முயற்சியை எழுவித்தலும் அடக்குதலும் குறித்தன; ஓட்டுவித்தல் - உருகுவித்தல் - இவை அவ்வாறு அடங்கியபின் அதன் பயனாக, ஆணவமல இருளின் வலிமையை மெலியச் செய்தலும், சிவத்துவம் விளங்கச் செய்வித்தலும் குறித்தன; ஓட்டுவித்தல் - ஒற்றிரட்டித்தலாற் பெற்ற பிறவினைப் பொருள், விவ்விகுதியால் மேலும் வலிமை பெற்றது; ஆணவ வலிமையை நீக்கும் அருமை குறித்தது; பாட்டுவித்தல் - பணிவித்தல் - என்பன அவ்வாறு சிவன்பாலன்பு விளங்கப் பெற்றதனால் அவனைப் பாடுதல் - பணிதல் என்ற சாதனங்களிற் புகுவிக்கப் பெறுதல் குறித்தன; "அவனருளாலே அவன்றாள் வணங்கி" (திருவாசகம்). காட்வித்தல் - அருள் கைகூடச்செய்து விளக்குதல். ஆரொருவர் ஆடாதாரே - என்பது முதலிய எதிர்மறை வினாக்கள் ஒருவருமிலர் என்ற உறுதிப் பொருள் குறித்தன. காட்டாக்கால் காண்பாரார் என்ற எதிர்மறை வினா அவ்வுறுதியை மேலும் வலியுறுத்திற்று. - (4) நற்பதத்தார் - சிவநெறி நிற்போர்; நற்பதம் - அடையப்படும் நிலை. சொற்பதம் - வேதாந்தம்; கற்பகம் - உருவகம்.- (5) பருக்கு - மிக; திருக்கோயில் - சிவபெருமான் கோயில்; பல தளிகள் - சிவனாணையிலமர்ந்து தொழிலியற்றும் பிற தெய்வங்களின் கோட்டங்கள். "நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப், பதிவாழ் சதுக்கத்துப் பூத மீறாக, வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை, யாற்றி மரபி னறிந்தோர் செய்யுமின்" (மணிமேகலை - கா - 54 - 57); "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேளணிதிகழ் கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும், நீல மேனி நெடியோன் கோயிலும், மாலை வெகுண்டை மன்னவன் கோயிலும்" (சிலப் - 5 - 169 - 174); வெண் சங்க மூதுதல் - வழிபாட்டு முறைகளுள் ஒன்று. "விண்டவான்சங்கம்விம்மவாய் வைத்திலர்" (இலிங் - குறுந் - 10). வெண்கொடி - நகரச் சிறப்பாகிய மங்கலப் பொருள்; புண்ணியமும் புகழும் குறிக்கும். "மீது, சோதி வெண் கொடிக ளாடுஞ் சுடர்நெடு மறுகு" (474); அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணுதல் - புதிதின் மலர்ந்த பூக்களை எடுத்துச் சிவனடியில் இட்டுப் பூசித்த பின்பு உணவு கொள்ளல் வேண்டுமென்ற நியதி. "உண்பதன்முன் மலர் பறித்திட்டு உண்ணா ராகில்" (6) என்பதும் இது. அருப்போடு மலர் - அரும்பின் தன்மையுடைய பூவையும் மலர்ந்த பூவையும். ஊர் - மக்கள் வாழுமிடம் என்பதும், அடவிகாடு - சுடுகாடு என்பதும் குறிப்பு.- (6) அருநோய்கள் கெட வெண்ணிறணிதல் "ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு" (பிள் - தேவா). அருநோய் - பிறவி. அளி - சிவனிடத்தன்பு. இறத்தலும் பிறத்தலும் சாதலும் என்றிதுவே தொழிலாகி என்பது. "இவர்போ யவராய் அவர்போ யிவராய் இதுவே தெழிலாய்" (திருப்புகழ்).- (7) நின்னாவார் - நின்போலவார் - ஒப்பார். நீயேயானாய் - "ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றேபதி" (சிவஞான போதம்). - (8) ஆர்த்தல் - கட்டுதல். தீர்த்தம் - தூய்மை. இப்பாட்டு, எப்போதும் தமது சிறுமையினையும் தம் பிழைபொறுத்து ஆண்ட இறைவரது பெருமையினையும் எண்ணி எண்ணி நாயனார் பலகாலும் பரிவு கூர்ந்த கருத்து.-(9) நல்லார் - அடியார். "நல்லாரை நன்மை யறிவாய் நீயே" (தாண்). இலம் - வறுமை. - (10) மங்குவார் - அழிந்துபோகும் தன்மையுடையோர். சங்கநிதி - பதுமநிதி - குபேரனிடம் உள்ள ஒன்பது நிதிகளுள் சிறந்தவை; முறையே சங்க வடிவமாயும் தாமரை வடிவமாயும் அமைந்து, எடுக்க எடுக்கக் குறையாதபடி தனம் கொடுப்பவை. மாதேவர்க் கேகாந்த ரல்லராகில் - என்று, மதியாமைக்குக் காரணம் பின்வைத்தது உறுதிப்பொருட்டு. ஏகாந்தர் - ஒன்றுபட்ட அன்புடையோர். தொழு நோய் - பெருநோய் - குறை நோய். ஆவுரித்தல் - தின்னல் - உழலுதல் - மாபாதகங்களில் ஒன்றாகிய புலைமையின் பகுதிகள். வணங்குதல் - |