ஆன் ஏற்றுப் பொருப்பு - இடப ஏறாகிய மலை. பொருப்பு - மலை. மலை போன்றது என உருவகம். விருப்புறு தாண்டகம் - நினையா என் நெஞ்சை நினைவித்தானைக், கல்லாதன வெல்லாங் கற்பித்தானைக், காணாதனவெல்லாங் காட்டினானைச், சொல்லாதன வெல்லாஞ் சொல்லி யென்னைத் தொடர்ந்திங் கடியேனை யாளாக்கொண்டு பொல்லாவென்னோய் தீர்த்த புனிதன்றன்னை, உணராவென் னெஞ்சை யுணர் வித்தானை, எனக்கொன்று மினியானை, நெறிதா னிதுவென்று காட்டினானை என்பன முதலாகத் தமது மனத்துள் நிறைந்தெழுந்த விருப்ப முழுதும் பொருந்தி வெளிப்பட அருளிய திருத்தாண்டகப் பதிகம். பயில்வார்க்கு இறைவர்பால் விருப்பத்தை உளதாக்கும் பதிகம் என்றலுமாம். அத்தலத்திற் பலகாலம் விருப்பத்தை உறுவிக்கும் என்பதுமாம். மேவிய காதல் விளைப்ப - முன் கூறிய விருப்பமானது காதலை விளைக்க. திருத்தாண்டகத்தை முன்னர் அருளிப், பின்னர், அதன் பயனாய் எழுந்த காதலினாற் குறுந்தொகைப் பதிகமருளி, அதன் பயனாய்ப் பின்னர் பலநாள் தங்கிய சரித விளைவை உணர்த்தியருளும் ஆசிரியரது தெய்வக் கவிமாண்பு காண்க. 388 1654. (வி-ரை.) அங்கு உறையும் தன்மை வேண்டி - இஃது இத்திருவிருத்தப் பதிகக் கருதது ஆசிரியர் எடுத்துக் காட்டியபடி. உறையும் தன்மை - பலநாள் தங்கி வீற்றிருக்கும் தன்மை. நாம் அடிபோற்றுவது என்று - இது "நாமடி போற்றுவதே" என்ற பதிகத்தின் மகுடம். என்று என்பதனால் இது பதிகத்தின் கருததும் மகுடமுமாதல் குறிக்கப்பட்டது. பதிகக் குறிப்புப் பார்க்க. போற்றுவது தன்மை வேண்டி - என்று - எனக் கூட்டி உரைத்துக் கொள்க. பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் - மலைமகள் தன்னுடைய பாலனை - மதிசூடியை - உணரார் மதின்மேற் போலனை - விடையேறியை - ஆலனை - ஆதி புராணனை - அறுத்தனை - பொறுத்தனை - நீலமிடற்றனை - உருவினை - திருவினை - கருவினை - நக்கனை - தேச மதியனை - அந்தியை - அறிவினை - நந்தியை - வேத விகிர்தனை என்ற பலப்பலவும் சிறந்த பொருள் பொங்கும் தமிழ்ச் சொற்களால் இறைவரைப் போற்றுகின்றமையால் பொங்கு தமிழ்ச் சொல் என்றார். போற்றிய பாடல் புரிந்து - என்ற கருத்துமிது. விருத்தம் - பதிகத்தின் யாப்பமைதி. புரிந்து - இடைவிடாது சொல்லி - "இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார்" (குறள்) என்றவிடத்துப் பரிமேலழகர் உரை பார்க்க. தங்கி - அங்கு உறையும் தன்மை வேண்டினாராதலின் அதன்படியே அங்குப் பலநாள் தங்கி. தங்கித் திருத்தொண்டு செய்வார் - ஏனைத் தலங்களிற்போலத் தமது யாத்திரை வழிச் செலவில் சிற்சில நாள்களே இருந்து பணிசெய்து போவதுபோலன்றி, இங்குப் பலகாலம் தங்கிப் பணிசெய்வாராகி. செய்யும் பொருட்டு என்றலுமாம். செய்வார் - எதிர்கால முற்றெச்சம். செய்வார் - செய்தார் - என்று கூட்டி முடிக்க. ஆளுடைய பிள்ளை எழுந்தருளி வரும்வரை தங்கி என்றதும் குறிப்பு. தம்பிரானாரருள் பெற்றுப் பலநாள் அங்குத் தங்கி உறையும் தன்மை வேண்டித் திருப்பதிகம் "நாமடி போற்றுவதே" என்று போற்றினாராதலின் அதன் படியே இறைவரும் அருள்செய்யப் பெற்றாராகி, அருள் பெறுதல் அங்குறைந்தமர்தற்காகத் திருமடம் அமைத்தற்கு என்க. பற்றற்ற முழுத்துறவுடைய மூர்த்திகளாகிய நாயனார் அங்குத் திருமடம் அமைத்துத் தங்கும் தன்மை வேண்டினாராதலின் அதன் வழித்தாகிய அளவில் வரும் பற்றும் தம்மைப் பற்றாதபடி திருவருள் செய்யப்பெற்ற பின்னரே திருமடம் செய்தனர் என்பதாம். அன்றியும், ‘வேண்டும் பரிசொன் றுண்டென்னி லதுவு முன்றன் விருப்பன்றே' |