திகழ்வார் - எதிர்கால வினையெச்சமுற்று. திகழ்வாராகிப் - பணிந்தார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. 367 1633. (வி-ரை.) இது நாயனார் வேண்டிய வேண்டுகோள். அண்ணலே! - அமுதே! - வேதநாயகனே! என - நாயனார் இந்த மூன்று வகையால் இறைவரை அழைக்கின்றார். எனை "யாண்டு கொண்டு அருளிய" என்பதனை அண்ணலே! என்றதனுடனும், அமுதே! என்பதனுடனுமாகத் தனித்தனி முன்னும் பின்னும் கூட்டியுரைக்கும்படி இடையில் வைத்தோதினார். அண்ணல் - பெருமையுடையவர். பெருமையாவது தகுதியில்லாத தம்மையும் இதுவரை ஆட்கொண்டு சிவநெறியிற் புகுத்தியருளியது. அமுதே - மரணம் போக்குவது; இங்குத் திருக்கயிலை வழிச்செல்லுகையில் தீங்கு நிக்கி ஒளிதிகழச் செய்த அருள் குறித்து நின்றது. வேதநாயகன் - வேதம் - மறை. சிவனைத் தன் இருதயத்துட் கொண்டு பொதிந்து மறைத்து வைத்துள்ளது. வேதத்தினுள்ளே நின்று மறைந்தும் விளங்கியருள்வதுபோல இங்கு விண்ணிலே மறைந்தும் அருள்பவர் என்ற குறிப்புப்படக் கூறினார். மறைந்து அருள்புரி - மறைந்தும்; உம்மை தொக்கது. அருள்புரியும் தன்மை ஒங்கு நாவினுக்கரசனே! எழுந்திரு என்றுரைத்ததும், அதனால் யாக்கையின் தீங்கு நீங்கி ஒளிதிகழ்ந் தெழச் செய்ததும் என்றிவற்றால் விளங்குவது. அண்ணலே என்றது முன்னர் இறந்தகாலத்துச் செய்ததும். அமுதே என்றது இந்நாள் நிகழ் காலத்துச் செய்ததும், வேதநாயகனே என்றது இனி எதிர்காலத்துச் செய்வதும் என்று மூன்று காலத்தும் இறைவரது பேரருள் குறித்துப் போற்றியதாம். அருள்புரி - வேதநாயகனே - நயந்து அருள்புரி என்றதனால் எதிர்காலக்குறிப்புத்தந்து நின்றது. இக்குறிப்புக்கள் நாயனார் அங்கு அருளிய கயிலைத் திருத்தாண்டகப் பதிகங்கள் மூன்றினும், மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி, பேராதென் சிந்தை புகுந்தாய் போற்றி, போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி, என் சிந்தை நீங்கா இறைவா போற்றி, கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி, நீங்கா தென்னுள்ளத் திருந்தாய் போற்றி, மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி, என்றும்; உடலின் வினைக ளறுப்பாய் போற்றி, ஊனத்தை நீக்கும் உடலே போற்றி என்றும்; பிறவி யறுக்கும் பிரானே போற்றி, மேலை வினைக ளறுப்பாய் போற்றி என்றும், இவ்வாறு வருவனவற்றாற் குறிக்கப்படும் துணைகொண்டு எழுதப்பட்டன. கண்ணினால் - அகக்கண்ணிற் காண்பதுபோலப் புறக்கண்ணினாலும். நண்ணி - உடல் சிதைந்து தங்கிவிட்டதுபோலத் தங்கவிடாமல் அங்கு நண்ணி. நின் கோலம் - "கயிலையி லிருக்கை" (1631); "இருந்த அம்முறைமை" (1634); கயிலையிலிருந்த கோலம் தொழ என்று வேண்டியதற் கேற்ப, அவ்வாறே திருவையாற்றிற் காட்டுகின்றார் என்க. கண்ணினால், முனியாகிய நின்கோலங்கண்டவாறே கயிலையிலிருந்த நின்கோலத்தைக்காண என்றபடி. பணிந்தார் - எழுந்து "ஒளிதிகழ" நின்று வரங்கேட்ட அதன் பொருட்டுக் கீழ் வீழ்ந்து வணங்கினார் என்பது "தொழுதெழுந்த" - (1634) என மேற் கூறுதலால் விளங்கும். 368 1634. (வி-ரை.) தொழுது எழுந்த - முன் பாட்டிற் பணிந்தார் என்றபடி கீழ்வீழ்ந்த நிலையினின்றும் எழுந்த. தொழுதலால் எழுச்சிபெற்ற என்றலுமாம். விண் தலத்தில் எழுபெரும் திருவாக்கு - அசரீரி வாக்கு. இஃது ஆகாயத்தினின்றும் செவிப் பொறிக்கு மட்டும் புலப்படுவது. "நீண் மொழி" (1632). இப்பொய்கை. முனிவராகத் தாம் வரும்போது இறைவர் அமைத்து உடன் கொடு நடந்த நன்னெடும் புனற் றடம் (1626). இகரச் சுட்டு அஃது அணிமை |