பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்571

 

தண்டத்தராய் - தண்டம் - உடல். நீறணிந்து தண்டம்போல் அசைவின்றியிருந்து என்றலுமாம். நீறுபூசிய மேனியராய். தாமும் நீறுபூசிக்கொண்டு அவரையும் நீறு சேர்வதோர் மேனியராக எண்ணி. ஆன்மார்ந்த பூசையில் தண்டபங்கி என்ற பகுதிக் குறிப்புமாம். நீற்றும் - இருளைப் போக்கும். ஊற்றுத்தண்டு - ஊன்றுகோல். ஊன்று - என்பது ஊற்று என எதுகை நோக்கி வலிந்தது. தண்டொத்தலாவது தாங்குதல். (6) போது தாழ்ந்து - காலந்தோறும் வணங்கி. -(8) ஒன்று ஏறிற்று - ஒன்று - இடபம். "நரை வெள்ளே றொன்றுடை யானை" (தேவா). ஒன்று....களைந்தது - ஒன்று - கூற்றுவன். ஒன்று...சூடிற்று - ஒன்று - பிறை; நகுதலை என்றலுமாம். ஒன்று - உகந்தார் - ஒன்று - ஊர். போலும் என்பன அசைகள் -(10) வரையின் ஆர் உயர் - மலையைப் போல நிறைந்து உயர்ந்த; வரையினால் - மலையினால்; உரையினால் - போற்றலினால்.

தலைவிசேடம் :- திருவெற்றியூர் - பிரமதேவரது தவத்தில் அவரது யோகத் தீயின் நடுவுள் இறைவர் தோன்றி அந்தத் தீயையே கோயிலாக்கொண்டு எழுந்தருளி, ஊழிவெள்ளத்தை மேல் வராது தடுத்தமையின் ஒற்றியூர் எனப்பட்டது என்பது புராணம் வரலாறு. இது "திரையினார் புடைசூழ்" என்று குறுந்தொகைப் பதிகத்துக் குறிப்பிடப்பட்டது. நந்திதேவர் கயிலாயத்தில் பிரதோட நடங் கண்டமை போலவே, அமர்ந்திருந்தவாறு புரியும் நித்திய நடமுங் காணுதல் வேண்டிக்கொள்ள, இறைவர் அருளிய தலம். அந்நடனத்தைத் திருமால் - பிரமதேவர் - உரோமச முனிவர் என்ற இவர்களும் கண்டுய்ந்தனர். இன்னும், வாசுகி, சேடன், வான்மீக முனிவர், சந்திரன், இலவன், தொண்டைமான், ஐந்தருக்கள் முதலியோரும் இங்குப் பூசித்துப் பேறுபெற்றனர். அகத்தியர் திரு மணக்கோலங் கண்டனர். அது திருப்பெரு விழாவில் 9-வது நாளில் விழாக் கொண்டாடப்படுகிறது. இறைவர் வாசுகியைத் தமது திருவுருவத்தில் ஏற்பித்துக்கொண்டபடியால் இன்றும் யாவரும் காணும் உருவ அடையாளங் காட்டிப் படம்பக்கநாதர் எனப்படுவர். மாந்தாதாவின் பொருட்டு இறைவர் எழுத்தறியும் பெருமானாயின சரிதத்தை 1600-ம் பாட்டின் கீழ்க் காண்க. ஏலேலசிங்கனாருக்கு மாணிக்கங்கள் ஈந்தமையால் இறைவர் தியாகேசர் எனப் பெற்றார். ஆளுடைய நம்பிகள் இங்குச் சங்கிலியம்மையாரை மணங்கொண்ட வரலாறு ஏயர்கோன் புராணத்துள்ளும், அறுபான் மும்மை மெய்யடியார்களுள் ஒருவராகிய கலியநாயனார் இங்கு அவதரித்துத் திருவிளக்குப் பணிசெய்து பேறுபெற்ற வரலாறு அவர்தம் புராணத்துள்ளும் காண்க. பட்டினத்து அடிகளார் பேறுபெற்ற தலம். அவர் எழுந்தருளியுள்ள திருக்கோயில், படம்பக்க நாதர் கோயிலுக்குக் கிழக்கே கடற்கரையில் உள்ளது. ஆதிபுரீசுவரரது தனியாலயம் அணிமையில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சுவாமி - படம்பக்கநாதர் - புற்றிடங்கொண்டார்- ஆதிபுரீசுவார்; தியாகேசர்; அம்மை - வடிவுடையம்மை; மரம் - அத்தி; சங்கிலியார் பொருட்டு ஆளுடைய நம்பிகள் சபதம் செய்த மகிழமரம் சிறப்பு. தீர்த்தம் - பிரம தீர்த்தம் முதலியவை. பதிகம் - 8. சுவாமியின் கருப்பக்கிருகக் கோட்டத்தில் துர்க்கை - வட்டப் பாறையம்மை - சிறப்பாக வழிபடப்படுவார்.

இது M. S. M. புகைவண்டிப் பாதையில் திருவொற்றியூர் என்ற நிலையத்தினின்றும் கிழக்கே கற்சாலைவழி 1/8 நாழிகையளவில் உள்ளது.

1603.

அங்குறையு நாளின்க ணருகுளவாஞ் சிவாலயங்கள்
எங்குஞ்சென் றினிதிறைஞ்சி யேத்துமவ ரிறையருளாற்
பொங்குபுனற் றிருவொற்றி யூர்தொழுது போந்துமையாள்
பங்குடையா ரமர்ந்ததிருப் பாசூராம் பதியணைந்தார்.

338