1615.(இ-ள்.) அம்மருங்கு....அவர் - அதன் பக்கம் நின்றும் கடந்து செல்கின்றவர்; ஆர்கொள்....சிந்தையால் - திரிசூலமாகிய கூரிய படையை ஏந்திய, ஆத்தி மாலையை அணிந்த சிவபெருமானது வெள்ளிய திருக்கயிலாய மலையை நினைந்து எழுந்த ஒரு சிந்தையினால்; எம்மருங்கும் ஓர் காதல் இன்றி - எவ்விடத்திலும் வேறு எந்த ஆசையும் இல்லாமல்; இரண்டு......அணையும் - இரண்டு பக்கத்திலும் தமது ஆர்வங் கண்டு வியப்படைந்த அடியார்கள் பக்கத்தில் வந்து கூட; தெலுங்கு......எய்தினார் - தெலுங்கு நாட்டைக் கடந்து கருநட நாட்டை அடைந்தவராய்; 350 1616.(இ-ள்.) கருநடம் கழிவு ஆக எய்தியபின் - கருநட நாட்டின் எல்லை தீர்ந்த இடத்தைச் சேர்ந்த பின்பு; கலந்த ......பிற்பட - கலந்துள்ள காடுகளும், திருநதிகளின் துறைகள் எல்லாமும், பயின்று நெடுந்தூரம் நீண்டு செல்கின்ற மலைவழிகளும், பெரு நலங்களைத் தரும் நாடுகளும் ஆகிய இவைகள் எண்ணில்லாதவை பிற்பட்டொழியும்படி; செறி பொற்பினால்...சோலைய - மரங்கள் செறிந்து அழகுபட வளர்ந்த தன்மையினால் மேல்வரும் ஞாயிறு வலமாகச் செல்கின்ற சோலைகளையுடைய; மாளவத்தினை நண்ணினார் - மாளவதேயத்தை அடைந்தவராய்; 351 1617.(இ-ள்.) அங்கு......போகி - அவ்விடம் முழுதும் கடந்து நீங்கிச் சென்று; அருஞ்சுரங்கள் கடந்து சென்று அரிய காடுகளைக் கடந்துபோய்; எங்கும்........போய் - எங்கெங்கும் மிகுதியாகிய அறச்சாலைகள் நீடியுள்ள இலாட தேசத்தையும் தாண்டிச் சென்று; மங்குல்......கடந்து - மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த மலைகளுடனே வனங்களையும் ஆறுகளையும் கடந்து; அயல்.....எய்தினார் - அருகே தாமரைகள் மலரும் வயல்களையுடைய மத்திம பைதிரம் என்னும் நாட்டினை யடைந்தவராய்; 352 1618.(இ-ள்.) அன்ன நாடு கடந்து - அந்த நாட்டினைக் கடந்து; கங்கை அணைந்துசென்று வலம்கொளும் - கங்கையாறு வந்து சென்று வலமாக வருகின்ற; மின்னுவேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து - ஒளி பொருந்திய சடையுடைய பெருமான் எழுந்தருளிய வாரணாசியை விருப்பத்துடன் வணங்கி வழிபட்டு;உடன் பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து - தம்முடனே பின் பற்றி வந்த அடியவர்களை அவ்விடத்தில் விடுத்து; கங்கை பெயர்ந்துபோய் - கங்கைக் கரையைவிட்டு மேற்சென்று; மன்னு.......முந்தினார் - பொருந்திய காதல் புரிகின்ற திருநாவுக்கரசர் வந்து கல் நிரம்பிய மலைக் கானல்களை யடைந்தனர். இந்த நான்கு பாட்டுக்களும் பொருட்டொடர்பு கொண்டு ஒரு முடிபாக்கி உரைக்க நின்றன. 1615.(வி-ரை.) ஆர்கொள் - செம்மல் என்று கூட்டுக. ஆர் - ஆத்தி. ஆர்கொள் - நிறைந்த - கூரிய என்றுரைப்பாரு முண்டு. சூல அயிற்படைச் செம்மல் - சூலம் சிவபெருமானுக்குச் சிறப்பாயுரிய படை. "சூலபாணி" என்பது சிவன் பெயர்களுள் ஒன்று. சூலப்படைச் செம்மல் - கயிலை - என்றது நொடித்தான் மலை என்னும் பொருள் தந்து நின்றது. சூல மேந்துதல் மூவருக்கும் முதல்வன் என்று காட்டும் என்ப ஆகலான் இங்கு இச்சிறப்பாற் கூறினார். "ஒடுங்கி" என்ற சிவஞானபோதக் கருத்தும் காண்க. வெண்கயிலைப் பொருப்பு - பனிமூடியிருத்தலால் வெண்மலை என்றார். "பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தெனப், பன்னு நீள்பனி மால்வரைப் பாலது" (11) என்ற திருமலைச் சிறப்பை இங்கு நினைவு கூர்க. ஓர் சிந்தையால் - நிலைபிறழாது ஒருவழியே செல்லும் சிந்தை செலுத்த அதனால். |