பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்577

 

மெய்ம்மை நிலை.....செம்மையினார் - பழையனூர் வேளாளர் எழுபதுபேர் சொற்பிழையாது தீப்பாய்ந்து உண்மைகாத்த சரிதங் குறித்தது. 1080-ம் ஆண்டுரைத்தவையும் பார்க்க. திருவாலங்காட்டினை எண்ணும்போது முன்னிற்பது அவ்வேளாளர்களது விழுக்குடிமைச் செம்மை; அச்செம்மையினை எண்ணும் போது முன்னிற்பது அவர்களது வாய்மை; ஆதலின் இந்த இரண்டு திறங்களாலும் ஆசிரியர் ஈண்டுக் குறித்தருளினர். வேளாள விழுக்குடிமைச் செம்மையினார் என்பது பாடமாயின் அதற்குத்தக உரைத்துக்கொள்க.

விழுக்குடிமைச் செம்மையாவது தாய் தந்தை வழி இருமரபுந் தூயராகச் சுட்டத்தக்க நியதியில் வழிவழி வருதலும், அதற்குத்தக்க ஒழுக்கமுடைமையுமாம். "இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி" (முருகு).

பழையனூர்த் திருவாலவனம் - பழையனூர் திருவாலங்காட்டினை அடுத்துள்ளது; இரண்டும் சேர்ந்து ஒருதலமாக வழங்கப்படும். ஆலவனம் காடாகவும், அதற்கு அடுத்த பழையனூர் ஊராகவும் உள்ளபடியாலும் இவ்வாறு வழங்கப்படும். "பழையனூ ராலங் காட்டெம் மடிகளே" (பிள்ளையார்); "பழனை மேய ஆலங்காட் டடிகளாரே" (அரசுகள்); "பழையனூர் மேய அத்தா வாலங் காடா" (நம்பிகள்) என்ற மூவர் பதிகங்களின் ஆட்சிகளும் காண்க. "பழனை பதியா வுடையார்....திருவாலங்காடுறையும் செல்வர்" என்ற தேவாரக்கருத்தும் காண்க.

மைம்மருவும் - என்பதும் பாடம்.

341

1607.(வி-ரை.) "திருவாலங்காடுறையும் செல்வர்தாமே" என்பது பதிகத்தின்
மகுடம்.

சிறப்பின் ஒருவாத - சிறப்பினின்றும் நீங்காத என்பது கருத்து. உறுதி உணர்த்துதற்கு ஒருவாத என எதிர்மறையாற் கூறினார். "ஒன்றா வுலகனைத்து மானார் தாமே யூழிதோ றூழி யுயர்ந்தார் தாமே...திருவாலங்காடுறையும் செல்வர் தாமே" என்று சிவபெருமானுக்குத் தாமே எனச் சிறப்பாயுரிய தன்மைகளை எடுத்தோதித் தேற்றமும் பிரிநிலையுமாகிய ஏகாரத்தாலுணர்த்தும் சிறப்புக் குறித்தது.

பெருந் திருத் தாண்டகம் - "அரியானை" என்ற தில்லைத் திருத்தாண்டகப் பதிகத்துக்குப் "பெரியதிருத்தாண்டகம்" (1440) என்றது இங்குக் கருதத்தக்கது. இந்த இரண்டு திருத்தாண்டகப் பதிகங்களையுமே ஆசிரியர் இவ்வாறு விதந்தெடுத்தோதினமையும் குறிக்கத்தக்கது.

முதலாம் ஓங்குதமிழ்த் தொடைமாலை பல - திருநேரிசை முதலியன. பல என்றதனால் நாயனாரருளியனவா யறியப்படுகின்ற பலபதிகங்களுள் திருநேரிசைப் பதிகம் ஒன்றே கிடைத்துள்ளது!

பெருவாய்மை - "பெருந் திருத்தாண்டகம்" என்றதிற்போந்த கருத்து.

பிறபதியும் - இவை வளைகுளம், திருத்தணிகை முதலாயின.

வடதிசைமேல் வழிக்கொள்வார் - திருப்பாசூரினின்றும் வடக்கே திருக்காளத்தியை நோக்கி வழிச்செல்வார். வழிக் கொள்ளுதல் - வழி நடத்தல். மலைகள் நிறைந்த இடமாதலின் சுற்றிச் செல்லும் மலைவழி பலவும் கண்டு என்பது குறிப்பு.

வழிக் கொள்வார் - எதிர்கால வினைப்பெயர்; அடைவார் - பணிந்து - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.

மருவு ஆர்வம்பெற - ஆசை மேலும் வளரப்பெற்றமையினாலே. பெறும் பொருட்டு என்றலுமாம். பின்னர்த் திருக்கயிலை காணுமது காதலிக்கும் சரிதக் குறிப்பு. வடதிசை மேல் என்ற குறிப்புமது.

342


பழையனூர்க் கோயில் - முன்பார்வை


திருவாலங்காடு