(திருவா.) என்பதனால் திருமடம் அமைக்க எண்ணியதும் திருவருளாலேயாம் என்க. நாயனார் இறைவன்றிருவருள் வழி நிற்போராதலின் மடமமைத்ததும் திருவருளின்வழி நிகழ்வதென்பதுமாம். திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் - இஃது அத்திருமடத்தின் உயர்வு குறித்தது. தோயும் - நிலம் தோயும்படி நாயனாரைவந்து வணங்கும் என்ற குறிப்பும்பட நின்றது. அத்திருமடத்தின் அகன்ற திருமுற்றத்தில் இரவில் திங்களும், பகலில் ஞாயிறும் நிலவொளியும் வெளிலும் பரப்பிச் சேவகம் செய்கின்றனர் என்பது அத்திருமடத்தின் அமைப்பினைப்பற்றி இப்போது உள்ள அதன் பகுதிகளின் துணைகொண்டு அறிந்து கொள்ளலாம். படங்கள் பார்க்க. திருமடம் - ஆசாரியரது இடம். திருமூலர் திருமந்திரத்தினுள் - "குருமட தரிசனம்" என்ற 9-ம் தந்திரம் காண்க. நாயன்மார்களும் அடியார்களும் தங்கிய இடங்கள் திருமடம் என வழங்கப்படுதலும் கருதுக. 229, 230, 231, 505, 506, 1512, திருஞான - புரா - 676, 698, 700, 701, 702, 707, 725, 737, 854, 855, 868, 877, 878 முதலியவையுங் காண்க. திருமடம் ஒன்று : ஒன்று - ஒப்பற்றது என்ற குறிப்புப்பட நின்றது. இத்திருமடம் நமது சைவ சமய பரமாசாரியராலே செய்யப்பட்ட தனிப் பெருமையுடையது. இதுபோல வேறெச் சமயத்திலும் சமய ஆசாரியர்கள் தாம் அமைத்து அமர்ந்த மடங்கள் கேட்கப்படவில்லை. அவ்வவர் பெயரால் வழங்குவனவாகிய மடங்கள் பின் வந்தவர்களால் அந்நினைவுபற்றி அமைக்கப்பட்டனவாகவே காண்கின்றோம். இத்திருமடத்தில் நமது ஆசாரியமூர்த்திகள் பலகாலம் எழுந்தருளியமர்ந்து சிவபூசை சிவஞானயோகம் முதலிய தவங்களைச் செய்திருந்தருளினார்கள். அவ்வாறு பூசித்த இடமும், யோகத்தமர்ந்த இடமும், அடையாளங்காண இன்றும் உள்ளன. இத்திருமடத்திலேதான் நமது மற்றொரு பரமாசாரியராகிய ஆளுடைய பிள்ளையாரும் நாயனாருடனே பலநாள் தங்கி உடனமர்ந் தளவளாவி யிருந்தருளினார்கள். பிள்ளையார் தென்னாடாகிய தமிழ் நாட்டில் எழுந்தருளிச் சைவத் தாபனம்செய்த சிறப்பும், நாயனார் வட நாடாகிய தொண்டை நன்னாட்டிலும் அப்பால் உள்ள வடதேயத்திலும் போந்து பின் திருக்கயிலைக்காட்சி கண்டருளிய சிறப்பும் ஒருவர்க்கொருவர் இத்திருமடத்தில் பேசி அளவளாவிக் களித்தனர். அது காரணமாக நாயனார், பின்னர்த் தென்னன் நாடு சென்றருளவும், பிள்ளையார் திருத்தொண்டை நன்னாடு சென்று அங்கம் பூம்பாவையாக்கிய பின்னர்த் திருமணத்திற் கெழுந்தருளவும் உள்ள தெய்வ நிகழ்ச்சிகள் உளவாயின. இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த இத்திருமடம் இந்நாளில் இடிந்து சுவர்கள்மட்டும் காண உள்ள காட்சி மிக வருந்தத்தக்கது. இத்திருமடத்தின் சுவர் - பூசைமேடை முதலிய திரு அடையாளங்களைப் பொன்னே போற் பாதுகாத்து, வழிபடுதற்குரிய சிறந்த இடமாக அமைத்து வைக்க வேண்டியது சைவ நன்மக்களுடைய பெருங்கடமை. அது பெருஞ் சிவபுண்ணியமுமாம். இத்திருமடத்திற் சிதைந்து கிடக்கக் காணும் ஒவ்வொரு சிறிய செங்கற்றுண்டுகளும் பலப்பல கோடி பொன்விலை பெறும் சிறந்த தெய்வமதிப்புடையவை என்று சொல்லலாம். செய்தார் - செய்வித்தார் - அமைப்பித்தார் - எனப் பிறவினைப் பொருளில் வந்தது. நாயனார் என்ற ஏவுதற் கருத்தா தொக்கு நின்றது. தன்மையரானார் (ஆகி) (1652) - என்று - தாண்டகத்தோடு - என்னும் - குறுந்தொகை பாடி (1653) - என்று - பாடல்புரிந்து - அருள் பெற்றுத் - திருமடம் - செய்தார் - (1654), (நாயனார்) - என்று இந்த மூன்று பாட்டுக்களையும் தொடர்பு படுத்திக்கொள்க. ஆங்கொன்று - என்பதும் பாடம். 389 |