| | எல்லையிலாத் திருநீறு வளர்த்ததுவு, மிருந்தவத்தோர் சொல்லவது கேட்டுவந்தார் தூயபுகழ் வாகீசர். |
399 (இ-ள்.) வெளிப்படை.. கொடிய மன வலிமையினையுடைய சமணர்களை வாதில் வென்றதனையும், பாண்டியனிடத்து முன்பு பொருந்தியிருந்த கூனை நிமிர்ந்தருளியதனையும், குளிர்ந்த தாம்பிரபன்னிய யாற்றின் நீர் பாயும் பாண்டி நாட்டில் அளவில்லாத சிறப்புடைய திருநீற்றினைப் பெருகச் செய்ததனையும், பெருந் தவத்தினையுடைய ஆளுடைய பிள்ளையார் எடுத்துச் சொல்ல அதனைத் தூய புகழினையுடைய வாகீச மூர்த்திகள் கேட்டுத் திருவுள்ள மகிழ்ந்தனர். (வி-ரை.) வல் அமணர் - வலிமை - மன வலிமை இங்குத் தீய தன்மை பற்றி நின்றது. தீமையாவது பாண்டியனை மயக்கியமையும், சொல்லாமை என்ற நன்மையைக் கரவாக வெளியிற் காட்டிக்கொண்டும் அடியார்களிருந்த திருமடத்தில் தீ வைத்துக் கொலை சூழ்ந்தமையும் பிறவுமாம். வென்றதுவும் - நிமிர்த்ததுவும் - வளர்த்ததுவும் - என்ற வினைகளுக்குத் தாம் என்ற எழுவாய் தொக்கு நின்றது. இம்மூன்று செயலாலும் பாண்டி நாட்டில் ஆளுடைய பிள்ளையார் செய்தருளிய அருள் நிகழ்ச்சிகள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்ட நயம் காண்க. "புகுந்த தெல்லாம்" என்று இதனைப் பின்னர்ப் பின்னுந் தொகுத்துக் கூறுதலும் காண்க. (திருஞான - புரா - 941). இருந் தவத்தோர் - ஆளுடைய பிள்ளையார். அவர் முன்னைப் பெருந்தவமுடையராதலின் இப்பெருஞ் செயல்கள் நிகழ்த்த ஏதுவாயிற்று என்பது குறிப்பு. பிள்ளையார் இதற்கென்றே அவதரித்த குறிப்பும்பெற வைத்தார். "முற்செய் தவத்தான்" , "மேற் செய்துழி" என்ற சிவஞான போதம் (8 - 1) காண்க. வென்றது - நிமிர்த்தது - வளர்த்தது என்ற செயல்களுக்கு வினைமுதலாகித் தோன்றாத் துணையாயும் உடனிருந்தும் இயற்றுவித்தது இறைவரது திருவருளேயாம் என்ற குறிப்புப்படத் தாம் என்ற எழுவாய் தோன்றாது தொக வைத்தார். பொருத்தம் - தாமிரபன்னியாறு. பொருந்தம் என்பது பொருநை என மருவி வழங்கும். "தண்பொருந்தம்" (969). தண்பொருத்தம் புனல் நாட்டில் - வேறு நாட்டில் உதித்துச் சோழ நாட்டிற் பாய்ந்து வளப்படுத்தும் காவிரிபோலன்றிப், பொருகையாறு, பாண்டி நாட்டிலே பிறந்து அந்நாட்டையே வளம்செய்வது என்பது குறிப்பு. "நீள்கரை மண் பொருந் தண்பொருந்தம், பாயும் கடலும்படு நீர்மை பணித்த முத்தம்" (969) என்றவிடத்தும் இருக்கருத்தே உய்த்துணர வைத்தமை காண்க. எல்லையிலாத் திருநீறு - இறைவரது பெருமை போலத் திருநீற்றின் பெருமையும் அளக்கலாகாது என்பது. இருந்தவத்தோர் சொல்ல - திருஞானமுனிவர் சொல்ல. "போக்கும் வரவும் வினவப் புகுந்ததெல்லாந், தூக்கின் றமிழ்விரகர் சொல்லிறந்த ஞானமறை, தேக்குந் திருவாயாற் செப்பி யருள்செய்தார்" (திருஞான - புரா - 941) கேட்டு உவந்தார் - சமணர்களது மாயைகளையும் தீமைகளையும் எண்ணிப் பிள்ளையாரைப் பாண்டி நாட்டுக் கெழுந்தருளத் தகாதென்று (1552) தாம் அஞ்சி விலக்கிய செயலை நினைந்தனர்; அவ்வஞ்சங்களை எல்லாம் வென்று மீண்டமை கேட்டனர்; அதனுடன் அரசனை நன்னெறிப்படுத்தி நீறடுவித்தமையும், பாண்டி நாட்டில் அமண் ஆசு அறுத்து நீறு பெருக்கியமையும் கேட்டனர்; இவ்வாறு பிள்ளையார் தீங்கின்றி மீண்டமையும் சைவம் பெருகியமையுமாம் உவகைக்குக் காரணம் என்க. |