பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்587

 

மேவு - தவத்துக்கு இரங்கி வெளிப்பட்டு எழுந்தருளி யமர்ந்த.

திருப்பருப்பதம் - வடமொழியில் ஸ்ரீபர்வதம் என்றும், ஸ்ரீசைலம் என்றும்
வழங்கும்.

இந்த வடநாட்டுக் கயிலை யாத்திரை வழியின் ஏற்ற விழிவுகளும், வழிச் செலவின் அங்கங்குத் தங்கிச் செல்லவும் முடுகிச் செல்லவும் உள்ள சிரமங்களும், தீவிர உணர்ச்சிகளும் குறிக்கச், சொல்லும் பொருளும் ஒத்தியலும்படி இப்பகுதியைத் தங்குதல் நீளுதல் இசை பொருந்திய சந்த யாப்பினால் யாத்த ஆசிரியரது தமிழ்க் கவிநலம் காண்க. திண்ணனாரது வேட்டை வினை கூறும் பகுதி (717 - 740) யும், புகழ்ச்சோழ நாயனார் புராணத்துள் போர்வினை கூறும் பகுதியும் (மேற்படி - புரா - 20 - 30), ஏனாதி நாத நாயனார் புராணத்துட் போர் கூறும் பகுதியும் (622 - 631), பிறவும் இங்குக் கருதுக.

கான்யாறு - காடுயாறு - என்பனவும் பாடங்கள்.

348

1614.

மான விஞ்சையர் வான நாடர்கள் வானி யக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்ன காதிபர் காம சாரிக ளேமுதல்
ஞான மோனிக ணாளு நம்பரை வந்தி றைஞ்சி நலம்பெறுந்
தான மான திருச்சி லம்பை வணங்கி வண்டமிழ் சாற்றினார்.

349

(இ-ள்.) மான விஞ்சையர் - வலிமை பொருந்திய வித்தியாதரர்களும்; வானநாடர்கள் - விண்ணுலகத்திலுள்ள தேவர்களும்; வான் இயக்கர்கள் - ஆகாயத்தில் இயங்குகின்ற இயக்கர்களும்; சித்தர்கள் - சித்தர்களும்; கான கின்னரர் - கானத்தில் வல்லவர்களாகிய கின்னரர்களும்; பன்னகாதிபர் - நாகவுலகத்தார்களும்; காமசாரிகளே முதல் - தம் இச்சைப்படி சஞ்சரிக்கின்ற தேவசசாதியார்களும் என்றிவர்கள் முதலாக; ஞான மோனிகள் - சிவஞானிகளாயுள்ள மௌனிகளும்; நாளும் வந்து நம்பரை இறைஞ்சி நலம் பெறும் தானமான திருச்சிலம்பை - நாடொறும் வந்து இறைவரை வணங்கி நன்மையடைகின்ற இடமாகிய திருப்பருப்பதத்தை; வணங்கி வண்தமிழ் சாற்றினார் - வணங்கி வளப்பமுடைய தமிழ்ப்பதிகம் பாடியருளினார்.

(வி-ரை.) விஞ்சையர் - விஞ்சை - வித்தை; வித்தைகள் பலவும் பயின்றவர்களாதலின் வித்தியாதரர்கள் எனப்படுவர்.

இயக்கர்கள் - யக்ஷர் என்பது வடமொழி. வானில் இயங்குகின்றதும், மக்கள் முதலிய உயிர்களைப் பீடித்து இயக்குவதும் உடையார். "சிற்றம்பலத்தான், சேயின தாட்சியிற் பட்டன ளாமித் திருந்திழையே" (மெலிவுகண்டு செவிலி கூறல் - திருக்கோவை - 282), "அணங்குற்ற நோயறி வுற்றுரை யாடுமி னன்னையரே" (கட்டுவைப் பித்தல் - மேற்படி - 283), "பெண்ணினைப் பிறங்கற் சாரற், சூர்கொலாந் தீண்டிற் றென்றார்" (கந்தபு - வள்ளி - திருமண - 154) முதலியவை காண்க.

சித்தர்கள் - அணிமா முதலிய சித்துகக்ள் பலவும் வல்லவர்கள். "திண்டிறற் சித்தர்களே கடைக் கூழைச் சென்மின்கள்" (திருவா - படைஎ - 2) என்று மணிவாசகனார் இவர்களது திறனை எடுத்துக்கூறுவதும், தாயுமானார், "வித்தகச் சித்தர்கணமே" என்று சித்தர்கணம் என்ற பகுதியில் இவர்களது வலிமைகளைப் பலவாறு எடுத்துக்காட்டுவதும் கருதுக. திருவாலவாயில் எல்லாம் வல்ல சித்தராகிய திருவினையாடலும், சித்த மூர்த்திகளாகி வந்த இறைவர் அங்கங்கும் பல திருவிளையாடல்கள் செய்தருளியனவும் கருதுக. சித்தர்கள் என்ற அடைமொழியின்றிக் கூறியதும் இவர்களது பெருவலிமையைக் காட்டுவது.