பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்607

 

என்பது வருவிக்க. சிவபூசையில் அந்தரியாகம் என்னும் அகப்பூசை நிலையினின்றும் புறப் பூசைக்குட் புகும்போது இவ்வாறு செய்து கொள்ளும் பிரார்த்தனையை இங்கு நினைவு கூர்க.

விருப்பொடும் காதலின் - விருப்பம் இந்த யாத்திரையைத் தொடங்கச் செய்தது; காதல் அதனை மேன்மேல் இதுவரை ஊக்கிச் செலுத்தியது.

இப்பாட்டு முனிவரை நோக்கி நாயனார் விளம்பிய விடை.

364

1630. (வி-ரை.) இப்பாட்டு நாயனார் கூறிய விடையைக் கேட்ட முனிவர் மேற்சொல்லியது.

காசினி மருங்கு பயிலும் மானிடப் பான்மையோர் - காசினி - "பொறிகட்கிடரீயு ஞாலம்" (புறப். வெ. மா. 9. 42) என்றபடி மயக்கஞ்செய்யும் பூமி. நல்வினைப் பயனும் தீவினைப் பயனும் கலந்து அனுபவிக்கப்படும் கன்ம பூமியாகிய நிலவுலகத்துப் பயிலும் மனிதத் தன்மையினர். மானிடர் என்னாது மானிடப் பான்மையோர் என்றதனால் மக்கட் பிறப்பில் வந்தாராயினும் மனிதத் தன்மை நீங்கி, ஆளுடைய அரசுகள் - ஆளுடைய நம்பிகள் முதலிய சிவத்தன்மையுடைய எந்தம் பெருமக்கள் போல்வார் அடைகுவர்; ஏனைய மனிதப் பான்மையினர் அடைதலரிது என்றபடி. "ஞானவா ரூரரைச் சேரரை யல்லது நாமறியோ, மானவ வாக்கை யொடும் புக்கவரை" (திருத்தொண் - அந் - 86) எனவம் "ஊனுயிர் வேறு செய்தான்" (நொடித்தான் மலை - தேவா) எனவும் வரும் திருவாக்குக்கள் காண்க.

வேற்படை யமரர் - பலவகைப் படையும் ஏந்திய விஞ்சையர் முதலிய தேவச் சாதியர்.

வந்து என் செய்தீர் - என்று மாற்றுக. வினா இரக்கக் குறிப்புப்பட நின்றது. வந்தது மிக்க அறியாமையாம் என்றபடி.

விளம்பி - எனச் - சொல்ல - என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. முனிவர் மேலும் தொடர்ந்து கூறுவாராய், இனி மீள்வதே உமது கடன் என்று தமது முடிபை மேல்வரும் பாட்டிற் கூற வைத்து, அம்முடிபுக்குரிய காரணத்தை மட்டும் இப்பாட்டிற் கூறிய கவிநயம் காண்க.

விளம்பீர்! - என்பதும் பாடம்.

365

1631. (வி-ரை.) அத்தனை - அவ்வளவே. பிரிநிலை ஏகாரம் தொக்கது.

கடன் - கடமை. செய்யத் தக்கது என்ற பொருளில் வந்தது.

விளங்கும்...முந்நூன் முனி - இங்கு வந்து "என்ன காரியம் செய்துவிட்டீர்? மீளும் அத்தனையே இனி உமக்குக் கடன்" என்று சொல்லும்போது, முனிவரது திருமேனியில் கண்ட மெய்ப்பாடு குறித்தது. நாயனார் தங்கிக் கிடந்த நிலை கண்டு நொந்து நோக்கிப் பரிந்து கூறும் மிக்க ஆர்வ நிலையும், பரிவு நிலையும் சொல்லான் மட்டுமன்றிப் புறத்திலும் தோன்றும்படி முனிவர் திருமேனியில் அசைவு தோன்ற அதனால் அவர் அணிந்த முந்நூல் ஆகத்திலும் தோளிலும் துவள்வுற்றது என்பது குறிப்பு.

ஆளும் நாயகன் - முக்காலத்துக்கும் பொதுவாகிய நிகழ்காலப் பெயரெச்சத்தாற் கூறினார், எக்காலமும் காப்பதற்கு நாயகன் உளன்; நான் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்ற குறிப்புணர்த்துதற்கு. நாயகன் - என்றமையால் நாயகத் தன்மையாலும் தம்மையடையும் உயிர்களுடைய காதன்மையை நிறைவேற்றக் கட்டுப்பட்டவன் என்பது குறிப்பு. நாயகன் - நடத்துபவன். "காதலின் அடைந்தேன்" (1629) என்ற குறிப்பும் கருதுக.

இருக்கை - வீற்றிருக்கும் திருக்கோலம், "இருந்த நின் கோலம்" (1633).

கண்டு அல்லால் - கண்டால் என்பது கண்டு எனத் திரிந்து நின்றது.