இனி மீளும் அத்தனையே உமக்குக்கடன்" என்று சொல்ல, (அவர்) "கயிலையிலிருக்கை கண்டு அல்லால் மீளேன்" என மறுத்தாராக (1631), மாதவர் - அவர் துணிவு அறிந்து - அவர் தமை அறிய - விசும்பிடைக் கரந்து - "நாவினுக்கரசனே! எழுந்திரு" என்று நீண்மொழியால் உரைப்ப; (அவர்) தீங்கு நீங்கிய யாக்கை கொடு எழுந்து திகழ்வாராய் (1632), "அண்ணலே! அமுதே! நாயகனே! நின் கயிலைக்கோலம் கண்ணினாற் கண்டு தொழ அருள்புரி" எனப் பணிந்தா(ராக) (1633), அத்தொண்டரை நோக்கி விண்ணில் எழும் திருவாக்கினால் "இப்பொய்கை முழுகித் - திருவையாற்றிற் கயிலையில் நாம் இருந்த முறைமை - காண்" என - இறைவர் - பணித்தார் - (1634) என்று இந்த ஏழு பாட்டுக்களையும் தொடர்ந்து கூட்டி முடித்துக் கொள்க. வற்கலை - ஆடை - மரவுரி உடை. சடை மவுலி - சடையாகிய முடி. மவுலி - மணி முடிபோல முடித்ததனால் மவுலி என்றார். சடைமவுலி - உருவகம். மெய்யில் நீறும் - என்று மாற்றிக் கொள்க. ஆசு இல் மெய்த்தவராகி - ஆசு - குற்றம். உயிர்களின் குற்றத்தை இல்லையாகச் செய்யும் பொருட்டுத் தாம் மெய்த்தவராக உள்ளவர். மெய்த்தவர் - "நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும், வென்றானை" (தாண் - வீழி. 3), "யோகியா யிருந்துயிர்க்கு யோகத்தைப் புரித லோரார்" (சித்தி), "பொறிவாயி லைந்தவித்தான்" (குறள்) முதலியவை காண்க. நின்றவர் - எங்கும் நிறைந்து நின்றவர் என்பதும் குறிப்பு. பேச உற்றது ஓர் உணர்வு உற - முன்னர் எச்செயலுமின்றி (1625) தங்கிக் கிடந்தனராகவும், முனிவர் நொந்து நோக்கிடத் தாமும் எதிர்நோக்கிட வல்லவராயினர்; அவர் பேசிட அவரை நோக்கிப் பேசும் உணர்ச்சி சிறிது கூடவே பேசவும் வல்லராயினர். உடலின் ஏனைச்சத்திகளைப் பெறுதல் பின்னர்க் காணப்படும் (1632). ஓர் - ஓரும் - நினைக்கும் என்றதும் குறிப்பு. பெரியோர் - செயற்கரும் செய்கை செய்தமையாற் பெரியோர் என்றார். 363 1629. (வி-ரை.) வண்டுலாங் குழல் மலைமகள் - "தேனார்ந் துக்க, ஞானப்பூங்கோதையாள் பாகத்தான்" (தாண்) என்று திருக்காளத்தியில் அம்மையப்பரைப் பணிந்த குறிப்பினால் வடகயிலைக்குப் போந்தனராதலின் அத்தன்மையே நினைவில் ஊன்றி நிற்க இவ்வாறு கூறினார். வண்டுகள் உலாவி மொய்த்தல் அம்மையார் கூந்தலின் இயற்கை மணங்கருதி. திருவிளையாடற்புராண வரலாறுங் கருதுக. வடகயிலை - தென்கயிலை (காளத்தி) கண்ட அக்குறிப்பினால் வடகயிலை வணங்கக் காதல் போந்தது என்பது குறிப்பு. இருக்கும் அப்பரிசு - வீற்றிருந்தருளும் அந்த என அகரம் பண்டறி சுட்டு திருக்கோலம். விருப்பொடும் காதலின் - விருப்பந்தூண்ட, அதனால் ஆசை அதிகரிக்க, அக்காரணத்தால். "கூடு மன்பினிற் கும்பிடலே யன்றி" (143). கொண்ட என் - குறிப்பு - கொண்ட - உட்கொண்ட. இப் பயணத்தை மேற்கொண்ட என்றலுமாம். குறிப்பு - குறிக்கோள்; குறிவைத்த பொருள். "உண்மை நின்ற பெருகுநிலைக் குறியாளர் அறிவு" (செங்காட்டங்குடி - தாண்); "அண்ணல் பாதங்கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் றாபரத்தை" (நேரிசை - ஆப்பாடி - 4); "தாங்கள் குறி வாராமற் கைவிட்டார்" (802). குறிப்பு - கருத்து என்பாருமுண்டு. கண்டு கும்பிடும் - புறக் கண்ணாலும் கண்டு வழிபடும். அகக் கண்ணாற் கண்டு கும்பிட்டிப்பே னாயினும், புறக் கண்ணாலும் கண்டு என்க. புறக் கண்ணாலும் |