| சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு வாணாளத் தருவ ரேனும் மங்குவா ரவர்செல்வ மதிப்போ மல்லோ மாதேவர்க் கேகாந்த ரல்ல ராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யரா யாவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங் கங்கைவார் சடைக்கரந் தார்க்கன் பராகி லவர்கண்டீர்யாம்வணங்குங் கடவு ளாரே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- உலகுயிர்கள் யாவும் சிவனது வயப்பட்டு அவரால் இயக்கப்படுபவை. திருவெண்ணீறணிந்து பத்திமையாற் சிவனைப்பாடிப் பயிலாதார் வாழும் ஊர்கள் சுடுகாடுகளேயாம். திருவெண்ணீறணிந்து சிவனைப் பணிந்து பூசியாதார் ஏன் பிறந்தார் என்னில், பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதறே்கே தொழிலாகி யிறப்பதற்கே பிறந்தார். சிவனடியாராகிய நல்லாரோ டிணங்காமலும் சிவ நன்மொழிகள் பேசாமலும் நிற்பார் என் செயப் பிறந்தார்? எத்துணைப் பெருஞ்செல்வத்தராயினும் சிவனடியா ரல்லாராகில் அவர்களை ஒரு பொருளென நாம் மதியோம். சிவனுக்கன்பராகில் அவர்களைக் கடவுளாக வணங்குவோம். சிவபெருமானே! தேவரீரே எனக்கு அப்பன் - அம்மை - மாமன் - மாமி முதலிய அரிய பொருள்களெல்லா மாவீர்!; கற்பகமே! நான் உம்மை விடுவேனல்லேன்!; தேவரீர் என் சிந்தையீர்!; பூமிமேற் புகழ்தக்க பொருளே! நீர் எனக்குப் பொன், மணி, மண் முதலிய எல்லாமானீர் என்று பலவாற்றாலும் புகழ்வதன்றி ஏழையேன் என் சொல்லி ஏத்துகேன்? அடி நாயேனைத் தேவரீர் அன்பால் ஆர்த்து அருட் கண்ணிற் றீர்த்தநீ ராட்டி எளியீராகி வந்து இரங்கி என்று கொண்டீர்; நாயேன் பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தீர்; இத்தனையும் எம்பரமோ? ஐயோ! தேவரீரது திருக்கருணையிருந்தவாறுதான் என்னே? பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அன்புடைய என்ற அடைமொழியை மாமன் மாமியுடன் புணர்த்தி யோதியது அவர் தம்மகள் பொருட்டு மேற்கொள்ளும் அன்பு கூர்தலால் என்க. இதுபற்றியே "மாமனு மருமகனும் போலும் மன்பின" என்றார் பிறரும் (சிந் - 43). அன்புடைய என்பதனை அப்பன் அம்மை ஐயன் என்றவற்றுடன் முன்னும் கூட்டி உரைக்கும்படி இடையில் வைத்தார் என்றலுமாம். ஐயன் - குரு. "தங்க ளையனாம் வியாழப் புத்தேள்" (திருவிளை.) ஐயன் - பெருமையுடையோன் என்றலுமாம். ஒப்பு - காதற்கெருத்தொற்றுமை. ஒண்பொருள் - மக்கள்; துய்ப்பன - தாந்தாம் நுகர்வன; உய்ப்பன - பிறர் நுகர்தற்கு உதவப்படுவன; துணையாய்த் துறப்பித்தலாவது தாமே உற்ற துணையென்பதனைத் தேற்றுவித்து முன்னர்த் துணையென்று கருதியிருந்த ஏனையவற்றை விடச்செய்தல். இப்பொன் - இம்மணி - இம்முத்து - இகர அணிமைச் சுட்டுக்கள் முன் பெரிதாய்க்கொண்டிருந்த இந்த என்ற கருத்துப் புலப்படுப்பன. - (2) வெம்ப - வருத்தம் செய்ய. வெய்ய வினைப்பகை - பண்டைப் பழவினை. பரிவு - துன்பம்; எங்கெழிலென் ஞாயிறு - (திருவெம்பாவை - 19). திருவாசக ஆட்சி போற்றப்பட்டது. உலக நிலைபற்றிய எந்தக் கவலையும் இல்லோம் என்பது கருத்து. எளியோம் அல்லோம் - "இறுமாந் திருப்பன் கொலோ" (திருவங்கமாலை); "சிந்தையார்க் குள்ள செருக்கு" (அற் - அந் - 79) முதலியனவும், மறுமாற்றத் திருத்தாண்டகக் கருத்தும் காண்க. செம்பவள வண்ணர் என்பது மேனியையும், செங்குன்ற வண்ணர் என்பது உருவையும், செவ்வான வண்ணர் என்பது நிறத்தையும் குறிப்பன.- (3) இப்பாட்டு இறைவர் ஆன்மாக்களை உண்ணின்று இயக்கியும் காட்டியும் உபகரித்து நிற்கும் அருட்டன்மையை விளங்க உபதேசிக்கும் அரும்பாட்டு. ஆட்டுவித்தல் - அடக்குவித்தல் - இவை உலக நிலைபற்றிய உயிரின் |