தெள்ளு பேர் ஒளி - தெள்ளு - தெளிந்த. தெள்ளும் ஒளி - பளிங்கின் ஒளி. திருநீற்றின் ஒளியுமாம். பவள வெற்பு - "கயிலைமலை வீற்றிருந்த பெருங்கோலம் காணுமது" (1612) என்றபடி மலையின் கோலம் ஆதலின் எல்லாம் பெருமலை வடிவாய் காட்டக் கண்டனர். பெருங்கோயில் பெருமலையாயிற்று; அதன்கண் இடப தேவர் மற்றொரு வெள்ளிமாமலை யாயினர்; அவர்மேல் எழுந்தருளிய இறைவர் பவள மலை போன்றனர்; என மூன்றும் மலைகளாகக் கூறினர். பவளம் - கடல்படு மணிகளுள் ஒன்று. இக்குறிப்பினையே தொடர்ந்து "கண்ட ஆனந்தக் கடலினை" (1645) என்று மேல்வரும் பாட்டில் கடலின் குறிப்புப்படக் கூறுதல் காண்க. என - போல; உவமவுருபு. மாமலையாள் - பிறப்பிடமாகப் பனிமலையினை உடையவள்; ஆதலின் ஐமவதி என்ற காரணப் பேருடையவள். இனிப் புகுமிடமாகிய கயிலையாகிய பெருமலைக்கும் உடையவள் என்றதனாலும் மாமலையாள் எனப் பெறுவர் அன்றியும், பவள வெற்பு - பெருமான் . என்ற அந்த மாமலையினையும் உடையவள் என்ற குறிப்பும் பெற நின்றனர்; ஆதலினாலும் மாமலையாள் என்றார். வள்ளலார் - "இத்தனையும் எம்பரமோ ... எம்பெருமான் றிருக்கருணையிருந்தவாறே!" (தாண்) என்றபடி தமது கருணைப் பெருவெள்ளத்தை வரை யாது வழங்கிய, "வான நாடரு மறியொ ணாதநீ மறையி லீறுமுன் றொடரொணாதநீ, யேனை நாடருந் தெரியொ ணாதநீ" (திருவா - சத - 95) என்ற பெருங்கோலத்தை இவ்வுலகத்திலே கண்ணாரக் காண் வருள்புரிந்த வள்ளன்மை யுடையார் என்றது குறிப்பு. முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் - முன் - தம் முன்பு என்றும், வெளிப்பட என்றும் உரைக்க நின்றது. முன் - திருவடிசேரும் செயல் பின்னர்த் திருப்புகலூரில் நிகழ இருக்க, அதன் முன் என்ற குறிப்புமாம். கண்டனர் - வினைமுற்று முன்வந்தது தேற்றக் குறிப்பு. வாக்கின் மன்னவனார் - இறைவர் தாமே தந்தருளிய இப்பெயராற் கூறியது "பாவுற் றலர்செந் தமிழின் சொல்வளப் பதிகத் தொடைபா டியபான்மை யினால்" (1339) இப்பெயர் தந்த இறைவர், "மன்னு தீந்தமிழ் புவியின்மேற் பின்னையும் வழுத்த" (1626) என்றபடி வாக்கின் றிறமாகிய அக்காரணம் பற்றியே கயிலையை அணைய அருளாராகி, இங்குக் காட்சி தந்தனர் என்ற குறிப்புத் தருதற்கு, வாக்கின் மன்னவனாராதலின் முன் கண்டனர் என்றதாம். வெள்ளி வெற்பு - மரகதக்கொடி - கயிலை என்ற வடவெள்ளிமலை போலவே தெற்கில் கோவைச் சில்லா திருப்பேரூரை அடுத்து வெள்ளிமலை என்றபெயரால் தேற்றமாக வழங்கப்படும் ஒரு பெருமலையுண்டு; அது தென்னாட்டில் மேற்குத் தொடர்மலைகளுள் ஒர சிகரமாம்; வடகயிலையும் இமயமும், கடலினடுவுளிருந்து மேற்கிளம்பின என்றும், அதற்கு முற்பட்ட காலத்திருந்து மலையாக விளங்கிய பழமையுடையது அவ்வெள்ளிமலை என்றும் பௌதிக நூலோர் கொள்கின்றினர். இத்திருமலையும் கயிலையேயாம் என்று பேரூர்ப் புராணம் எடுத்துரைக்கும்; இம்மலைத் தொடர்புடைய பேரூரில் அம்மையார் மாகதவல்லி யம்மை என்று வழங்கப் பெறுவர். வெள்ளி...கண்டனர் - இடபதேவர்மேல் இறைவியுடன் எழுந்தளிய இறைவரைக் கண்டனர் என்றதாம். அதுவே எங்கும் அடியார்க்கருளும் பெருங்காட்சியாம் என்றதும் நினைவுகூர்க. "துன்னிய விசும்பி னூடு துணையுடன் விடைபேற் கண்டார்"(399) "தன்றுணை யுடனே வானிற் றலைவனை விடைமேற் கண் |