பக்கம் எண் :


588திருத்தொண்டர் புராணம்

 

கானகின்னரர் - கின்னரர்கள் இசையில் வல்லதோர் தேவச்சாதியார். கானம் என்றது இவர்களது இயல்பை விளக்கவந்த இயற்கை யடைமொழி. இத்தன்மை பற்றிக் கின்னரம் என்பது இசையைக் குறிக்க வழங்கும் மரபும் காண்க.

காமசாரிகள் - தம் இச்சைப்படி எங்கும் சஞ்சரிக்க வல்ல வோர் தேவச் சாதியாா. "வேறொருவர் காணாம லுலகத் துலாவு"தல முதலிய தன்மைகள் பெற்றுடையவர்கள், இவர்கள் சமபுத்தீவுக்கப்பால் கிம்புருட வர்க்கத்தில் உள்ள ஓரு கூட்டத்தார். சில சித்துக்கள் வல்லவர். (கந்தபுரா - அண்டகோசப் படலம்.)

ஞான மோனிகள் - சிவஞானிகளே மோனமாகிய சைவப் பெருநிலையில் விளங்குபவர்கள். "மௌன மோலி யயர்வுறச் சென்னியில் வைத்த இராசாங்கத்திலமர்நதது வைதிக சைவ மழகிதந்தோ" (தாயுமானார்). "ஞானிகளாயுள்ளார்க ணான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள் செற்று, மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவஞ்செய்யு முதுகுன் றமே" (பிள்ளையார் - தேவா). ஞானிகளும் மோனிகளும் என்று பிரித்துரைத்தலுமாம். ஞானமோனிகள் தவஞ்செய்து வழிபட ஏற்ற இடம் இப்பெருமலையாமென்பது இன்றுங் கண் கூடாகக் காணத்தக்கது.

மான.....திருச்சிலம்பு - விஞ்சையர், வானநாடர், இயக்கர்கள், சித்தர்கள், கின்னரர், பன்னகாதிபர், காமசாரிகள் என்ற இவர்கள் பலவகைத் தேவக் கூட்டத்தார்கள். இவர்களே முதல் - ஞான மோனிகள் என்றது தேவக்கூட்டத்தார் முதலிய யாவரினும் சிறந்தவர்கள் ஞானமோனிகளாவர் என்று இறுதியில் வைத்து முடித்துக் காட்டியபடியாம்.

நாளும் வந்து வழிபடும் - தேவர்கள் வந்து வழிபடும் திருச்சிலம்பு இது என்பதனை "இமையவர் பரவியேத்த" (நேரிசை - 7) என்றும், "துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி, மறையொலி வாய்மொழியான் வானவர் மகிழ்ந்தேத்த" (பிள் - தேவா - வியாழக்குறிஞ்சி - 5) என்றும் வரும் இத்தலத் தேவாரங்களாலறிக. "தோடவிழ்ந்த கொன்றை யந்தார்த் தொல்லோன் கோலம், அமரர்தொழும் விழவு நோக்கப் பருப்பதத்தை யடைத லுற்றான்" (சுமதி....பட - 5) என்ற பேரூர்ப் புராணமும் காண்க. இவ்வாறு தேவச்சாதியார்களும், பெரியோர்களும் வழிபடும்போது முழக்கும் துந்துபி முதலிய ஓசைகள் பக்குவமுடைய மக்களும் கேட்க நிகழும் என்பது துணிபு. "கதிரவ னுச்சி நண்ணக் கடவுண்மால் வரையி னுச்சி, யதிர்தரு மோசை யைந்து மார்கலி முழக்கங்காட்ட" (750) என்றவிடத் துரைத்தவையும், நாரணந்நான் முகரைங்கைப் புத்தேளிர் வடிவே னவின்றவலக் கரத்திறைவர் முதலோ ரநேகர், காரணியு மிடற்றிறைவர் கழறொழுதங் கிருப்பர், காலங்க டொறுமாங்குக் கறங்கிசைத் துந்துபியின், சீரணிநல் லொலிமுத்தி யருக்கருகல் லாது செவியி லுறாது" (விம்மிதப் படலம் - 13) என்ற பேரூர்ப்புராணமும், பிறவும் கருதுக.

திருச்சிலம்பு - கயிலாயத்தை அடைமொழியின்றித் திருமலை என்றாற்போல இத்தலமும் திருச்சிலம்பு - திருப்பருப்பதம் - ஸ்ரீபர்வதம் - ஸ்ரீசைலம் என வழங்குவது இது கயிலாயத்திற் கொப்புடையது என்று காட்டுவதாம். அங்கும் தேவர் வழிபாடு உள்ளது. இது பற்றித் திருமலைச் சிறப்புப் பார்க்க.

திருச்சிலம்பை வணங்கி வண்டமிழ் பாடினார் - மலையினையே வணங்கி அவ்வாறே பதிகம் பாடியருளினார். "பருப்பத நோக்கி னாரே" என்ற மகுடம் காண்க. கயிலைசெல்லும் காதல் நோக்கத்திற் சென்றாராதலின் மலையை வணங்கி அம்மட்டில் மேற்சென்றனர். "எம்ம ருங்குமோர் காத லின்றி" (350) என வரும்பாட்டிற் கூறுதல் காண்க.

349