1604. (இ-ள்.) திருப்பாசூர் நகர் எய்தி - திருப்பாசூர்த் தலத்தில்வந்து சேர்ந்து; சிந்தையினில்...மேற்கொள்ள - மனத்தினுள் வந்து ஊறுகின்ற விருப்பம் ஆர்வமாக மேலே பொங்க; உலகுய்ய வேய் இடங்கொண்டு இருப்பாரை - உலகங் கண்டு உய்யும் பொருட்டு அங்கு மூங்கிலை இடமாகக் கொண்டு வெளிப்பட்டு எழுந்தருளி யிருப்பவராகிய இறைவரை; புரம் மூன்றும்.....சிலையாரை - மூன்று புரங்களையும் எரிக்கவும், அதில் அன்பர் மூவர்களுக்கும அருளவும் எடுத்த ஒப்பற்ற மேருவாகிய வெவ்விய வில்லினையுடையவரை; தொழுதெழுந்து போற்றுவார் - நிலமுறத் தொழுது எழுந்து துதிப்பாராய். 339 1605. (இ-ள்.) வெளிப்படை. "முந்தி மூவெயிலெய்த முதல்வனார்" என்று தொடங்கி, மனம் கரைந்துருகும் தன்மை வாய்ந்த திருக்குறுந்தொகைப் பதிகத்தையும், திருத்தாண்டகப் பதிகத்தையும், சந்தம் நிறைந்த திருநேரிசை முதலான தமிழ்த் திருப்பதிகங்களையும் பாடி, வாகீசத் திருவடிகள், எமது பெருமானுடைய திருவருளைப் பெற்றுச் செல்வாராய், 340 1606. (இ-ள்.) வெளிப்படை. அந்த அழகிய சிறப்புடைய திருததலத்தை நீங்கிப், பக்கத உள்ளனவாகிய தலங்க ளெல்லாவற்றினும் சென்று, விடம் விளங்கும் கண்டமுடைய பெருமானை வணங்கி மகிழ்ச்சியோடும் துதித்துப், பின்பு, மெய்ம்மை நிலையினின்றும் சிறிதும் பிறழாத மேன்மையும், நெறியினின் வாழும் தூயகுடிமையும், செம்மையும் உடையவர்களாகிய வேளாண் பெருமக்கள் வாழும் பழையனூர்த் திருவாலங்காட்டினைப் பணிந்தாராகி, 341 1607. (இ-ள்.) திரு.......பல பாடி - "திருவாலங்காடுறையும் செல்வர் தாமே" என்ற மகுடமுள்ள, என்றும் நீங்காத சிறப்பினையுடைய பெருந் திருத்தாண்டகப் பதிகம் முதலாக ஓங்கும் பெருவாய்மைத் தொடையாகிய தமிழ்மாலைகள் பலவற்றையும் பாடி; பிறபதியும்......வணங்கி - ஏனைத் தலங்களையும் பொருந்தும் ஆசைகொள்ள வணங்கி; வடதிசைமேல் வழிச் செல்வார் - அங்கு நின்றும் வடதிசையை நோக்கிச் செல்வாராகி, 342 1608. (இ-ள்.) பல்பதியும்....சென்றடைவார் - பல தலங்களிலும், நெடிய மலைகளிலும், படர்ந்த காடுகளிலும் சென்று அடைவாராகி; செல்கதி......பணிந்து - உயிர் செல்லும் கதியினை முன் அளிப்பவராகிய இறைவர் எழுந்தருளிய திருக்காரிகரையினைப் பணிந்து; தொல்கலையின் பெரு வேந்தர் - பழைமையாகிய கலை ஞானங்களின் வேந்தராகிய நாயனார்; உம்பர் குழாம் தொண்டர்கள் பின் மல்கு - தேவர் கூட்டங்கள் தொண்டர்கள் பின்னே பொருந்தி நிறைந்துள்ள; திருக்காளத்தி மாமலை வந்து எய்தினார் - திருக்காளத்தி மாமலையினைச் சென்று சேர்ந்தருளினார். 343 இவை ஐந்து பாட்டுக்களும் பொருட்டொடர்பும் சொற்றொடர்புரம் பெற்று ஒரு முடிபாக உரைக்க நின்றன. 1604.(வி-ரை.) சிந்தையினில்...மேற்கொள்ள - "சிந்திப் பார்வினை தீர்த்திடும் செல்வனார்" என்ற திருக்குறுந்தொகைப் பதிகத்தின் எடுத்த திருப்பாட்டின் குறிப்பு. விருப்பு ஆர்வம் மேற்கொள்ள - விருப்பு முதற்கண் வந்தெழுந்து, ஊற ஊற ஆர்வமாக விளைந்து, அது பின்னும் மேற்கொள்ள மேற்கொள்ளத் - தொழுது - எழுந்து - பாடினார் என்று கூட்டிமுடிக்க. வேய் இடங்கொண்டு உலகுய்ய இருப்பார் - இத்தலத்தில் மூங்கிலினிடமாக இறைவர் வெளிப்பட்டு எழுந்தருளியுள்ளார் என்பது தலவரலாறு. தலவிசேடம் பார்க்க. வேய் - மூங்கில்போன்ற தோளுடைய உமையம்மையாரை - (ஆகுபெயர்) |