முன் இரவினிற் சென்று விடியற்காலையில் திருவதிகையினை அணைந்தனன் என்பதும் பூங்கமழ் என்றதனால் உணர்த்தப்பட்டது. வைகறையில் எழுந்து குளித்துச் சென்று விடியுமுன் மலர்களைப் பறித்துக்கொள்ளுதல் வேண்டுமென்பது விதி. "புலவர்தன்முன்" (1309) என்றதும், 559, 1023-ல் உரைத்தவையும், பிறவும் இங்கு நினைவுகூர்தற்பாலன. புறம்பு அணைய - என்றதனால் திலகவதியம்மையார் மலர்களைப் பறித்தபின் நந்தனவனத்தினின்றும் வெளிப்போந்த நேரம் என்பது கருதப்படும்; அதற்கு முன்பாயின் அத்திருப்பணி செய்வார் சிவனைநினைந்து திருவைந்தெழுத்தினை எண்ணிக்கொண்டு செல்வாராதலின் பிறரொருவரிடமும் வாய்பேசார் என்பது மரபு. உமக்கு இளையார் - உமக்குத் தம்பியார். "இப்போது பரசமயத்தினிடை வீழ்ந்தவராயினும், இனி "உய்யும்படி" நீர் அருள் செய்வீராயின், சிவனடிமைத் திறத்தில் உமக்கு அவர் இளைக்கமாட்டார்; ஆதலின் "உய்யும்படியை அருள்வீர்" என்ற குறிப்புப்பெற இளையார் என்ற நயமும் காண்க. ஏவலினால் வந்தது - வந்தது - வந்த இச்செய்தி இளையார் ஏவலினால் நிகழ்வதாயிற்று. வந்தேன் என்னாது வந்தது என்று கூறுதல் பணிவு காட்டுவதோர் முன்னாள் மரபு வழக்கு. "முடிசூடி யருளுமரபால் வந்ததென" (கழறிற் - புரா - 12) என்பது காண்க. தீங்குளவோ? என வினவ - நலமா என்று வினவுதல் மரபாயிருக்க இவ்வாறு கேட்டது என்னையோ? எனின், "இறைவர் சூலைமடுத் தாள்வம்" (1313) என்றருளியபடி சூலைநோயாகிய அத்தீங்கினையே இறைவரருள் பெறும் நலமாகக் கருதினாராதலின் என்பது. அத்தீமையினையே நன்மையாகக் கொண்டனர் என்க. "திருவுடையீ ருங்கள் பாற் றீங்குளதோ? எனவினவ" (திருஞான - புரா - 731) என்ற வரலாறும் இங்கு நினைவு கூர்தற்பாலது. மற்று அவனுவம் - மற்று - அசை. புறத்தணைய - என்பதும் பாடம். 59 1322. (வி-ரை.) சூலைநோய் கொல்லாது குடர்முடக்கித் தீராமை என்க. "தீங்குளவோ?" என்றார்க்கு, "ஆம்! தீங்கு உளது. அது கொடுஞ்சூலை; ஆயின் அதன் அளவு உயிர்போக்கும் அவ்வளவு நிகழவில்லை" என முன்னர் அறிவித்து, அவரது மனக்கவலையினைத் தணிவித்து மேலே சொல்லவேண்டும் எனக் கருதிக் கொல்லாது சூலைநோய் என்று தொடங்கினான். எமது திருநாவுக்கரசர் பெருமானை ஊட்டும் திருப்பணி செய்யும் பேறு வாய்க்கப் பெற்றவனது சொற்றிறமன்றோ? "குடரோடு தொடக்கி முடக்கியிட" (தேவா). தீராமை - தீராமையால். எவ்வாற்றானும் தீராது நின்றபடியால். எல்லாரும் கைவிட்டார் - கைவிடாது காக்கவல்லவர் என்று சார்ந்திருந்த எல்லா மணி மந்திர மருந்து நூல் வல்லவரும். எல்லார் - தேவர் என்று கொண்டு சமணக்குருமார்களைத் தேவர் என்றழைக்கும் மரபு வழக்குப்படிக் கூறினானாக உரைத்தலுமாம். எல் - இரவு எனவும் பொருள்படுமாதலின் அவர்களது விளக்கமென்பது உண்மையில் இருளேயாவது என்னும் பொருள் தரும்படி, எல்லார் இரவுபோல்பவர் என்ற குறிப்பும் இரட்டுற மொழிதலாற் பெறவைத்த நயம் காண்க. "இருட்குழாம் செல்வதுபோல" (1349), "இழுது மெய்யிருட் கிருளென வீண்டினர்" (திருஞான - புரா - 678) முதலியவை காண்க. இது செயல் - இந்தச் செய்தியினை யியம்பி. இரண்டனுருபு தொக்கது. செயல் - செய்கை - நிகழ்ச்சி. என் முன்பிறந்த நல்லாள் - முன் பிறந்தாராதலின் அவார் தன்மையும் முன்னிற்கத் தக்கது; அவரும் என்போ லுழலாது நல்லார் என்பதும், யான்பின் |