பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்65

 

ரிக்கவும் மயிற்பீலியைக் கற்றையாகக் கைக்கொள்வது அவர் வழக்கு. "குண்டி கைக் கையர்களோடு" (தேவர்).

காலளவும் - தலைமுதல் என்பது எஞ்சி நின்றது.

நோவு மிக - தருமசேனருக்கு வருத்தம் அதிகரிக்க.

பரிபவம் - பிறர் துன்பங் கண்டக்கால் உளதாகும் வருத்தம் வியாகூலம். பரிவு. "பரிபவம் தீரு முனக்கு" (1386), "பன்முறை யிழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான்" (471). பரிபவம் - தோல்வி - அவமானம் என்றுரை கொள்ளின் இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது என்க.

இடருழத்தல் - துன்பப்படுதல். உழத்தல் - அனுபவத்தினுள் மிகவும் அழுந்துதல்.

மந்திரித்தும் குடிப்பித்தும் - என்பதும் பாடம்.

53

1319.

 தாவாத புகழ்த்தரும் சேனருக்கு வந்தபிணி
 யோவாது நின்றிடலு, மொழியாமை யுணர்ந்தாராய்
"யாவா! நா மென்செய்கோ" மென்றழிந்த மனத்தினராய்ப்
 போவார்க "ளிதுநம்மாற் போக்கரிதா" மெனப்புகன்று,

54

1320.

குண்டர்களுங் கைவிட்டார்; கொடுஞ்சூலை கைக்கொண்டு
மண்டிமிக மேன்மேலு முடுகுதலான் மதிமயங்கிப்
பண்டையுற வுணர்ந்தார்க்குத் திலகவதி யாருளராக்
கொண்டவர்பா லூட்டுவான் றனைவிட்டார் குறிப்புணர்த்த.

55

1319. (இ-ள்.) வெளிப்படை. கெடுதலில்லாத புகழினையுடைய தரும சேனருக்கு வந்த நோய் ஒழியாது நின்றிடவே, அது நீங்காத தன்மையினை உணர்ந்து, "ஆ! ஆ! நாம் இனி என்ன செய்வோம்!" என்று அழிவடைந்த மனத்தினுடன்" இது நம்மாற் போக்குதல் அரிதாகும்" என்று கூறி அகன்று போவார்களாகி,

54

1320. (இ-ள்.) வெளிப்படை. அமண் குண்டர்களும் கைவிட்டனர்; கொடிய சூலை தம்மைப் பற்றிக்கொண்டு, மேன்மேலும் பெருகி வருத்துதலால் இன்னது செய்வதென்றறியாது மதிமயங்கிய நிலையில் முன்னைய உறவினரை எண்ணி உணரப்புக்க அவருக்குத் திலகவதியாராகிய தமக்கையார் உள்ளார், அவர் துணைசெய்ய வல்லார், என்று நினைவுகொள்ளவே, அவரிடத்துத் தமது குறிப்பினை உணர்த்தும் பொருட்டுத் தம்மை ஊட்டுவிக்கும் ஏவலாளனை அனுப்பினார்.

55

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.

1319. (வி-ரை.) தாவாத புகழ் - "உரைப்பாருரைப்பவை யெல்லாமிரப் பார்க்கொன், றீவார்மே னிற்கும் புகழ்" (குறள்) என்றபடி, முன்னம் யாவருக்கும் தவிராத ஈகை வினைத் தலைநின்றா ராதலாலும், இதுபோழ்து, "ஒளியுடைய வித்தகராய்......மேம்பட்டார்" (1305) ஆதலாலும், இனி, "நாவுக்கரசென்று....நின்னாம நயப்புற நண்ணுக" (1339) எனப் பேறு பெறுவாராதலாலும் அவரது புகழ் உண்மையில் தாவாத புகழாயிற்று. தாவாத - என்றும் கெடாத - முக்காலத்தும் குறைவில்லாத.

ஓவாது - நீங்காது - "ஓவு நாளுணர் வழியுநாள்" (நம்பிகள் - கொடுமுடி) "ஒவுத லோவு திருப்பணிசெய்து" (திருநா - புரா - 239) முதலியவை காண்க.

ஒழியாமை - போகாத தன்மையினை. இரண்டனுருபு விரிக்க.

ஆ! ஆ! - ஐயையோ! அடுக்கி வந்த அவலக்குறிப்புச் சொல். ஆச்சரியமும் இரக்கமும் குறிப்பன. அடுக்கு மிகுதி குறித்தது.