பக்கம் எண் :


620திருத்தொண்டர் புராணம்

 

மலையாளுடன் கூட வீற்றிருந்த வள்ளலாரை - வாக்கின் மன்னவனார் - முன்கண்டனர் (1664) என இந்த ஐந்து பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக் கொள்க.

திருக்கயிலாய மலையினை நேரே காணும் இப்பெருங்காட்சியை ஐஞ்சீர் கொண்ட கலிநிலைத் துறைகளாகிய ஐந்து விருத்தங்களாற் கூறிமுடித்த அமைதி மகா சதாசிவ மூர்த்தியின் தரிசனக் குறிப்புக் காட்டிநிற்றல் காண்க.

375

1641. (வி-ரை.) தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர் - இவர்கள் பலவகைத் தேவச் சாதியார். தானவர் - அசுரர். தேவர்களுக்குப் பகைவராயினும் அவர்தம் இனத்தவர்களாய்த், தவவலிமை யுள்ளவராய்ப், பலர் இறைவரை வழிபட்டிருக்கின்றமையின் அவர்களும் கயிலையில் இங்கு இடம் பெற்றனர். விச்சாதரர் - வித்தியாதரர்.

புடையெலாம் - வெளிப்பக்கங்களில் எல்லாம். உட்பக்கங்கள் பூதகணங்களால் நிறையு மிடமென்பது (16 - 19 பார்க்க) மேல்வரும் பாட்டால் உணரப்படும்.

அரம்பையர் கானமும் முழவும் - உபசரிப்பின் பொருட்டு நிகழ்வன. கானமும் அதற்கிசைய முழக்கப்படும் முழாவும்.

ஏழ்கடல் முழக்கினும் பெருகு ஒலி - அனேகர் சேர்ந்திசைத்தலிற் பேரொலியாயிற்று.

பெருகு ஒலி - பொருளுள்ள சத்தமாகிய கானம் கலந்தமையால் ஒலி என்றார். தழைப்ப - ஒலி வீண்கழியாது அவர்களுக்கு ஆக்கஞ் செய்தது என்றது குறிப்பு.

1642. (வி-ரை.) கங்கையே முதல் - ஏகாரம் தேற்றம். முதல் - கங்கையை முதலாக வைத்தெண்ணப்பட்ட. தீர்த்தம் ஆம் - தூய்மை ஆகச் செய்யும். ஆம் - ஆக்குவிக்கும எனப் பிறவினைப் பொருளில் வந்தது. தீர்த்தம் - புனிதம்.

கடவுள் மா நதிகள் - கயிலாயத்தில் உள்ள தெய்வத் தன்மைவாய்ந்த ஏழு பெருந் தீர்த்தமாதாக்கள். இவை சிவபெருமான் பவனியில் கவரி வீசுவன என்பது "கங்கா நதி யமுனை யுள்ளுறுத்த தீர்த்தங்கள், பொங்கு கவிரி புடையிரட்ட" என்ற ஞான உலாவினால் விளங்கும்.

மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு - மங்கலம் விளங்கும் நீர் கொண்ட தடாக உருவாய் நதிகள் வந்தன என்பதாம்.

எங்க நீடிய பெரும் கணநாதர்கள் - எவ்விடத்தும் தமது காவலும் அதிகாரமும் செலுத்தும் சிவகணங்கள். "நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின், நாடு மைம்பெரும் பூதமு நாட்டுவ" (16) என்றது காண்க.

பூத வேதாளங்கள் - சிவ பூதங்களும், வேதாளங்களும். பூதங்களின் வகையுள் ஒன்றாகிய வேதாளங்களும் என்றலுமாம். வேதாளம் பேய்க்கணமாகிய சிவகணங்களுள் ஒரு வகை. பூத வேதாளங்கள் பலவகை இயங்களைமுழக்கிப் போற்றிக்கொண்டிருந்தன என்பது. "பாரிடம் பாணி செய்ய" (தேவா), "பறைபோல் விழிகட் பேய் கொட்டமுழவம்" (அம்மை மூத்த திருப்பதிகம் - 1.)

பொங்கு இயங்கள் - பலவகை ஓசைகளை விளைக்கும இயங்கள். இயங்களாற் போற்ற - கைகளால் இயங்களை முழக்கியும், வாயாற் பாடிப் போற்றியும். "குடமுழவம் வீணை தாளங் குறுநடைய சிறுபூத முழக்க மாக்கூத் தாடுமே" (அடையாளத் தாண் - அதிகை - 5), "துத்தங் கைக்கிளை விளரி தார முழையிளியோசைபண் கெழுமப் பாடிச், சச்சரி கொக்கரை தக்கை யோடு தகுணிதந்துந்துபி தாளம் வீணை, மத்தளங் கரடிகை வன்கை மென்றோற் றமருகங் குடமுழா மொந்தை வாசித், தத்தனை விரவினோ டாடு மெங்க ளப்ப னிடந்திருவாலங் காடே" (அம்மை மூத்த திருப்பதிகம் - 9) முதலியவை காண்க.

377