பக்கம் எண் :


616திருத்தொண்டர் புராணம்

 

கண்ணீர் வாவியிற்படிந் தெழுவார் போன்றனர் என்பது. "பொழியுந் தெய்வப் பூவின்மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற" (398) என்ற கருத்துக் காண்க. படி - தன்மை. படியார் - தன்மையினை உடையாராகி. இஃதுருவகம்.

உணர்ந்தார் - திருக்கருணையோ விது - தருங்கருணை போலிது - என்பனவும் பாடங்கள்.

372

1638. (வி-ரை.) மிடையும் மீள்கொடி வீதிகள் - "வீதிகடோறும் வெண்கொடி யோடு விதானங்கள்" (திருவாரூர் - குறிஞ்சி - அப்பர்) என்றவாறு கொடிகள் நெருங்கத் தூக்கிக் கட்டி விளங்குதல் வீதிகளை அணி செய்யுமுறை. இஃது இந்நாளினும் இவ்வாறு நிகழ்வது காண்க.

சேவடி பணிய வந்த உறுவார் - வாவியில் வந்து கரையேறிய நாயனார் இறைவரைப் பணியத் திருக்கோயிலை நோக்கி வருகின்றவர். உறுவார் - கண்டார் எனக் கூட்டி முடிக்க. உறுவார் - எதிர்கால வினைப் பெயர்.

அடைய - முழுதும் - முற்றும் - எல்லாம். அடையப் பொலிவன என்று
கூட்டுக.

நிற்பவும் சரிப்பவும் ஆன - அசரம் சரம் என்பன. தோற்றுமுறைமை பற்றி அசரத்தை முன்வைத் தோதினார். "அசர சர பேதமான யாவையும் வகுத்து" (தாயுமானார்). ஆன - ஆயினவை. பெயர். ஆன - பொலிவன என்று முடிக்க.

புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன - புடை அமர்ந்த - உடனிருந்த; துணை - பெண்ணும் ஆணும் ஒன்றற் கொன்று துணை யெனப்பட்டன; பொலிவன - பொலிவனவற்றை; இரண்டனுருபு தொக்கது.

நிற்பவும் சரிப்பவும் - தம் துணையொடும் பொலிவன கண்டார் - இது நாயனார் ஐயாற்றில் வாவியில் வந்து கரையேறிக் கோயிலை அடையும்போது முதலில் கண்ட காட்சி. "ஐயா றடைகின்ற போது, - காதன் மடப்பிடி யோடுங்களிறு வருவன கண்டேன்" என்ற தேவாரப் பகுதியின் பொருள் ஆசிரியர் விரித்தபடி. அசர சரமாகிய உலகத்தைப் பெண் ஆண் எனப் பிரித்துக் காணுதல். "அவனவ ளதுவெ னுமவை" என்பது சிவஞானபோதம். நாயனார் உலகத்தை முன் பலகாலும் பாத்திருப்பாரேனும் அன்று இறைவர் தம் காட்சி காட்டுதற் பொருட்டு முதலில் இவ்வாறு பகுத்துக் காட்டிப் பின்னர், அவை "சத்தியும் சிவமுமாம் சரிதை" நிலையைக் காட்டிப் பின், தமது திருப்பாதங்காட்டுகின்றார். தேராவத்தினுள், பின்னர்க், "கண்டே னவர்திருப் பாதம்;" என்றும், "கண்டறி யாதன கண்டேன்" என்றும் வரும் பகுதிகள் படிப்படியாகத் தத்துவரூப தரிசன முதலியவற்றினின்று சிவதரிசனத்துக்கு வரும் அனுபவ நிலைகளை உணர்த்துவதும் காண்க. முதலிற் றுணையுடன் பொலியும் காட்சி கண்டு, பின், அவை சத்தியுஞ் சிவமுமாம் சரிதையாகக் காண்பதனைத் தேவாரக் கருத்தை விளக்கும் வகையால் மேல்வரும் பாட்டில் ஆசிரியர் விரித்துரைப்பது காண்க.

நிற்பவும் - துணையொடு - அசரங்களிலும் பெண் ஆண் பகுப்பு உண்டென்பதும், அவை கூடு முறையும், அவை பல்கு முறையும் தாவர நூலோர் வகுத்துரைப்பர். ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் "ஏற்றுப் பனையெல்லாம்" (திருஞான - புரா - 980.) என்ற விடத்து, ஆண்பனை பெண்பனையாயின நிகழ்ச்சி இங்கு நினைவு கூர்தற்பாலது. (மேற்படி - புரா - 976 - 981). தேவாரத்தினுள் "நாகு தழுவி ஏறு வருவன" என்றதனுள் ஏறு என்றதனால் அசரமும் குறிக்கப்பட்டது.

1639. (வி-ரை.) பொன்மலைக் கொடி - பார்வதி. உடன் அமர் - ஒன்றாயுமன்றி வேறாயுமன்றிப் - பொருந்திய. அமர்தல் - விரும்பி யிருத்தல்.