பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்639

 

கருத்து. சில பிரதிகளில் 11-20 வரை திருப்பாட்டுக்களைத் தனிப்பதிகமாக எழுதியுள்ளார். பதிகம் பத்துப்பாட்டுடையதா யிருத்தல் வேண்டுமென்னும் கருத்துடன் சுவடி எழுதுவோர் அவ்வாறு பிரித்து எழுதியிருத்தல் கூடும். திருமறைக்காட்டுத் திருக்குறுந்தொகை "பண்ணினேர் மொழியாள்" என்ற பதிகப்பாட்டுக் குறிப்பின்கீழ் எழுதியவை பார்க்க. (பக்கம் 455)

குறிப்பு :- பத்துப்பாட்டுக் கொண்டுள்ளமையாற் பெற்ற பதிகம் என்னும் காரணப் பெயர் பொது விதியையுணர்த்தும். பெரும்பான்மையும் அதுவே. ஆனால் 11 - பாட்டுக்கள் கொண்ட திருத்தொண்டத் தொகை முதலியனவும், 12 பாட்டுக்கள் கொண்ட ஆளுடைய பிள்ளையாரது வழிமொழித் திருவிராகம், பல்பெயர்ப் பத்து, திரு ஏகபாதம் முதலியனவும், ஆளுடைய அரசுகளது திருவங்கமாலை முதலியவையும், ஆளுடைய நம்பிகளது திருப்பாச்சிலாச்சிராமப் பதிகம் முதலியனவும், ஏழு பாட்டுக்கொண்ட திருவாசகம் திருக்கழுக்குன்றப் பதிகமும், பிறவும் இவ்விதிக்குப் புறனடையாய்ப் பத்தின் மிக்கும் குறைந்தும் வருவனவும் பதிகம் என்று வழங்கப் படுதலை வலியுறுத்துவன. சித்தத் தொகைக் குறுந்தொகைப் பதிகம் முப்பது பாட்டுக் கொண்டமையும் இங்கு நினைவு கூர்தற்பாலது.

ஐயாறன் அடித்தலமே, சிந்திப்பவர்க்குச் செந்தேன் பொழிவன; பழவினை தீர்ப்பன - ஏழேழ் பிறப்பு மறுத்தன; விடாத தொண்டர்க் கணியன; பிணிதவிர்த்து வழுவா மருத்துவமாவன; மாநரகக்குழிவாய் விழுவா ரவர்தம்மை வீழ்ப்பன - மீட்பன; நீணிலத்துப் புலையாடு புன்மை தவிர்ப்பன; போற்றி யென்பார் புலம்புலம் பொழுதும் புணர்துணையாவன; உற்றாரிலாதார்க் குறுதுணை யாவன; கற்றார் பரவப் பெருமையுடையன; அற்றார்க் கரும்பொருள்; மந்திரிப்பார் ஊனைக்கழித் துய்யக் கொண்டருள் செய்வன; உத்தமர்க்கு ஞானச்சுடராய் நடுவே யுதிப்பன; தொண்டு பட்டார்க் காதரமாவன; ஞானமு ஞானப்பொருளும் ஆவன; துயர்வெயிற் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னு நிழலாவன; என்றிவ்வாறு பலதிறத்தனவாகிய அளிப்பாடுகளால் அறியப்படுவன.

இப்பதிக முழுமையும் திருவடித் தோத்திரமாகப் பாடஞ்செய்து பயின்றோதத் தக்கது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சிந்திப்பவர் - சிந்திப்பு அரியனவாயினும், திருவருளின் பரமாகி வல்லவா நினைவோர்; செந் தேன் - இன்பம். பழவினை தீர்ப்பன (வாகி) முத்திகொடுப்பன என்க. மொய்த்திருண்டு - பந்தித்து - நின்ற - பழவினை - ஈண்டுச் சஞ்சித கன்மம். ஆணவமலச் சார்பால் மாயை கன்மங்கைளயும் இருளாகக் கூறுதலுண்டென்பது "இருள் சேரிருவினை", "இருள்புரி யாக்கை" என்பவற்றுள் அறியப்படம். - (2) இழித்தன - பெயர் இழித்தனவாகிய. ஏழ் ஏழ் - முண்டு எழுகின்ற ஏழு. - (3) சீலம் - சிவநெறி நிற்றல். விடாத - எஞ்ஞான்றும் பற்றுவிடாத. "கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்" (தாண்). - (4) துன்பப் படலம் - துன்பம் செய்யும் ஆணவமறைப்பு. படலம் - திரை - திரையிட்டது போன்று கண்மணியின் பார்வையை மறைப்பதால் இப்பெயர் பெற்ற நோய். புறநோக்கை மறைக்கும் படலம்போல, அறிவை மறைப்பது இருள்தரு துன்பப்படலமாகிய ஆணவம். இருடரு துன்பப்படலம் - உவமையாகு பெயர். இருடருபடலம் - துன்பப்படலம் எனத் தனித்தனி கூட்டி, இருள் தருதல் கேவலத்தில் அறியாமையைச் செய்தல் எனவும், துன்பந் தருதல் - சகலத்தில் விபரீத உணர்வால் துன்பம் தருதல் எனவும் கொள்க. கண் - உயிரறிவு. ஞானத்தின், கண்ணை மறைத்த கடியதொழி லாணவத்தால்" (போற்றிப் பஃறொடை). உண்பொருள் - உலக அனுபவப் பொருள். புகல் - சார்விடமாகிய திருவடி. அகக் கண்ணிழந்த