1641. (இ-ள்.) தேவர்...மிடைய - தேவர்களும், அசுரர்களும், சித்தர்களும் வித்தியாதரர்களும், இயக்கர்களும், பொருந்தும் மாதவர்களும், மாமுனிவர்களும் ஆகிய இவர்கள், பக்கங்களில் எங்கும் நெருங்கி யிருக்கவும்; காவி...தழைப்ப - நீல மலரையும் வாளையும் ஒத்த கண்களையுடைய தெய்வ அரம்பையர்களுடைய கீதமும் மத்தளங்களின் ஓசையும் கெடுதலில்லாத எழுகடல்களின் ஒலியினும் அதிகமாகிய பேரொலியாகத் தழைக்கவும்; 376 1642. (இ-ள்.) கங்கையே...வணங்க - கங்கையே முதலாகிய புனிதம் செய்யும் தெய்வத் தன்மையுடைய பெரு நதிகள் மங்கல நீர் நிறைந்த பெருந் தடங்களாக வந்து வணங்கவும்; எங்கும்...இறைஞ்ச - எங்கும் பரவிய பெரிய சிவகணத் தலைவர்கள் வணங்கவும்; பொங்கு இயங்களாற் போற்ற - ஒலியாற் பொங்கும் பலவகை வாத்தியங்களை முழக்கிப் பூத வேதாளங்களும் போற்றவும்; 377 1643. (இ-ள்.) அந்தண்...சிந்தை செய்திட - அழகும் குளிர்ச்சியும் உடைய பெரிய வெள்ளிமலைக ளிரண்டாம் என்று அங்கு அணைந்தவர்கள் நினைத்திடும்படி; செங்கண்...நிற்ப - சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய இடபம் முன்னே நிற்கவும்; முந்தை மாதவப் பயன்பெறும் முதன்மையால் மகிழ்ந்தே - முன்னாளில் அத்தலத்திற் செய்த பெருந்தவப் பயனாகப் பெறும் முதன்மையினால் மகிழ்ந்து; நந்தி எம்பிரான்...நணுக - எமது நந்தி பெருமான் சிவபெருமானுக்கும் அவரை வழிபடவரும் ஏனையோர்க்கும் நடுவில் நடந்து முன்னாக அணுகி நிற்கவும்; 378 1644. (இ-ள்.) வெள்ளி வெற்பின் மேல் - வெள்ளிமலையின் மேல்; மரகதக் கொடியுடன் விளங்கும் - மரகதக் கொடியுடனே விளங்குகின்ற; தெள்ளு...வெற்பு என - தெளிந்த பேரொளியினையுடைய பவளமலை என்று சொல்லும்படி; இடப்பாகம்......வள்ளலாரை - இடது பாகத்தைக் கைக்கொண்ட பார்வதியம்மையாருடனே கூடி வீற்றிருந்தருளுகின்ற வள்ளலாராகிய சிவபெருமானை; வாக்கின் மன்னவனார் - திருநாவுக்கரச நாயனார்; முன் கண்டனர் - தமது முன்னே கண்டனர். 379 இந்த ஐந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. 1640. (வி-ரை.) காணும் - கோயின் முன்வந்தார் என்று முன்பாட்டிற் கூறியபடி வந்து தாம் காணும். யாவரும் பெருங் கோயிலாகக் காணும் அது அஞ்ஞான்று கயிலை மால் வரையாய்க் காணலுற்றது என்ற குறிப்புமாம். வரையாய் - ஆய் என்றது ஆக என்ற பொருள் தந்து நின்றது. மால் அயன்...போற்றிசைத்து எழும் ஒலி - கயிலை மலையாகக் காணும் அதன் புறத்தினின்று உள்ளே காண்கின்றாராதலின் முதலிற் புலப்பட்டது புறத்துள்ள நிகழ்ச்சி. மால் முதலிய பெருந்தேவர்கள் மலைப்புறத்து நின்றுதுதித்துக் கொண்டிருக்கின்றனர் என்க. இவ்வாறே மேற்பாட்டில் வருமவையும் படிப்படியாக மேல் நிகழக் கண்டார் என்பதாம். திருமலைச் சருக்கத்துக் கூறியவை (14 - 15) இங்கு வைத்துக் காணற்பாலன. தாணு - நிலைபெற்ற. தாணு - சிவன் என்று கொண்டு சிவன் மொழியாகிய - சிவனைக்காட்டுவனவாகிய என்றலுமாம், "தாணுவான புராணநூல்" (திருத்தொண்டர் புராண வரலாறு - 35) தனித்தனி - மறைகள் பலவாதலின் அவை தனித்தனி முழங்கின. "வேத மொழியாலொலி விளங்கியெழு மெங்கும்" (திருஞான - புரா - 31) என்றவாறு. வேதங்கள் பிறந்த இடமாதலின் தாமே முழங்கின என்றலுமாம். வரையாய் - ஒலிபொங்க - முழங்க (1640), - மிடைய - ஒலிதழைப்ப (1641), - வணங்க - இறைங்சப் - போற்ற (1642), - எதிர்நிற்ப - நணுக, (1643), |