பக்கம் எண் :


592திருத்தொண்டர் புராணம்

 

எம்மருங்கும் ஓர் காதல் இன்றி - எவ்விடத்தும் எவ்வகையானும் எந்தக்காதலும் இல்லாமல். காதலும் என முற்றும்மை தொக்கது. அவ்வாறு வேறு எக்காதலுமில்லாமைக்குக் காரணம், கயிலைப் பொருப்பை நினைந்த ஓர் சிந்தை கொண்டதாம். "இனியுறு பயனாதல் இரண்டுற மனம் வையேல்...பருப்பதம் பரவுதுமே" (தேவா - பிள்ளையார்) எனற கருத்துக்காண்க. வேறு தலங்கள், புனிதயாறுகள், மலைகள் முதலியவற்றுக்குச் செல்லும் காதலுமின்றி என்க.

வியந்துளோர் - இரண்டுபாலும் - அணையும் என்று கூட்டுக. வியப்பாவது வேறொன்றும் காணாது ஒரே சிந்தையாய்ச் சென்று கொண்டிருக்கக் காண்போரது மன நிகழ்ச்சி. கைம்மருங்கு - நாயனாரது பக்கத்தில் தொடர்ந்து பின்பற்றி. இவ்வாறு அணைந்தவர்களையும் நாயனார் வாரணாசியில் விடுத்துச் சென்றமை பின் உரைக்கப்படும் (1628). அணைய என்பது அணையும் எனத் திரிந்தது.

தெலுங்கு - மொழியின் பெயர் அது வழங்கும் நிலத்துக்கு வந்தது; ஆகுபெயர்.

கருநடம் - கருமண் பரப்புள்ளநாடு என்ற காரணத்தால் கருநாடு எனப்பட்டது. கருநாடு கருநடம் என மருவிற்று. இங்குக் கன்னடம் என்றபாடம் பிழை எனத் தோன்றுகிறது. மேல்வரும் பாட்டில் கருநடங் கழிவாக என்று வருவது காண்க. Karnatics என்பர் நவீனர். கன்னடம் என்பது வேறு; அது கன்னட (canarese) மொழி வழங்கு நாடு.

விரைந்துளோர் - என்பதும் பாடம்.

350

1616. (வி-ரை.) கழி வகை - பின்னாகக் கழிய.

கலந்த வனங்கள் - நாட்டின் இடையிடையே கலந்து பரவிய காட்டின் பகுதிகள். இது அந்நாட்டியல்பு.

திருநதித் துறை யாவையும் - இவை கிருட்டிணாநதி, கோதாவிரி, மகாநதி முதலிய புண்னிய நதிகள்; ஆதலின் திருநதித்துறை என்றார். ஒவ்வொன்றும் பல பிரிவுகளையும் துறைகளையும் உடையனவாதலின் யாவையும் எனப்பட்டது. வட நாடு தீர்த்தச் சிறப்பு அளவில் மிக்கிருப்பதும் குறிப்பு.

பயில் சேண் நெடும் கிரிவட்டை - பயில் - எண்ணில்லாத மக்கள் செல்லும். சேண் - உயர்ந்து செல்லும். நெடும் - நீண்டதூரம் செல்லும். வட்டை - வழி.

பெருநலம் கிளர்நாடு - அந்தப் பெருமலைப் பாதைகளின் இயல்பு குறித்தது. பெரு நீர்நிலைகளையுடையமையால் மிக்க வளங்கள் பலவும் தந்து விளங்கும் நாடுகள். திருக்கோகர்ணத்தை அரசுகள் பாடிச்சென்றது இவ்வழிபோலும்.

செறி பொற்பினால்.....சோலைய - செறி - பொற்பினால் - இலைகள் செறிதலும், மரங்கள் அடர்தலும், வானள வோங்குதலும், மிக்க பரப்புடையனவாலும என்றிவற்றால். வருநெடுங்கதிர் - மேலெழுந்துவரும் ஞாயிறு. கோலும் - ஊடுருவிச் செல்லமாட்டாது புறத்திற் செல்லும். கதிர் கோலும் - கதிரை மறைக்கும் என்பாருமுண்டு. இது சோலைகளின் சிறப்புக் குறித்தது.

மாளவம் - Malwa என்பர் நவீனர். 56 தேசங்களுள் ஒன்று.

ஏகியபின் - சோலை வேலியம் மாளவ - என்பனவும் பாடங்கள்.

351

1617.(வி-ரை.) அங்கு முற்றி - அத்தேசமுழுதும் நடந்து.

எங்கும்...இலாடபூமி - இலாடம் - 56 தேசங்களுள் ஒன்று. வங்காளதேசத்தின் ஒரு பகுதி. தருமச்சாலைகளும், வழிச்செல்வார்க்கு உணவு, உறையுள், மருந்து முதலிய வசதிகளை உதவும் பிற அறநிலையங்களும் அங்கங்கும் காண உள்ள சிறப்புங் குறிக்கப்பட்டன. நீடும் என்ற ஆசியின் பயனாக அவை இன்றும் பெருக.