மாளும் இவ்வுடல் - என்றைக்கிருப்பினும் ஒரு நாள் அழியுந் தன்மையுடையதாதலின் இப்போது உமது சொல்வழி மீளினும் பின் ஒருநாள் அழிவெய்துவது உறுதி; அந்நாளி லிறந்துபடுவதினும் கயிலைகாணும் இந்த நன்முயற்சியிற்படுவது நன்றாகும் என்பது குறிப்பு. மாளும் - இப்போது அழிவெய்திக் கொண்டிருக்கும் என்பதும் தொனி. 366 1632. (வி-ரை.) ஆங்கு - அவ்வாறு மறுத்து உரை செய்த வழியால். அவ்விடத்து - அப்பொழுது - என்றலுமாம். துணிவு அறிந்து - இறைவர் எக்காலத்தும் வரும் எல்லாமும் ஒருங்கே தாமே அறிய வல்லவராதலின் நாயனார் மறுத்துரைத்தது கொண்டு அவரது துணிவை அறிந்தனர் என்பது பொருந்தாது. அறிந்து - உலகுயிர்கள் அறியும் பொருட்டுத் தாம் அறிந்து என்க. பதிநிலையில் எல்லாம் அறியும் நிலைவேறு; உயிர்கள் அறியும்படி எண்ணித் தாம் அறியும் நிலைவேறு. "நுகருமா நுகரே" முதலிய திருவிசைப்பாக்கள் கருதுக. "மூவுலகு நின்னிலைமை யறிவித்தோம்" என்றதும், "காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின்" (சிவஞானபோதம் - 11. சூத்) என்ற ஞான சாத்திரமும் காண்க. அவர்தமை அறிய நீங்கும் என்ற குறிப்பும் காண்க. அவர் தம்மை அறிய நீங்கும் - எதிரில் நேர் நின்றபோது அறிய வைக்காது. நீங்கினபோது அறியவைத்தல் இறைமைத் தன்மைகளுள் ஒன்று. எம்பெருமக்களின் சரிதங்களுட் பல பகுதிகளிலும் பல திருவிளையாடல்களிலும் வரும் வரலாறுகளை ஈண்டுச் சிந்திக்க. அறிய நீங்கும் மாதவர் - காந்து - அறியும்படி சிறிது தூரம் சென்று பின்னர் மறைந்து. நீண்மொழி - நீளுதல் - அசரீரியாக ஆகாயத்தில் நிறைந்து வெளிப்படுதல், "விண்டலத்தி லெழுபெருந் திருவாக்கு" (1634) என்று பின்னர் இதனை விளக்குதல் காண்க. ஓங்கும் நாவினுக் கரசனே எழுந்து இரு - இது இறைவரது அசரீரி வாக்கு. நா - ஓங்குதல் - உண்மையால் உயர்தல், "அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்" (திருஞான - புரா - 1088) ஓங்கும் என்றதனை அரசனே என்பதனுடன் கூட்டி உயர்ச்சிபெறும் என்றுரைத்தலுமாம். நாவினுக்கரசனே! ஓங்கு - என்று வாழ்த்தாகிய வியங்கோள் வினைமுற்றாகக் கொண்டுரைத்தலு மொன்று. எழுந்து இரு - எழுதல் - உடல் தேய்ந்து செயலின்றி வீழ்ந்து கிடக்கும் நிலையினின்றும் எழுதல்; இருத்தல் - பின்னர்ப் பலகாலம் நிலவுலகிற் சிவநெறி பயின்றிருத்தலும், இறுதியில் சிவானந்த ஞான வடிவேயாகித் திருவடிக்கீழ் இருத்தலுமாம். தீங்கு நீங்கிய - 1622 முதல் 1625 வரை கூறியபடி உடலில் தேய்ந்த ஊறுகள் யாவையும் நீங்கி முன்போல நலம்பெற்ற. யாக்கை - கட்டுவிட்ட நிலையினின்றும் நீங்கி முன்புபோற் கட்டப்பட்டதென்று குறிக்க யாக்கை (யாத்தல் - கட்டுதல்) என்ற பெயராற் கூறினார். எழுந்து - எழுந்திரு - என்றபடி எழுந்து. ஒளிதிகழ்வார் - ஒளி - சிவவொளியில்; முன்தேய்ந்து சிதைந்த உடம்பு சிவனருளால் தீங்கு நீங்கியதாதலின் சிவனருள் ஒளிபெற்று விளங்கியது என்க. "அங்கண் மாயை யாக்கையின்மே லளவின் றுயர்ந்த சிவமயமாய்" என்றவிடத்துரைத்தவை நினைவுகூர்க. "பொங்கிய வொளியி னீழற் பொருவிலன் புருவமானார்" (கண் - புரா) "வென்றிகொ டிருநீற் றொளியினில் விளங்கும்" (திருஞான - புரா ) - முதலியவை காண்க. |