய் இரந்துண்பதும் அடியார் இரந்துண்டு தன்னடி எட்டச் செய்தற்காகவே என்பர் திருமூலர். "இரந்துணி யென்பர்க ளெற்றுக் கிரக்கும்?, நிரந்தர மாக நினையு மடியார், இரந்துண்டு தன்னடி யெட்டச்செய் தானே" - (திருமந்திரம்). உரைவளர் மாலைகள் - திருப்பதிகப் பாசுரங்கள் ஒவ்வொன்றும் மாலை எனப்படும். மாலைகள் - பல பதிகங்கள் என்றும், ஒரு பதிகத்தின் பாசுரங்கள் என்றும் உரைக்க நின்றது. உழவாரப் படையாளி - திருநாவுக்கரசுநாயனாரது சிறப்புப் பெயர். ஆளி - ஆள்பவர். உழவாரப் பணி செய்பவர். திரைவளர் வேலைக்கரை போய் - திருமயிலையினின்றும் நாயனார் கடற்கரை வழி அலை விளிம்பு மணல் வீதி வழியே சென்று திருவொற்றியூர் சேர்ந்தனர் என்பது. இந்நாளினும் உடல் நலம் பெறும் பொருட்டுச் சென்னையிலிருந்து அலை விளிம்பு மணல் வீதி வழியே மயிலைக்கு நடந்து செல்லும் உலகோரைக் காணலாம். உலக நலத்துக்காக நாயனார் மயிலையினின்று திருவொற்றியூர்வரை அவ் வழியே சென்றனர் என்க. இது 10 நாழிகை யளவு வழி உள்ளது. சென்னை இந்நாளிற் போலன்றி, 1500 ஆண்டுகளின் முன் அக்காலதது வெறும் நெய்தற் கனலாகிய மணற் பரப்பாயும் சிற்றூராயும் இருந்ததாம் என்பது ஈண்டு நினைவிற் கொள்ளத் தக்கது. திருமயிலை - நாயனார் பதிகங் கிடைத்திலது! தலவிசேடம் ஆளுடைய பிள்ளையார் புராணத்துக காண்க. வரைதவழ்மா மஞ்சென்ன மாடமிசை மயிலாடும் - தரைபுகழ் - என்பனவும் பாடங்கள். 332 1598. | ஒற்றியூர் வளநகரத் தொளிமணிவீ திகள்விளக்கி நற்கொடிமா லைகள்பூக நறுங்கதலி நிரைநாட்டிப் பொற்குடங்க டூபங்க டீபங்கள் பொலிவித்து மற்றவரை யெதிர்கொண்டு கொடுபுக்கார் வழித்தொண்டர். |
333 (இ-ள்.) வெளிப்படை. வளமை பொருந்திய திருவொற்றியூர் நகரத்தின் ஒளியுடைய அழகிய வீதிகளை விளக்கி, நல்ல கொடிகளையும் மாலைகளையும் கமுகும் நறிய வாழைகளுமாகிய இவற்றையும் வரிசை பெற நாட்டி, பொன்னாலாய நிறை குடங்களையும் தூபங்களையும் விளக்குக்களையும் அழகுபெற அமைத்து, அவ்வாகீசரை வழித்தொண்டர்கள் எதிர்கொண்டு வரவேற்று நகரத்தின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். |