பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்683

 

நாயனார் சென்ற வழி, இந்நாட் காணப்படும் தஞ்சை - புதுக்கோட்டை - திருமயம் - திருப்புத்தூர் செல்லும் கற்சாலை வழி போலும் என்பது கருதப்படும்.

காண்டகைய திருப்புத்தூர் பணிந்தேத்தி - "பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற புனக்காந்தன் கைகாட்டக் கண்டு வண்டு, தென்காட்டுஞ் செழும் புறவிற் றிருப்புத்தூர்", "திருந்துவயல் புடைதழுவு"; "தேராரு நெடுவீதி"; "திருமருவு பொழில்புடைசூழ்" என்பன முதலாக அழகுபெற நாயனார் கண்டு போற்ற நின்ற குறிப்புப்படக் காண் தகைய என்றார்.

பணிந்தேத்தி - விருப்பமிக்குச் செல்கின்றாராதலின் திருப்பூந்துருத்திக்கும் திருப்புத்தூருக்கும் இடையில் வேறெங்கும் தங்கிச் சென்றமை கூறாராயினர். ஏத்தி - திருத்தாண்டகப் பதிகத்தாற் போற்றி. பதிகக்குறிப்புப் பார்க்க.

மதியக்கதிர் தீண்டு மதில் என்று கூட்டுக. "மதி, தொடுங்குன்றை மதின்மதுரைத் தொன்னகர்வந் தணைகின்றார்" (திருஞான - புரா - 630) என்று இக்கருத்தை ஆசிரியர் பின்னர் விளக்குவது காண்க. பாண்டியர் மரபு மதிக்குலமாதலின் குலமுதல்வனாற் கண்காணிக்கப் படுவதென்பது குறிப்பது. மதிலின் உயர்ச்சியும் அதில் அமைந்த கற்களின் குளிர்ச்சியும் குறித்தது. இவ்வாறன்றிக் கதிரும் மதியும் என்று உம்மைத் தொகையாகக் கொண்டு சூரியனும் சந்திரனும் தீண்டு என்று உரை கொண்டனர் முன் உரைகாரர்கள்.

மதில் - "நீள் கடிம்மதில்" என்று ஆளுடைய பிள்ளையாரது திருவாக்கினாற் போற்றப்பட்ட சிறப்புக் குறிக்கவும் மதிலை விதந்து கூறினார்.

மதுரைத் திருவாலவாய் - மதுரை என்கின்ற திருவாலவாய்த் திருநகரம். மதுரையின் கண் உள்ள திருவாலவாய் என்னும் கோயில் என்று உரைத்தனர் ஆறுமுகத்தம்பிரானார். "அங்கணர் கோயில்" என்று மேல்வரும் பாட்டில் உரைப்பதனால் இங்கு நகரம் என்பதே பொருத்தமுடையதாகும்.

402

திருப்புத்தூர்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

மின்காட்டுங் கொடிமருங்கு லுமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவிற் றிருப்புத் தூரிற்
றிருத்தருளியான் காணவனென் சிந்தை யானே.

3

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- புாந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ்தக்கோன்; புவன மேழும் விரிந்து பல வுயிராகி விளங்கினான்; புலவனாய்ச் சங்கம் ஏறித் தருமிக்குக் கனகக்கிழி யருளினான்; பெரும்பற்றப்புலியூர் மன்றாடி; அறிவரிய நுண்பொருள்களாயினான்; ஆயிரம் பேருடையான்; கொடுஞ்சினத்தை யடங்கச்செற்று ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக்கொண்ட பெற்றியன் என்றிவ்வாறு பலவாற்றாலும் அறியப்படுகின்ற திருப்புத்தூரில் திருத்தளியான் என் சிந்தையான்.

பதிகப் பாட்டுக்குறிப்பு :- (1) புரிந்து - இடைவிடாது சொல்லி. "புகழ்புரிந்தில்லிலோர்" (குறள்). தவம்புரிந்து என்றலுமாம். புவனமேழும் விரிந்து - தனது