இழிந்ததே - இழிதல் - கதுமெனக் கீழிறங்குதல். அப்பர் சிவிகை தாங்கத் தாம் மேலிருந்தமை இழிவென்று கருதிய குறிப்பும் காண்க. பதைப்பு - தகுதியில்லாக் காரிய நிகழ்வாயினமையால் அச்சம்வர அதனால் மனம் பதைத்தது. "அவ்வார்த்தை கேட்டஞ்சி யவனியின்மே லிழிந்தருளி (திருஞான - புரா . 936.) அரசினை - முன், தம்மைப் பிள்ளையாகவும் அரசை அப்பராகவும் கருதிய பிள்ளையார், இங்கு அப்பரை அரசராகவும் தம்மை அவர்கீழ் உள்ள குடியாகவும் கருதிப் பணிந்தனர் என்பது தொனி. வள்ளலார் - அவர் வணங்கா முன் வணங்கும்படி தம்மையே அவருக்கு ஒப்புவித்த செயலும், அவரது சிவிகை தாங்கும் நிலையில் தம்மை வைத்து ஒழுகிய பணிவும் கருதி வள்ளலார் என்றார். திருஞான புரா - 936 பார்க்க. தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் - அடிமைத் திறங்களின் வெளிபபாடு கண்டுய்ந்தமையால் இருவரையும் தொழுதனர். (திருஞான - புரா - 937). அது கொளா - என்பதும் பாடம். 397 1663. | கழுமலக்கோன் றிருநாவுக் கரசருடன் கலந்தருளிச் செழுமதியந் தவழ்சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின் மழுவினொடு மானேந்துந் திருக்கரத்தார் மலர்த்தாள்கள் தொழுதுருகி யின்புற்றுத் துதிசெய்தங் குடனிருந்தார். |
398 (இ-ள்.) வெளிப்படை. சீகாழித் தலைவராகிய ஆளுடைய பிள்ளையார் திருநாவுக்கரச நாயனாருடன் கலந்தருளிச், சந்திரன் தவழும் செழிப்புடைய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்துருத்தித் தலத்தில் எழுந்தருளிய மழுவினொடு மானை ஏந்தும் திருக்கைகளையுடைய சிவபெருமானுடைய மலர்ப் பாதங்களைத் தொழுது மனமுருகி யின்பமடைந்து தோத்திரங்கள் செய்து அத்திருத்தலத்தில் உடனெழுந்தருளியிருந்தார். (வி-ரை.) உடன் கலந்தருளி - ஆளுடைய பிள்ளையார் அப்பரை நோக்கி வந்தாரும், அப்பர் அங்கு இருந்தாரு மாதலின், உடன் என்ற உருபைத் திருநாவுக்கரசர் என்பதுடன் சார்த்தி ஓதினார். அன்றியும் ஆளுடைய பிள்ளையார் திருவுள்ளக் கருத்து அதுவாதலும் காண்க. கழுமலக்கோன் - அரசருடன் - கலந்தருளி - அங்கு - உடனிருந்தார் - என்று முடித்த கருத்துமிது. தொழுது - உருகி - இன்புற்று - துதிசெய்து - உடனிருந்தார் - தொழுதலால் உருகுதலும், அதனால் இன்ப முறுதலும், அதன் பயனாகத் துதிசெய்தலும், அவ்வாறு இறைவரை வழிபடுதலின் முடிபாக அடியரோடிருத்தலும் கூடும் வகை குறிப்பதாக முடித்து வைத்த நயம் காண்க. "கும்பிட்ட பயன்" (திருஞான - புரா - 1022) என்ற கருத்தும், சிவஞான போதம் பன்னிரண்டாஞ் சூத்திரக் கருத்தும் ஈண்டுக் கருதுக. உடனிருந்தார் - இப்பாட்டின் கருத்தைத் திருஞானசம்பந்த நாயனார் புராணம் 938 - 939 - 940 - பாட்டுக்களில் விரித்துரைப்பார். அவற்றை ஈண்டு வைத்துக் கண்டுகொள்க. "உடன்மகிழ்ந்தங் கினிதிருந்தார்" (மேற்படி 940). 398 1664. | வல்லமணர் தமைவாதில் வென்றதுவும், வழுதிபாற் புல்லியகூ னிமிர்த்ததுவுங், தண்பொருந்தப் புனனாட்டில் |
|