தாமே எழுந்தருளித் தம்மைத்தாமே பூசித்த சிறப்பு திருவாசகத்துள் "ஐயா றதனிற் சைவ னாகியும்" என்று போற்றப்பட்டதென்ப. அதன் நினைவாக இன்றும் திருவிழாவில், இறைவர், சைவராக இருந்து மாகேசுர பூசை கொண்டருளும் சிற்ப்பு ஒரு திருநாளாகக் கொண்டாடப் பெறுகின்றது. அதன் பயனாக இன்றளவும் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனகருத்தர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்திரன் - வாலி முதலியோர் பூசித்தமை திருப்பதிகங்களுட் காண்க. திருநாவுக்கரசு நாயனார் இங்குத் திருக்கயிலைக் காட்சி கண்டருளிய வரலாறு புராணத்தினுள் முன்னர் (1634 - 1650) விரிக்கப்பட்டது. மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. ஆளுடைய நம்பிகளும் சேரமான் பெருமாணாயனாரும் திருக்கண்டியூரை வணங்கியபோது திருவையாறு எதிரே தோன்றியதனால் தரிசிக்க விரும்ப, அக்காலம் காவிரி கரைபுரள வெள்ளம் பெருகியதால் வருந்தி நின்று, அக்கரையில் நின்றபடியே "ஐயாறுடைய அடிகளோ" என்று நம்பிகள் திருப்பதிகம் பாடிய அளவில், ஐயாறப்பர் "ஓலம்; ஓலம்" என்று அழைத்து, அவர்கள் வந்து மீளுமளவும் காவிரியை வழிவிலகி நிற்கும்படி செய்தருளி, அவ்விரு பெருமக்களையும் வந்து தரிசிக்கச் செய்தருளிய பெருமையுடையது. (கழறிற் - புரா - 131 - 140). சுவாமி - செம்பொற் சோதிநாதர்; ஐயாறப்பர்; (பஞ்சநதீசுவரர்). அம்மை - அறம் வளர்த்த நாயகி; (தர்மசம்வர்த்தனி). விநாயகர் - ஆதி விநாயகர். தீர்த்தம் - சூரிய புட்கரணி - காவிரி முதலியன; பதிகம் 18. இது, தஞ்சாவூர்ப் புகை வண்டி நிலயத்தினின்றும் வடக்கே கற்சாலை வழி 6 நாழிகை யளவில் திருக்கண்டியூரை யடைந்து, அங்கு நின்றும் வடக்கே கற்சாலைவழிப் பாலத்தின் மூலம் காவிரியைக் கடந்து 1 நாழிகை யளவில் அடையத் தக்கது. மோடார் பஸ் முதலிய வசதிகள் பலவும் உண்டு. 1651. | நீடிய வப்பதி நின்று நெய்த்தான மேமுத லாக மாடுயர் தானம் பணிந்து மழபாடி யாரை வணங்கிப் பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணிசெய்து போற்றித் தேடிய மாலுக் கரியார் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார். |
386 (இ-ள்.) வெளிப்படை. நீடிய அத்தலத்தினின்றும் திருநெய்த்தானம் முதலாகப் பக்கத்தில் உள்ள தலங்களைப் பணிந்து, திருமழபாடிக்குச் சென்று இறைவரை வணங்கிப் பாடிய செந்தமிழ் மாலையாகிய திருப்பதிகம் அருளிச்செய்து திருப்பணிகள் செய்து துதித்துப், பின்னர்த், திருவடி காணத் தேடிய திருமாலுக்கு அறிவரியவராய் நீண்ட சிவபெருமான் எழுந்தருளிய திருப்பூந்துருத்தியை அடைந்தனர். (வி-ரை.) நீடிய - அருளால் நீடிய. நெய்த்தானமே - ஏழுதலங்களுள் ஒன்றாய்த் திருவையாற்றை அடுத்துள்ள சிறப்புப்பற்றி ஏகாரம் தந்தோதியதுமன்றி முதலாக என்றும் கூறினார். முதலாக மாடு உயர் தானம் - இவை திருப்பெரும்புலியூர் முதலாயின. மாடு - பக்கம்; மாடுயர் - மாடு செல்வம் என்று கொண்டு, சிவனருட் செல்வத்தால் ஓங்கும் என்றுரைத்தலுமாம். மழபாடியாரை வணங்கி - தானம் - பணிந்து - என்றதனால் மழபாடித் தலத்தை வணங்கி உட்புகுந்தமை பெறவைத்து மழபாடியாரை வணங்கியமை மட்டிற் கூறினார். தேடிய - எங்குமிருப்பவரை ஓரிடத்தில் இல்லாதவர்போல் எண்ணித் தேடினார் என்பது குறிப்பு. "எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார், இங்குற்றேனென் றிலிங்கத்தே தோன்றினான்" (இலிங்க புரா - குறுந் - 10). 386 |