1661. | திருஞான மாமுனிவ ரரசிருந்த பூந்துருத்திக் கருகாக வெழுந்தருளி "யெங்குற்றா ரப்ப"ரென வுருகாநின் "றும்மடியே னும்மடிக டாங்கிவரும் பெருவாழ்வு வந்தெய்தப் பெற்றிங்குற் றே"னென்றார். |
396 (இ-ள்.) வெளிப்படை. திருஞானப் பெருமுனிவராகிய பிள்ளையார், திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளியிருந்த திருப்பூந்துருத்திக்கு அருகாக எழுந்தருளிச், (சிவிகையின் மேலிருந்தபடியே) "அப்பர் எங்குற்றார்?" என்று வினாவ, மன மிக வுருகி, "உம்முடைய அடியேன் உமது திருவடிகளைத் தாங்கும் பெருவாழ்வு வந்து கிடைக்கப்பெற்று இங்கு உற்றேன்" என்று (சிவிகையைத் தாங்கி வரும் அந்நிலையினின்று) மொழிந்தருளினார். (வி-ரை.) திருஞான மாமுனிவர் - "மறை ஞான ஞான முனிவன்" ("வேயுறு தோளி" - 11) என்ற திருப்பதிகத்தின் ஆட்சிபோற்றப்பட்டது. திருமுறைக் காட்டினின்றும் நாயனாரிடத்து விடைகொண்டு பிள்ளையார் பிரிந்து போந்தபோது அருளிய பதிகத்திற் றம்மைக் கூறிய குறிப்பினையே, அதன்பின் அவரைச் சந்தித்தபோது தொடர்ந்து நினைவுபெறும் பொருட்டு இத்தன்மையாற் கூறினார். மறைஞான ஞானமுனிவன - என்ற தேவாரக் கருத்தினைத் திருஞானமா முனிவர் என்று உரைகூறிய திறமும் காண்க. பிள்ளையார், ஞானமா முனிவராம் தன்மைபற்றி "வம்பறாவரிவண்டு" என்று திருத்தொண்டத்தொகைப் பாட்டின் கீழ் எடுத்துக் காட்டிய திருவாக்குக்களால் அறிக. அரசு - ஆளுடைய அரசுகள்; நாயனார். எங்குற்றார் அப்பர் - வினாவாகிய வினைமுற்று முன்வந்தது ஆர்வமிகுதி குறித்தது. அப்பர் - பிள்ளையார் தாமே முதலில் அழைத்த அப்பெயர். உருகா நின்று - பிள்ளையார் திருவுள்ளத்திற் றம்மைக்கொண்ட அன்பின் மிகுதியைக் கண்டு, நாயனாரது உள்ளம் உருகிற்று. "உம்மடியேன்........எய்தப் பெற்று" - நாயனாரது மனநிலை. திருஞானசம்பந்தர் - திருஞான முனிவரா சிருந்ததிருப் பூந்துருத்திப் - வந்தெனப் பெற்றுயர்ந்தேன் - என்பனவும் பாடங்கள். 396 1662. | பிள்ளையா ரதுகேளாப் பெருகுவிரை வுடனிழிந்தே யுள்ளமிகு பதைப்பெய்தி யுடையவர சினைவணங்க, வள்ளலார் வாகீச ரவர்வணங்கா முன்வணங்கத், துள்ளுமான் மறிக்கரத்தார் தொண்டரெலாந் தொழுதார்த்தார். |
(இ-ள்.) வெளிப்படை. ஆளுடைய பிள்ளையார் அம்மொழிகளைக் கேட்டவுடனே, மிகுந்த விரைவோடு கீழே இழிந்தருளித், திருவுள்ளத்தில் அச்சத்துடன் மிகுந்த பதைப்பினை அடைந்து ஆளுடைய அரசுகளை வணங்க, வள்ளலாராகிய வாகீசத் திருவடிகளும் அவர் வணங்குமுன் தாம் அவரை வணங்க, அவ்வருள் நிகழ்ச்சியைக் காணும் பேறுபெற்ற, துள்ளும் மானேந்திய கையினையுடைய சிவபெருமானது அடியவர்கள் எல்லாரும் தொழுது அரவோசை முழக்கி ஆர்த்தனர். (வி-ரை.) பெருகு விரைவுடன் - அப்பர் சிவிகை தாங்கி வரத், தாம் ஒரு கணமும் மேலெழுந்தருளி யிருத்தல் பிழையாமென்று கருதியதே மிக விரைவுடன் இழிந்தமைக்குக் காரணம். |